கோவை மாவட்டத்தில் உள்ள குருடம்பாளையம் கிராமத்தின் கடைக்கோடி பகுதி அது. வானுயர்ந்து வளர்ந்திருக்கிறது குருடிமலை. ‘ம்ம்மா...’ என்று குரல் கொடுக்கின்றன தொழுவத்தில் கட்டப்பட்டுள்ள மாடுகள். சீருடை அணிந்த பெண்மணி மாடுகளுக்கு தண்ணி காட்டிக் கொண்டிருக்கிறார். இன்னொருவர் சாணம் அள்ளிக்கொண்டிருக்கிறார். மாட்டு சாணம் கொட்டப்பட்டிருக்கும் பகுதியில் மேய்ந்துக்கொண்டிருக்கின்றன ஏராளமான வாத்துக்கள், நாட்டுக் கோழிகள், புறாக்கள்!
குப்பை அல்ல; மாற்று ஆதாரப் பொருள்!
அருகே ஒரு கிட்டங்கி இருக்கிறது. அதன் அருகில் மிகப் பெரிய கூடம். ஆங் காங்கே கையாலும் மின்சாரத்தாலும் இயங்கிக்கொண்டிருக்கின்றன விதவிதமான இயந்திரங்கள். பெண்கள் சுறுசுறுப்பாக வேலைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். கிட்டங்கியின் உள்ளே சென்று பார்த்தோம். ஊரின் மொத்தக் குப்பையும் அடுக்கி வைக்கப்பட்டிருக்கிறது. ‘அட, குப்பைக் கிடங்கு’ என்றோம். உடனே, ‘குப்பைன்னு சொல்லக் கூடாதுங்க, தெனம் 100 பேருக்கு சோறு போடுது. மறுபயன்பாட்டுப் பொருள் அல்லது மாற்று ஆதாரப் பொருள்னு சொல்லுங்க’ என்கிறார் திடக்கழிவு மேலாண்மை திட்ட உதவியாளர் கோபி.
அருகில் இருக்கும் கூடத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கு சீருடை மற்றும் கையுறை அணிந்த பெண்கள் கழிவுகளை தரம் பிரிக் கிறார்கள். பச்சைக் காய்கறி கழிவுகள், தேங்காய் ஓடுகள், தென்னை நார், காகிதம், பிளாஸ்டிக் பொருட்கள், பயன்படுத்திய நாப்கின்கள்... இன்ன பிற பொருட்கள் பிரிக்கப் படுகின்றன. “மொத்தம் 230 பொருட்களுங்க. அவற்றில் 215 பொருட்களை மறுசுழற்றி செய் யலாம். 15 பொருட்களை மறுசுழற்சி செய்யவே முடியாதுங்க. இங்க மட்டுமில்லை, உலகம் பூராவும் இதுதான்” என்கிறார். உண்மைதான், தெர்மோக்கோல், சூயிங்கம், கார்பன் பேப்பர், செராமிக் டைல்ஸ், சில்வர் சாக்லேட் பேப்பர், உட்பகுதியில் பளீர் வெண்மையில் இருக்கும் கோதுமை, ஆட்டா மாவு உறைகள், ஆம்பர் சிரப் புட்டிகள் உட்பட 15 பொருட்களை மறு சுழற்சி செய்ய முடியாது. அபாயக் குப்பைகள் அவை.
மாலையில் சாணம்... காலையில் பணம்!
“வேலை பார்த்தா ஒரு மாசம் கழிச்சுத்தான் சம்பளம். இங்க அப்படியில்லீங்க, இதோ இன்னைக்கு காலையில 8 மணிக்கு காய்கறி கழிவுகளை மாடுகளுக்குக் கொடுக்கிறோம். சாயங்காலம் சாணம் கிடைச்சிடும். ராத்திரி அதில் இருந்து இயற்கை எரிவாயு உற்பத்தி யாகிடுமுங்க. அதோ அந்த கேட்டரிங் சென்டர்ல மறுநாள் காலையில் 8 மணிக்கு சமையல் முடிச்சு டிபன் சப்ளை செய்யறோம். கையோடு பணம் கிடைச்சிடுமுங்க.” இயற்கை அறிவியலுடன் கூடிய கிராமப் பொருளாதாரத்தை எளிமையாக விளக்குகிறார் இளைஞர் கோபி.
