விநாயகர் சதுர்த்திக்கு நன்கொடை வசூலிப்பது யார்?- உயர் நீதிமன்றம் கேள்வி

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: விநாயகர் சதுர்த்திக்கு நன்கொடை வசூலிக்கும் அமைப்புகளை எதிர்மனுதாரர்களாக சேர்த்து புதிய மனுவை தாக்கல் செய்ய இந்து முன்னேற்ற கழகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

விநாயகர் சதுர்த்தி பண்டிகை நடப்பாண்டு ஆகஸ்ட் 31-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் சிலைகள் அமைக்க கட்டுப்பாடு விதிக்க கோரி திருப்பூரைச் சேர்ந்த இந்து முன்னேற்ற கழகத் தலைவரும், வழக்கறிஞருமான கோபிநாத் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், "விநாயகர் சதுர்த்தியின் போது பொது இடங்களிலும், சாலைகளிலும், பிற மத வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலும் அனுமதியின்றி விநாயகர் சிலைகள் வைக்கப்படுகிறது. அவை போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துவதுடன், சட்டம் - ஒழுங்கு பிரச்சினைக்கும் காரணமாகிவிடுகிறது.

சிலைகள் வைப்பதையும், நீர்நிலைகளில் கரைப்பதையும் முறைப்படுத்த எந்த விதிகளும் வகுக்கப்படவில்லை. விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்காக இந்து அமைப்புகள் நன்கொடை வசூலிப்பதையும் கண்காணிக்க வேண்டும். மேலும், அனைத்து மாவட்டங்களிலும் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே விநாயகர் சிலைகள் வைக்க வேண்டும் என இந்து அமைப்புகளை அறிவுறுத்தும்படி அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள்," நன்கொடை வசூலிப்பவர்கள் யார்?" என்று கேள்வி எழுப்பினர். அதற்கு மனுதாரர் தரப்பில் ," இந்து அமைப்புகள்" என விளக்கமளிக்கப்பட்டது.

இதையடுத்து அந்த அமைப்புகளை எதிர்மனுதாரராக சேர்த்து புதிய மனுவாக தாக்கல் செய்ய அறிவுறுத்திய நீதிபதிகள், இந்த வழக்கை திரும்பப் பெற அனுமதித்து, தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE