பாஜகவுடனான உறவு குறித்த முதல்வரின் கூற்றை மின் கட்டண விவகாரத்தில் செயல்படுத்த வேண்டும்: பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: பாஜகவுடன் சமரசம் செய்துகொள்ள மாட்டோம் என்று முதல்வர் கூறியதை, மின்கட்டண விவகாரத்தில் செயல்படுத்த வேண்டும்என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மத்திய பாஜக அரசின் நிர்ப்பந்தம் காரணமாக மின் கட்டணத்தை உயர்த்தக் கூடாது, மின் கட்டண உயர்வை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும், தேர்தல் வாக்குறுதிபடி மாதந்தோறும் மின் கணக்கீடு முறையை அமல்படுத்த வேண்டும் ஆகிய 3 கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சென்னை மாவட்ட குழுக்கள் சார்பாக நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை மின்வாரிய தலைமை அலுவலகம் முன்பு நடைபெற்றஇந்த ஆர்ப்பாட்டத்துக்கு, கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமை வகித்துப் பேசியதாவது: கரோனா பொதுமுடக்கம், வேலையின்மை போன்ற பல்வேறுகாரணங்களால் மக்கள் கடுமையான நெருக்கடியில் உள்ள நேரத்தில் மின்கட்டண உயர்வு குறித்த அறிவிப்பு அதிர்ச்சி அளிக்கிறது. இதைத் தவிர்க்குமாறு முதல்வரிடம் நேரில் வலியுறுத்தினோம்.

அதிமுக ஆட்சியில் புதிய மின் உற்பத்தி நிலையங்களை தொடங்கவில்லை; புனரமைக்கவும் இல்லை. உற்பத்தியை குறைத்து, தனியாரிடம் மின்சாரத்தை வாங்கி கொள்ளையடித்தார்கள். இதனை மாற்றியமைத்தால் வாரியத்துக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் லாபம் கிடைக்கும்.

தனியாரிடம் இருந்து ஒரு யூனிட்மின்சாரத்தை ரூ.1.50-க்கு கொள்முதல் செய்ய வாரியம் ஒப்பந்தம் செய்துள்ளது. அதை ரூ.3.58-ஆகவும், ரூ.3.50-க்கு வாங்குவதை ரூ.6.88-ஆகவும் உயர்த்தி ஒப்பந்தம் செய்யுமாறு மாநில மின்வாரியத்தை மத்திய அரசு கட்டாயப்படுத்துகிறது.

கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளை லாபம் பெற, கொள்முதல் விலையை உயர்த்த சொல்வது மக்களை வஞ்சிக்கும் செயல். மக்களுக்கு சலுகைகள் வழங்குவதால் ஏற்படும் இழப்பை ஈடுகட்ட மாநில அரசு, அதிக மானியத்தை வழங்க வேண்டும்.

மத்திய அரசின் நிர்ப்பந்தத்துக்கு பணிந்து, மின்கட்டணத்தை உயர்த்தினால் தமிழக அரசுக்குத்தான் அவப்பெயர் ஏற்படும். தமிழக அரசை மக்கள் விரோத அரசாக மாற்றுவதற்கான காய்களை மத்திய அரசு நகர்த்தி வருகிறது.

பாஜகவுடன் சமரசம் செய்து கொள்ள மாட்டோம் என்று முதல்வர் கூறியதை, மின்கட்டண விவகாரத்தில் செயல்படுத்த வேண்டும். நீட் தேர்வை எதிர்த்து போராடுவதைப்போல, மின்கட்டண விவகாரத்திலும் செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து, மின் கட்டண உயர்வை ரத்து செய்வது தொடர்பாக பாலகிருஷ்ணன், மின்வாரிய மேலாண் இயக்குநர் ராஜேஷ் லக்கானியை சந்தித்து மனு அளித்தார்.

இந்த சந்திப்பின்போது கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் ஜி.செல்வா, எல்.சுந்தரராஜன், ஆர்.வேல்முருகன், மாநிலக்குழு உறுப்பினர்கள் ஏ.பாக்கியம், எம்.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE