சிவகங்கை விபத்தில் சாலையில் சிதறி கிடந்த கண்ணாடி துண்டுகளை அகற்றிய சிறுவன்: மனித நேய செயல்பாட்டுக்கு பலரும் பாராட்டு

By செய்திப்பிரிவு

சிவகங்கை: சிவகங்கை பேருந்து நிலையம் அருகே விபத்தில் சாலையில் சிதறிக் கிடந்த கண்ணாடி துண்டுகளை பாதசாரிகள் காலில் குத்திவிடும் என அக்கறையோடு அகற்றிய ஊசி, பாசி விற்கும் சிறுவனை பலரும் பாராட்டினர்.

சிவகங்கை பேருந்து நிலையம் அருகே அண்மையில் அரசு பேருந்தும், காரும் மோதிக் கொண்டன. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால், கண்ணாடித் துண்டுகள் உடைந்து சாலையில் சிதறிக் கிடந்தன.

அப்போது அப்பகுதியில் ஊசி, பாசி விற்றுக் கொண்டிருந்த நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த சிறுவன் அருகேயுள்ள கடையில் இருந்த துடப்பத்தை எடுத்து வந்து கண்ணாடி துண்டுகளை கூட்டி சாலையோரம் தள்ளினார்.

முத்துபாண்டி.

அப்போது அவர் காலில் காலணி கூட இல்லை. இதை பார்த்த சிலர் மொபைலில் வீடியோ எடுத்து சமூக வலை தளங்களில் பதிவிட்டனர்.

பாதசாரிகள் காலை பதம் பார்த்து விடும் என மனிதாபிமானத்தோடு தன் காலில் காலணி இல்லாத நிலையிலும் ஏழைச் சிறுவன் செய்த மனிதநேயச் செயல்பாட்டை பலரும் பாராட்டினர்.

அச்சிறுவன் குறித்து விசாரித்த போது, அவர் முத்துப்பாண்டி(16). அரசு உதவி பெறும் பள்ளியில் 9-ம் வகுப்பு படிப்பதும், குடும்ப வறுமையால் பகுதி நேரமாக ஊசி, பாசி விற்பதும் தெரியவந்தது. அவரது தாயார் பச்சை குத்தும் தொழிலாளி. அவருக்கு மூன்று சகோதரிகள், ஒரு சகோதரர் உள்ளது தெரியவந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE