டாஸ்மாக் பார் உரிமத்துக்கான டெண்டரை இறுதி செய்ய தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

சென்னை: டாஸ்மாக் பார் உரிமத்துக்கான டெண்டர் நடைமுறையை தொடரலாம் என அனுமதி அளித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், வழக்கு முடியும் வரை டெண்டரை இறுதி செய்ய கூடாது என உத்தரவிட்டது.

டாஸ்மாக் மதுபானக் கடைகளின் அருகில் தின்பண்டங்கள் விற்பனை செய்வது, காலி மதுபான பாட்டில்களை சேகரிப்பது தொடர்பான பார் உரிமங்களுக்கு டெண்டர் விண்ணப்பங்களை வரவேற்று டாஸ்மாக் நிர்வாகம் கடந்த ஆக.2-ல் அறிவிப்பானை வெளியிட்டது.

தற்போது பார் உரிமம் பெற்று பார்களை நடத்தி வரும் திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட பார் உரிமதாரர்கள், கரோனா காலகட்டத்தில் பார்கள் சரியாக இயங்காததால் தங்களுக்கான உரிமத்தை நீட்டித்தரக்கோரியும், ஆக.2-ம் தேதி டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ள புதிய டெண்டர் அறிவிப்பாணைக்கு தடை கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகளைத் தொடர்ந்திருந்தனர்.

அதில், தற்போது பார்களை நடத்தி வரும் இடத்தை புதிதாக டெண்டர் எடுத்தவருக்கு வழங்க வேண்டுமென டாஸ்மாக் நிர்வாகம் நிர்பந்தித்து வருவதாகவும், நில உரிமையாளருடன் ஒப்பந்தம் செய்துள்ள தங்களை அவ்வாறு 3-வது நபர்களுக்கு அந்த இடத்தை தர எந்தவொரு உத்தரவையும் டாஸ்மாக் நிர்வாகம் பிறப்பிக்க முடியாது, என்றும் தெரிவித்திருந்தனர்.

அதையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், டாஸ்மாக் பார்களுக்கான டெண்டர் நடைமுறையைத் தொடரலாம் என்றும், ஆனால் இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கும் வரை டெண்டர்களை இறுதி செய்து வழங்கக்கூடாது என உத்தரவிட்டு விசாரணையை வரும் ஆக.30-க்கு தள்ளி வைத்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE