68-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஆசியாவின் மிக நீளமான மண் அணை பவானிசாகர்: சிறப்புகள் என்னென்ன?

By செய்திப்பிரிவு

ஆசியாவிலேயே மிக நீளமான மண் அணையான பவானிசாகர் அணை இன்று 68-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து 16 கிமீ தூரத்தில் பவானி மற்றும் மாயாறு இணையும் இடத்தில் பவானிசாகர் அணை அமைந்துள்ளது. ஆசியாவின் மிக நீளமான மண் அணை மற்றும் தமிழகத்தின் 2-வது பெரிய அணை என்ற பெருமையும், சிறப்பும் இந்த அணைக்கு உண்டு.

2.50 லட்சம் ஏக்கர் பயன்

பவானிசாகர் அணை கட்டுமானப் பணி கடந்த1948-ம் ஆண்டு தொடங்கி 1955-ம் ஆண்டில் நிறைவடைந்தது. ரூ.10.50 கோடி மதிப்பில் கட்டப்பட்ட அணையை கடந்த 1955-ம் ஆண்டு ஆகஸ்ட் 19-ம் தேதி அப்போதைய முதல்வர் காமராஜர் திறந்து வைத்தார்.

அணையில் 105 அடி வரை 32.8 டிஎம்சி தண்ணீரை தேக்கி வைக்க முடியும். இதன் நீர்ப்பிடிப்புப் பகுதி 1,621.5 சதுர மைலாகும். நீர்தேக்கத்தின் பரப்பளவு 30 சதுர மைல்களாகும். அணையின் மூலம் 2.50 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும், ஈரோடு மாநகராட்சி, சத்தியமங்கலம், கோபி, புளியம்பட்டி. பவானி ஆகிய நகராட்சிகள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட ஊராட்சி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது.

அணையில் உள்ள 2 நீர் மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் 16 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

‘டணாய்க்கன் கோட்டை’

இத்துடன், பவானிசாகர் அணைக்குள், ‘டணாய்க்கன் கோட்டை’ என்றழைக்கப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டை அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் மூழ்கியுள்ளது.

கோடையில் நீர்வற்றும்போது கோட்டை வெளியில் தெரியும். ஹொய்சாளர் ஆட்சிக்காலத்தில் படை தளபதியாக இருந்த பெருமாள் தண்டநாயக்கன் என்பவர் கி.பி. 1254-ம் ஆண்டு ஆற்று சமவெளியில் இக்கோட்டையைக் கட்டி ஆண்டு வந்தார். எனவே, அவரது பெயரில் தண்டநாயக்கன் கோட்டை என அழைக்கப்பட்டு வந்தது. நாளடைவில், ‘டணாய்க்கன் கோட்டை’ என மாறியது.

67 ஆண்டுகால சாதனை

அணை கட்டப்பட்டு 67 ஆண்டுகளில் 102 அடி நீர்மட்டத்தை 22 முறையும், 100 அடி நீர்மட்டத்தை 30 முறையும் எட்டியுள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை தொடர்ந்து 5 ஆண்டுகள் 100 அடியை எட்டியுள்ளது.

தமிழர்களின் கட்டிடக்கலை பெருமையை பறைசாற்றும் விதமாக முழுக்க முழுக்க இந்திய பொறியாளர்களின் முயற்சியில் உருவான பவானிசாகர் அணை இன்று 68-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE