முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி டானியா; சிகிச்சை முடிந்து விரைவில் வீடு திரும்புவார்: அமைச்சர் சா.மு.நாசர் தகவல்

By செய்திப்பிரிவு

திருவள்ளூர்: காஞ்சிபுரம் மாவட்டம்- ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள தண்டலம், தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுமி டானியாவை நேற்று பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் சந்தித்து, உடல் நலம் விசாரித்து அவருக்கு வழங்கப்படும் சிசிக்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

அப்போது, செய்தியாளர்களிடம் அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்ததாவது: சிறுமி டானியா, இரண்டரை லட்சம் நபர்களில் ஒருவருக்கு வரக்கூடிய அரிய வகை முக சிதைவு நோயால் தாக்கப்பட்டுள்ளார்.

தமிழக முதல்வர் உத்தரவின்படி, டானியாவுக்கு முதலுதவி சிகிச்சைகள் மற்றும் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. டானியாவுக்கு ஓரிரு நாட்களில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்வதற்கான முழு முயற்சிகளை மருத்துவமனை நிர்வாகம் எடுத்துள்ளது. அதற்காக 9 மருத்துவ குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

நான், ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ்,மாதவரம் எம்.எல்.ஏ. சுதர்சனம் மூவரும் முதல்வர் உத்தரவின் அடிப்படையில் டானியாவை சந்தித்தோம். அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தோம். இத்தகைய செயல்பாடுகள் மூலம் டானியாவும், அவரது பெற்றோரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இன்னும் ஒரு வாரத்தில் டானியா சிகிச்சை முடிந்து வீடுதிரும்புவார். மேலும், டானியாவின் எதிர்கால படிப்புக்கும், அவரின் பெற்றோரின் வாழ்வாதாரம் சிறப்பாக அமைய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE