சுதந்திரப் போராட்ட வீரர்களை பெருமைப்படுத்தும் தொடர்: பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: இந்திய சுதந்திரத்தின் 75-வது ஆண்டு கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக, அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்கள் பற்றிய "ஸ்வராஜ்" என்னும் தலைப்பிலான தொலைக்காட்சித் தொடர், தூர்தர்ஷன் பொதிகையில் ஒளிபரப்பாக உள்ளது.

இந்தத் தொடர் வரும் 20-ம் தேதி முதல் 75 வாரங்களுக்கு தூர்தர்ஷன் பொதிகையில் சனிக்கிழமை தோறும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. மேலும், இந்த நிகழ்ச்சி திங்கள்கிழமை தோறும் பிற்பகல் 3 மணிக்கும், புதன்கிழமை மாலை 4 மணிக்கும், வெள்ளிக்கிழமை இரவு 9 மணிக்கும் மறுஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

இதுகுறித்து சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குநர் அண்ணாதுரை செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மொத்தம் 75 வாரங்கள் ஒளிபரப்பாக உள்ள இந்த தொலைக்காட்சித் தொடரில், நாடு முழுவதிலும் இருந்து சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற, அறியப்படாத 75 வீரர்களின் வாழ்க்கை வரலாறுஒளிபரப்பாக உள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த பூலித்தேவன், வீரமங்கை வேலுநாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகியோரது வரலாறும் இந்த தொடரில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சி பிரிவின் தலைவர் ரஃபீக் பாட்ஷா கூறும்போது, “விடுதலைப் போரில் தமிழகத்தின்பங்கு குறித்து தனி தொடரைஒளிபரப்பும் பணிகளில் பொதிகை தொலைக்காட்சி ஈடுபட்டுள்ளது. அது விரைவில் தொடராக வெளிவரும்” என்றார்.

செய்திப் பிரிவு இயக்குநர் குருபாபு பலராமன் கூறும்போது, “சுதந்திரப் போராட்டம் குறித்தும், வரலாற்றுச் சிறப்புநிகழ்ச்சிகள் குறித்தும் தூர்தர்ஷனின் யூடியூப் தளத்தில் காணலாம்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE