“கழுதை தேய்ந்து கட்டெரும்பு ஆன கதை” - சென்னை மாநகராட்சி பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தை குறிப்பிட்ட மா.சுப்பிரமணியன்

By செய்திப்பிரிவு

சென்னை: "கழுதை தேய்ந்து கட்டெரும்பு ஆன கதை" போல் சென்னை மாநகராட்சி பள்ளிகளின் பொது தேர்வு தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசினார்.

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 2021 - 2022 ஆம் கல்வியாண்டில் பயின்று உயர் கல்வியில் சேர்ந்துள்ள மாணவ, மாணவியருக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர் பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், ஆணையர் ககன் தீப் சிங் பேடி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, "மாநகராட்சிக்கு பள்ளி மாணவர்களுக்கு என மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரி கட்ட வேண்டும் என என்னிடம் ஆணையர் வேண்டுகோள் விடுத்தார். வருங்காலத்தில் இது போன்று தொடங்கப்பட்டால் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அனைவரும் இதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தற்போது வழங்கும் ஊக்கத்தொகை மாணவர்களின் பெற்றோர்களுக்கு சற்று உதவியாக இருக்கும்" என்றார்.

அமைச்சர் சேகர் பாபு பேசுகையில், "வாழ்க்கை நமக்கு வாய்ப்பை மட்டும்தான் தருகிறது. வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளும் காலம்தான் மாணவ பருவம். வன யானையை போல் வாழ்க்கையை மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். இந்திய ஒன்றிய மாநிலங்களில் எப்படி முதன்மையான முதல்வர் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பெயர் எடுத்துள்ளது போல் தமிழக மாணவர்கள் பெயர் எடுக்க வேண்டும்" என்றார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், "மாநகராட்சி கல்வித் துறை என்பது சிறந்த துறையாக உள்ளது. மாநகராட்சி பள்ளியில் 1996 ஆண்டு சேர்க்கை 50% சதவீதம் இருந்தது. அதற்கு பிறகு 76% ஆக அதிகரித்தது. 2006 ஆண்டு 90% ஆக அதிகரித்தது. இது அனைத்தும் தற்போது முதல்வரால்தான் சாத்தியமானது.

கழுதைத் தேய்ந்து கட்டெரும்பு ஆன கதை போல் சென்னை மாநகராட்சி பள்ளிகளின் பொதுத் தேர்வு தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. கடந்த ஆண்டை கணக்கில் எடுத்து கொள்ள முடியாவிட்டாலும் மாநகராட்சி கல்வித் துறை இன்னும் சிறப்பாக செயல்பட்டு தேர்ச்சி விகிதத்தை 90 சதவீதமாக உயர்த்திக் காட்ட வேண்டும்.

வார்டு உறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூ.3 லட்சம் என தற்போதைய முதல்வர், மேயராக இருந்தபோது தொடங்கி வைத்தார். அதிலிருந்து மாநகராட்சி பள்ளிகளில் கணினி அமைப்பதற்காக நிதி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து, அதற்குப் பிறகு மாநகராட்சி பள்ளிகளுக்கு கணினி வாங்கப்பட்டது. மாணவர்களின் கல்விக்கான கட்டமைப்பை அதிகாரிகள் மேம்படுத்த வேண்டும். அதற்கு நிதி அளிக்க அரசு தயாராக உள்ளது" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

46 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்