சட்டத்துக்கு புறம்பாக கட்சியை அபகரிப்பதை நீதியும், தர்மமும் ஏற்காது - ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்டம்

By செய்திப்பிரிவு

சென்னை: அதிமுகவில் பழனிசாமி தரப்பில் நடத்தப்பட்ட பொதுக்குழு செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், சட்டத்துக்கு புறம்பாக கட்சியை அபகரிப்பதை நீதியும், தர்மமும் ஏற்றுக்கொள்ளாது என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் பழனிசாமி, கடந்த ஜூலை 11-ம் தேதி நடத்திய பொதுக்குழு மற்றும் அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில், அந்தப் பொதுக்குழு செல்லாது, ஜூன் 23-ம் தேதி இருந்த அதே நிலையே தொடரும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்தத் தீர்ப்பு தொடர்பாக ஓபிஎஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தீர்ப்பு மெய்ப்பித்துள்ளது

தர்மத்தையும், நீதிமன்றங்களையும், அதிமுக தொண்டர்களையும், அதிமுகவை தோற்றுவித்த எம்ஜிஆர், வளர்த்தெடுத்த ஜெயலலிதா உள்ளிட்டோரை நம்பினேன். அந்த நம்பிக்கை இன்று உண்மையாகி இருக்கிறது. அரசியல் கட்சியை சட்டத்துக்கு புறம்பாக அபகரிப்பதை நீதியும், தர்மமும், தொண்டர்களும், பொதுமக்களும், குறிப்பாக தெய்வமும் ஏற்றுக்கொள்ளாது என்பதை இந்தத் தீர்ப்பு மெய்ப்பித்திருக்கிறது. அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களை அரவணைத்துச் செல்வேன். கட்சியின் கசந்த காலங்கள், இனி வசந்த காலங்களாக மாறும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட் டுள்ளது.

இதற்கிடையே, மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் நினைவிடங்களில் ஓபிஎஸ் நேற்று மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

அதிமுகவை, தொண்டர்களின் மாபெரும் இயக்கமாக எம்ஜிஆர் உருவாக்கினார். இந்த இயக்கத்தை தொண்டர்கள் இயக்கமாக, யாரும் வெல்ல முடியாத இயக்கமாக ஜெயலலிதா உருவாக்கினார். எம்ஜிஆர் வகுத்த விதிகளை துச்சமென நினைப்பவர்கள் வீழ்ந்து போவார்கள். இனி கட்சியின் ஒற்றுமை நிலைநிறுத்தப்பட்டு, அசைக்க முடியாத எஃகு கோட்டையாக அதிமுக திகழ்ந்து, வெற்றிநடைபோடும்.

தலைமைக்கு மனப்பக்குவம் வேண்டும்

வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை, சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பை அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களுக்கு காணிக்கையாக்குகிறேன். தொண்டர்கள் என்ன விரும்பினார்களோ, அது இன்று நடந்திருக்கிறது. இது அதிமுகவுக்கு கிடைத்த முழுமையான வெற்றி. அனைவரும் ஒன்றுபட வேண்டும். யாரெல்லாம் அதிமுகவின் கொள்கைக்கும், கோட்பாடுகளுக்கும் இசைந்து வருகிறார்களோ அவர்கள் ஏற்றுக்கொள்ளப்படுவார்கள்.

அதிமுக மாபெரும் மக்கள் இயக்கம். தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு விமர்சனங்களைத் தாக்கிக்கொள்ளும் மனப்பக்குவம் இருக்க வேண்டும். யார் அவமானங்களை ஏற்படுத்தினாலும், அதைப் பொறுத்துக்கொண்டு, அரவணைத்துச் செல்ல வேண்டும். எனக்கு தொண்டர்கள் அளித்துள்ள பதவி ஒருங்கிணைப்பாளர். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் எப்படி கட்சியை ஒருங்கிணைத்து நடத்தினார்களோ, அதுபோல அந்த இரு பெரும் தலைவர்களின் தியாகங்களை மனதில் கொண்டு செயல்படுவோம்.

இனி இருதரப்பு இல்லை

பொதுக்குழு நடத்துவது தொடர்பாக, தேவைப்பட்டால் கலந்துபேசி நல்ல முடிவை எடுப்போம். இனி ஓபிஎஸ் தரப்பு, இபிஎஸ் தரப்பு என்பது இல்லை, அதிமுக என்ற ஒரே தரப்புதான். எங்கள் எதிர்கால நடவடிக்கைகள் அனைத்தும் தொண்டர்கள் விருப்பப்படியும், தமிழக மக்கள் நலன் கருதியும்தான் இருக்கும். இவ்வாறு ஓபிஎஸ் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்