சென்னை: எந்தக் காலத்திலும், எந்தச் சூழலிலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைகளை விட்டுக் கொடுக்கமாட்டேன் என்றும் பா.ஜ.க - ஆர்.எஸ்.எஸ் உடன் குறைந்தபட்ச சமரசம் கூட கிடையாது என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை, கலைவாணர் அரங்கத்தில் இன்று (ஆக.16) நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் மணிவிழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியாதாவது: சகோதரர் திருமாவளவன் பார்த்தால் அறுபது வயது ஆனவரைப் போலத் தெரியவில்லை. மேடையில் ஏறினால் இருபது வயதுக்காரரைப் போலத் தான் சிறுத்தையாகச் சீறுகிறார், புலியாக உறுமுகிறார். அறுபது என்று சொல்லமுடியாத அளவுக்குத்தான் திருமா தோற்றமளிக்கிறார். இவருக்கு ஐம்பது வயதான போது, 2012-ம் ஆண்டு பொன்விழா நடந்தது. அதில் கலைஞர் பங்கேற்று வாழ்த்தியிருக்கிறார். இன்றைக்கு 60, நான் வாழ்த்த வந்திருக்கிறேன். அன்றைக்கு அப்பா வாழ்த்தினார், இன்றைக்கு பிள்ளை வாழ்த்த வந்திருக்கிறேன்.
பெரியாரும், கலைஞரும் சரி, 95 வயது வரை வாழ்ந்தார்கள். 95 வயது வரை வாழ்ந்தார்கள் என்றால், இருவரும் அவர்களுக்காக வாழவில்லை, தமிழகத்துக்காக, தமிழ் மக்களுக்காக வாழ்ந்திருக்கிறார்கள். அதைப் போலத்தான் திருமாவளவனும் இந்தத் தமிழ்ச் சமூகத்துக்காக, பழங்குடிச் சமூகத்தின் மேன்மைக்காக, உரிமைக்காக நீண்ட காலம் வாழ்வார், வாழ வேண்டும்.
'தம்பி உடையான் படைக்கு அஞ்சான்' என்று சொல்வதைப் போல, எங்களுக்கு பலமாக இருக்கக்கூடியவர்தான் திருமா. இதனை ஏதோ அரசியலுக்காக, தேர்தலுக்காக என்று யாரும் நினைத்துக்கொள்வதற்கு அவசியமே கிடையாது. திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும், விடுதலைச் சிறுத்தைகளுக்கும் இருப்பது தேர்தல் நட்பு மட்டுமல்ல, அரசியல் நட்பு மட்டுமல்ல. அது கொள்கை உறவு. இரண்டு கருத்தியல்களின் கூட்டணி.
அதனால்தான் இதனை யாராலும் பிரிக்க முடியாது. தேர்தல் நட்பு என்றால் தேர்தலோடு முடிந்து போயிருக்கும். வெற்றிக்குப் பிறகும் நாங்கள் ஒன்றாக இருக்கிறோம், ஒருதாய்ப் பிள்ளைகளாக இருக்கிறோம். ஒரே கொள்கையை இரண்டு இயக்கங்களின் மூலமாகச் செயல்படுத்த நினைத்துக் கொண்டிருப்பவர்கள். அதனால் நம்மை யாரும் பிரிக்க முடியாது. தேர்தல்கள் வரும், போகும். ஆனால், இயக்கங்கள் இருக்கும். கொள்கைகள் இருக்கும். கருத்தியல்கள் இருக்கும். இலக்குகள் இருக்கும்.
இரண்டு நாட்களுக்கு முன்னால் ஒரு பத்திரிகை பேட்டி ஒன்றில் நாங்கள் கொண்டு செலுத்தக்கூடிய 'திராவிட மாடல்' ஆட்சிக்கான இலக்கணம் என்ன என்பது குறித்து திருமா ஒரு விளக்கத்தை மிகவும் அருமையாக சொல்லியிருந்தார். ''ஆரியத்துக்கு எதிரான அனைத்தும் திராவிடம்தான் என்று புரிந்து கொள்ளலாம்'' என்று திருமா சொல்லி இருக்கிறார். இதைவிடச் சுருக்கமாக, சிறப்பாக யாராலும் சொல்ல முடியாது. இந்த ஆட்சியைப் பார்த்தால் பலருக்கு ஏன் கசக்கிறது என்றால், இதனால் தான். இதனைத்தான் திருமா பொட்டில் அடித்தாற்போலச் சொல்லி இருக்கிறார்.
''பெரியாரை எதிர்க்கக் கூடிய சக்திகள் தி.மு.க.வையும் தொடர்ந்து எதிர்க்கிறார்கள்" என்றும் அந்தப் பேட்டியில் சொல்லி இருக்கிறார். நாங்கள் கொண்ட கொள்கையில் உறுதியாக இருப்பதால்தான் பெரியாரை எதிர்க்கக் கூடிய சக்திகள் இன்றைய தி.மு.க. அரசை எதிர்க்கிறார்கள். இதனையும் மிகச் சரியாக நம்முடைய திருமா குறிப்பிட்டு காட்டியிருக்கிறார்.
திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு அறிவுரையாகவும், திருமா ஒன்றை குறிப்பிட்டுச் சொல்லி இருக்கிறார். அதைச் சொல்வதற்கு அவருக்கு எல்லா உரிமைகளும் உண்டு. அதை மனப்பூர்வமாக நான் ஏற்றுக் கொள்கிறேன்.
''பாஜக, ஆர்.எஸ்.எஸ். ஆகிய அமைப்புகளிடம் குறைந்தபட்ச சமரசத்தை தி.மு.க. கையாண்டால் கூட, தி.மு.க. அணியில் பா.ஜ.க. எதிர்ப்பு என்பது மெல்ல மெல்ல நீர்த்துப் போய்விடும் என்று திருமா அதில் சொல்லியிருக்கிறார். ஆனால், தி.மு.க.வைப் பொறுத்தவரை தனது கொள்கையில் எப்போதுமே உறுதியாக இருக்கும் சகோதரர் கூறுவது போல் “குறைந்தபட்ச” சமரசத்தைக் கூட தி.மு.க. செய்துகொள்ளாது.
நான் இப்போது இரு பொறுப்புகளில் அமர்ந்திருக்கிறேன். ஒன்று கட்சித் தலைவர் பொறுப்பு, இன்னொன்று அனைவருக்குமான தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பு. உங்களால் உருவாக்கப்பட்டவன்தான் நான்; உங்களால் உட்கார்ந்திருக்கக்கூடியவன் நான்.
நான் டெல்லி செல்வதைப் பற்றி வீரமணி இங்கு சூசகமாக சுருக்கத்தோடு குறிப்பிட்டார். காவடியா தூக்கப் போகிறேன். கை கட்டி, வாய் பொத்தி, உத்தரவு என்ன என்றா கேட்கப் போகிறேன்? கலைஞர் பிள்ளை நான். உறவுக்குக் கைகொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம், என்பதை மனதில் நினைத்துக் கொண்டிருப்பவன் நான்.
தமிழ்நாடு முதலமைச்சர் என்ற முறையில், ஒன்றிய அரசிடம் பேசி, தமிழகத்திற்கு, தமிழ்நாட்டு மக்களுக்குத் தேவையான திட்டங்களைப் பெறவேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது. ஒன்றிய, மாநில அரசுகளுக்கு இடையில் உறவு இருக்கிறதே தவிர, தி.மு.க.விற்கும், பா.ஜ.க.விற்கும் அல்ல. தி.மு.க.வினுடைய கொள்கைக்கும், பா.ஜ.க.வினுடைய கொள்கைக்கும் எந்த உறவும் கிடையாது
திருமா கொஞ்சம் கூட, கிஞ்சிற்றும் நீங்கள் கவலைப்பட வேண்டாம். எந்தக் காலத்திலும், எந்தச் சூழலிலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைகளை இந்த ஸ்டாலின் விட்டுக் கொடுக்கமாட்டான். திருமா கூறுவதுபோல், குறைந்தபட்ச சமரசமும் செய்து கொள்ளமாட்டான் இந்த ஸ்டாலின், உங்கள் சகோதரன் நான் என்று உரிமையோடு இதை சொல்ல விரும்புகிறேன். இன்றைக்கு திராவிட மாடல் ஆட்சி என்று இந்த ஆட்சியை கூறுகிறோம். ஆகவே, இந்த திராவிட பேரியக்கத்தின் கொள்கை முழக்கம்தான் இது. அந்த முழக்கம் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கும் என்று இந்த மேடையின் வாயிலாக நான் தெரிவிக்க விரும்புகிறேன்.
தந்தை பெரியார் பிறந்தநாளை சமூகநீதி நாளாகவும், அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளை சமத்துவ நாளாகவும், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று சட்டம் போட்டதும், பெண்களும் அர்ச்சகராக வழிவகை செய்ததும், இடஒதுக்கீடு என்ற சமூகநீதிக் கொள்கையில் உறுதியாக இருப்பதும், இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம்தான் என்று சொல்வதும், திரும்ப, திரும்ப நாம் எடுத்துச் சொல்வதும், குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகத் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டதும் இதனால்தானே! இன்னும் பலவற்றை என்னால் எடுத்துக்காட்டாகச் சொல்ல முடியும்.
இதனால்தான் சனாதனவாதிகளால், வகுப்புவாதிகளால் இந்த அரசு அதிகப்படியான தாக்குதலுக்கு உள்ளாகிறது. குறிப்பாக நான் அதிகப்படியாக அவர்களால் விமர்சிக்கப்படக்கூடிய சூழலுக்கு வந்திருக்கிறேன். அவ்வளவுதானே தவிர வேறு அல்ல.
நாம் உருவாக்க நினைப்பது, 'யாதும் ஊரே யாவரும் கேளிர்... ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற சங்ககாலத் தமிழகம். சங்ககாலத் தமிழகத்துக்கு எதிரானதுதான் சனாதன சக்திகளின் சங்கத்துவம். அதனை நாம் ஒன்றிணைந்து வீழ்த்துவோம். இதுதான் அவருடைய அறுபதாவது பிறந்தநாளில் நான் வழங்கக்கூடிய மிகப் பெரிய கொள்கைப் பரிசு. இவ்வாறு அவர் ஸ்டாலின் பேசினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 mins ago
தமிழகம்
40 mins ago
தமிழகம்
54 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago