சென்னை: இந்தியாவில் ‘போக்சோ’ போன்ற கடுமையான சட்டங்கள் இருந்தும்,பெண்களுக்கு எதிரான பாலியல் வல்லுறவு சம்பவங்கள் நாள்தோறும் அதிகரித்து வருவதற்கு காரணம் சட்டம் பற்றிய சரியான புரிதல் இல்லாததே என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். அதேநேரம் ‘பாலியல் கல்வி தான் இதற்கு ஒரே தீர்வு’ என்கிறார் உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.விமலா.
கடந்த 1972-ம் ஆண்டு இந்தியாவில் சிறைக்காவலில் இருந்த மதுரா என்ற பழங்குடியினப் பெண், மகாராஷ்டிராவின் கட்சிரோலி மாவட்டத்தில் காவல்நிலைய வளாகத்தில் 2 போலீஸாரால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டார். குற்றம்சாட்டப்பட்டவர்களை உச்ச நீதிமன்றம் விடுவித்த பிறகு, பொதுமக்கள் நடத்திய போராட்டத்தால் குற்றவியல் சட்டத்தில் பல்வேறு திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன.
போக்சோ சட்டம் 2012
அதேபோல கடந்த 2012-ம்ஆண்டு டெல்லியில் ஓடும் பேருந்தில்நடந்த நிர்பயா பாலியல் வல்லுறவு சம்பவத்துக்குப் பிறகே பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் ‘போக்சோ சட்டம் -2012’ பற்றிய விழிப்புணர்வு அதிகம் ஏற்பட்டது.
» கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மருத்துவமனையில் திடீர் அனுமதி
» ‘அரிதான மருந்துகளை போதைக்கு பயன்படுத்தக் கூடாது’ - உயர் நீதிமன்றம் கருத்து
ஆனால் நிர்பயா வழக்கில் கைதான 4 குற்றவாளிகளும் தூக்கிலிடப்பட்ட பிறகும், இந்தியாவில் பாலியல் வல்லுறவு சம்பவங்கள் குறைந்துள்ளதா என்றால் கேள்விக்குறியே மிஞ்சுகிறது.
தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் கணக்கெடுப்பின்படி இந்தியாவில் தினமும் பெண்களுக்கு எதிராக 95 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறி வருவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதுவே குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை தினமும் 100-ஐத் தாண்டுகிறது.
கடந்த 2020-ல் மட்டும் நாடு முழுவதும் 73 ஆயிரத்து 721 பெண்கள் கடத்தப்பட்டுள்ளதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 47 ஆயிரத்து 876 பேர் சிறுமிகள். 25 ஆயிரத்து 845 பேர் வளரிளம் பருவத்தினர்.
அதேபோல் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்காக கடந்த 2020-ல் ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 531 வழக்குகள் பதிவாகியுள்ளன. அதில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வல்லுறவுக்காக மட்டும் 38.8 சதவீத வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கடந்த 2020 கணக்கெடுப்பின்படி நீதிமன்றங்களில் விசாரணையில் உள்ள ஒரு லட்சத்து 69 ஆயிரத்து 558 பாலியல் வல்லுறவு வழக்குகளில் 3 ஆயிரத்து 814 பேருக்கு மட்டுமே சட்டரீதியாக தண்டனை பெற்று கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டரை வயது பெண் குழந்தைக்கு எதிரான ஒரு பாலியல் வழக்கில் ‘செமன்’ என குறிப்பிடுவதற்குப் பதிலாக ‘செம்மண்’ என போலீஸார் ஆங்கிலத்தில் தவறுதலாக ஆவணங்களில் குறிப்பிட்டதால், அதைப் பயன்படுத்தி குற்றவாளி தண்டனையில் இருந்து தப்ப, அந்தத் தவறை உயர் நீதிமன்றம் சரிசெய்து குற்றவாளிக்கு சிறை தண்டனை விதித்தது.
ஒருவேளை அந்த பாதிக்கப்பட்ட குழந்தையின் தாயார் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்காவிட்டால் அந்த குற்றவாளிக்கு தண்டனை கிடைத்து இருக்காது. இதுபோல சட்டத்தில் உள்ள முரண்பாடுகள் அவ்வப்போது குற்றவாளிகளுக்கு சாதகமாகிவிடுகிறது.
இந்தியாவில் சட்டங்கள் கடுமையாக இருந்தும், அதற்கான உள்கட்டமைப்புகள் இருந்தும் சட்டம் பற்றிய புரிதல் படித்தவர்கள் மத்தியிலும் சரியாக இல்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.விமலா கூறியதாவது:
பொதுமக்களிடம், சட்டம் பற்றிய புரிதல் இல்லை என ஒரேயடியாகக் கூறிவிட முடியாது. இதுபோன்ற வழக்குகளில் அரசு அதிகாரிகளின் பங்களிப்பு என்ன என்பதைப் புரிந்து செயல்பட வேண்டும். 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தொடர்பான வழக்கை விசாரிப்பதற்கும், 18 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் தொடர்பான வழக்கை விசாரிப்பதற்கும் நீதிபதிகளுக்கு நிறைய நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன.
அடிப்படையிலேயே தவறு
மற்ற வழக்குகளைப் போல, பாலியல் வழக்குகளில் அரசு மருத்துவர்கள், போலீஸ் அதிகாரிகள் செயல்படக் கூடாது. ஆனால் போக்சோ சட்டம் ஜீரோ முதல் 18 வயது பெண்கள் வரை அனைவரையும் ஒன்றாக பாவிக்கிறது. உலகமே என்னவென்று தெரியாத ஜீரோ வயதையும், உலகத்தை அறிந்து கொள்ளும் 18 வயதையும் இந்தச் சட்டம் ஒன்றுதான் எனக் கூறுகிறது. அது அடிப்படையிலேயே தவறானது.
பெண்களுக்கு 7 பருவங்கள் உண்டு. ஒவ்வொரு பருவத்துக்கும் ஒவ்வொரு மாதிரியான புரிதல்கள் உண்டு. 16 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட இளம்பெண்கள் தொடர்பான பாலியல் வழக்குகளில் தான் குற்றவாளிகள் தண்டனையில் இருந்து எளிதாகத் தப்பித்து விடுகின்றனர். இதற்கு பாதிக்கப்பட்ட பெண்கள் அளிக்கும் பிறழ்சாட்சியங்களே முக்கிய காரணம். இறுதியில் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் அநாதை இல்லங்களில் வளரும் அவலம் ஏற்படுகிறது.
எனவே 16 முதல் 18 வயதுக்கு இடைப்பட்ட வளரிளம் பருவத்தினருக்கு ‘பாலியல் கல்வி’ குறித்த விழிப்புணர்வு மிகவும் அவசியமானது. மனதளவில் மாற்றத்தை ஏற்படுத்தும் பாலியல் கல்வி மட்டுமே இதற்கு ஒரே தீர்வு. இந்த விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் கவனம் செலுத்தினாலே குற்ற வழக்குகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிடும். இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
16 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
21 hours ago
தமிழகம்
21 hours ago