தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களில் ஓபிசி இட ஒதுக்கீடு: அன்புமணி வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களில் அகில இந்திய தொகுப்பு இடங்களில் ஓபிசி இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜுவுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.

அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் அக்கடிதம் குறித்து குறிப்பிட்டுள்ளதாவது: ''இந்தியா முழுவதும் உள்ள 23 தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களின் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் கடந்த 08.08.2022 முதல் பெறப்பட்டு வரும் நிலையில், அந்த பல்கலைக்கழகங்களின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு தொடர்ந்து மறுக்கப்பட்டு வருவது குறித்து தங்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக இந்தக் கடிதத்தை தங்களுக்கு நான் எழுதுகிறேன்.

தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள 23 தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களில் உள்ள மாணவர் சேர்க்கை இடங்களில் குறிப்பிட்ட விழுக்காடு இடங்கள் அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்கப் படுகின்றன; மீதமுள்ள இடங்கள் மாநில ஒதுக்கீடாக அறிவிக்கப்பட்டு, சொந்த மாநில மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன. இவற்றில் பெரும்பான்மையான தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை. ஓபிசி இடஒதுக்கீடு குறித்த விவரங்களை பரிசீலனைக்காக உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

23 தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களில் 9 பல்கலைக்கழகங்களில் மட்டும் தான், 27 விழுக்காட்டை விட கூடுதலாகவோ, குறைவாகவோ ஓபிசி இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே மிகவும் அதிகமாக திருச்சியில் உள்ள தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் தான், அகில இந்திய தொகுப்பில் 50 விழுக்காடு இடங்கள் ஓபிசிக்கு ஒதுக்கப்படுகின்றன.

1. குஜராத் தேசிய சட்டப் பல்கலைக்கழகம், காந்தி நகர்,
2. தேசிய சட்டக் கல்வி மற்றும் ஆராய்ச்சிப் பல்கலைக்கழகம், ராஞ்சி, ஜார்க்கண்ட்,
3. டாக்டர். அம்பேத்கர் தேசிய சட்டப் பல்கலைக்கழகம், சோனிப்பேட், ஹரியானா
ஆகிய 3 தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களில் அகில இந்திய தொகுப்பில் 27% ஓபிசி இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

1. ஹிதாயத்துல்லா தேசிய சட்டப் பல்கலைக்கழகம், ராய்ப்பூர், சத்தீஸ்கர் - 12.90%
2. தேசிய சட்டப் பல்கலைக்கழகம், போபால், மத்தியப் பிரதேசம் - 14%
3. இந்திய தேசிய சட்டப் பல்கலைக்கழகம், பெங்களூர், கர்நாடகம் - 16.20%
4. தேசிய சட்டக் கல்வி & ஆராய்ச்சிக் கழகம், ஹைதராபாத், தெலுங்கானா - 18%
5. தேசிய சட்டப் பல்கலைக்கழகம், டெல்லி - 22%

ஆகிய ஐந்து பல்கலைக்கழகங்களிலும் அகில இந்திய தொகுப்பில் 27 விழுக்காட்டுக்கும் குறைவாக ஓபிசி இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இவை தவிர மீதமுள்ள 14 தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களிலும் அகில இந்திய தொகுப்பில் ஓபிசி இட ஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை என்பது வருத்தமளிக்கிறது.

மருத்துவப் படிப்பைப் பொறுத்தவரை இளநிலைப் படிப்புகளில் 15% இடங்களும், முதுநிலை படிப்புகளில் 50% இடங்களும் தான் அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்கப்படுகின்றன. ஆனால், தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களைப் பொறுத்த வரை ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் 50%க்கும் கூடுதலான இடங்கள் அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்கப்படுகின்றன. அதிக எண்ணிக்கையிலான அந்த இடங்களில் ஓபிசி இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என்பதால், அந்தப் பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இந்த சமூக அநீதி போக்கப்பட வேண்டும்.

தேசிய சட்டப் பல்கலைக்கழகங்கள் மாநிலச் சட்டங்களை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளன. அதனால், இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதும், இட ஒதுக்கீட்டின் அளவைத் தீர்மானிப்பதும் சம்பந்தப்பட்ட சட்டப் பல்கலைக்கழகத்தின் செயற்குழுவின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்பதால், இட ஒதுக்கீட்டை சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களே தீர்மானித்துக் கொள்ளலாம் என்று பல்கலைக்கழக நிர்வாகங்கள் கூறுகின்றன. அகில இந்திய தொகுப்பு இடங்களில் ஓபிசி இட ஒதுக்கீடு வழங்கும்படி தங்களை யாரும் கட்டுப்படுத்த முடியாது என்று தேசிய சட்டப் பல்கலைக்கழகங்கள் கூறுகின்றன. இது ஏற்றுக்கொள்ள முடியாத வாதம் ஆகும். தேசிய சட்டப் பல்கலைக்கழகங்கள் சமூகநீதியை சூறையாடுவதை மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் அனுமதிக்கக் கூடாது.

சட்டம் மற்றும் நீதித்துறையில் பிற்படுத்தப்பட்ட மக்களின் பிரதிநிதித்துவம் மிகவும் குறைவாக உள்ளது. அதிலும் குறிப்பாக தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் நுழைவதே அரிதாகவும், அதிசயமாகவும் மாறி வருகிறது. இந்த நிலை மாற்றப்பட வேண்டும் என்றால், தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுவதை மத்திய சட்ட அமைச்சகம் உறுதி செய்ய வேண்டும்.

தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களில் ஓபிசி இட ஒதுக்கீட்டை செயல்படுத்தும்படி பல்கலைக்கழக மானியக் குழுவும், தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையமும் பலமுறை அறிவுறுத்தியுள்ளன. ஆனால், அதை தேசிய சட்டப் பல்கலைக்கழகங்கள் செயல்படுத்தவில்லை என்பது மிகவும் வருத்தமளிக்கிறது.

எனவே, இந்த விவகாரத்தில் தாங்கள் தலையிட்டு, அனைத்து தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களிலும் அகில இந்திய தொகுப்பில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% அல்லது அதற்கும் கூடுதலான இட ஒதுக்கீடு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். அதன் மூலம் தேசிய சட்டப் பல்கலைக் கழகங்களில் சமூக நீதியை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.'' இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்