இதுமட்டுமல்ல, இங்கே குப்பை என்கிற மாற்று ஆதார பொருட்களில் இருந்து பல கிளைகளாக விரிகின்றன மக்களுக்கான வாழ்வாதாரங்கள். நிலத்தடியில் ஆறு கியூபிக் மீட்டர் கொள்ளளவு கொண்ட ஆறு இயற்கை எரிவாயு தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன. அவற்றில் இருந்து தினசரி 20 கிலோ இயற்கை எரிவாயு உற்பத்தி செய்யப்படுகிறது. அதன் மூலம் நவீன சமையல் கூடம் இயங்குகிறது. திருமணம், அலுவலகக் கூட்டங்கள், உணவகங்கள் என தினசரி உணவுக்கான ஆர்டர் குவிகிறது. காலையில் இட்லி, தோசை, கிச்சடி, பொங்கல் டிபன் தயாராகிறது. மதியம் சாப்பாடு தயாராகிறது. சராசரியாக ஆயிரம் பேருக்கு உணவு விநியோகிக்கப்படுகிறது.
சோலார் குப்பை வண்டி
மணக்குது மண்புழு குளியல் நீர்!
இயற்கை எரிவாயு உற்பத்திக் கூடத்தில் இருந்து மிஞ்சும் மக்கிய சாணத்தை காயவைத்து மண்புழுக்களுக்கு உணவாக போடுகிறார்கள். மண்புழுக்கள் செழித்து வளர்ந்துப் பெருகுகின்றன. ஒரு கிலோ மண்புழுக்களை ரு.500-க்கு விற்பனை செய்கிறார்கள். மண்புழுக்கள் இடும் கழிவில் இருந்து நாள் ஒன்றுக்கு 500 கிலோ மண்புழு உரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அன்றைய தினமே விவசாயிகள் வந்து கிலோவுக்கு 20 ரூபாய் கொடுத்து அள்ளிச் செல்கிறார்கள். இன்னொரு பக்கம் மண்புழுக்கள் குவிந்துள்ள தொட்டியின் அடியே துளித்துளியாக சேகரமாகிறது மண்புழு குளியல் தண்ணீர். பயிர் வளர்ச்சி ஊக்கி திரவம் இது. தண்ணீரில் கலந்து ஸ்பிரே மூலம் பயிர்களுக்கு தெளிக்கிறார்கள். பயிர்கள் பலமடங்கு செழித்து வளர்க்கின்றன. இதையும் போட்டி போட்டு வாங்கிச் செல்கிறார்கள் விவசாயிகள். மாதத்துக்கு மண்புழு உரம் மற்றும் மக்கிய உரம் தலா 3 டன்கள் விற்பனையாகின்றன. குப்பைகள் கொட்டப்பட்டிருக்கும் இரண்டு ஏக்கர் வளாகத்தில் கொசுவைப் பார்க்க முடியவில்லை. துர்நாற்றம் துளியும் இல்லை. மீன்கள், வாத்துக்கள், கோழிகள் கொசுக்களை அழித்துவிடுகின்றன.
தென்னை நாரிலிருந்து உரம்
குருடம்பாளையம் படுசுத்தமாக இருக்கிறது. தினசரி 27 நவீன சோலார் வாகனங்கள் 7 ஆயிரம் வீடுகளில் 2500 கிலோ குப்பைகளைச் சேகரிக்கின்றன. இவை தவிர மாநகராட்சி பகுதியான கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் நகரத்து மக்கள் போடும் குப்பைகளை தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்று பேட்டரி வாகனத்தில் சேகரித்துத் தருகிறது. தரம் பிரிக்கப்பட்ட காகிதம், தென்னை நார், தேங்காய் ஓடு உள்ளிட்ட குப்பையில் இருந்து தினசரி 100 கிலோ மக்கும் உரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அதனை கிலோவுக்கு 10 ரூபாய் கொடுத்து விவசாயிகள் வாங்கிச் செல்கிறார்கள். இன்னொரு பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் மூலம் நாற்றங்கால் பசுங்குடில்கள் உருவாக்கப்பட்டுள்ளன. சந்தனம், பெருஞ்சந்தனம், வேங்கை, மூங்கில், கொன்றை, அரசு, நாவல், புங்கன், கருகமணி, பூச்சக்காய் மற்றும் பழ வகை மரக் கன்றுகள், மலர்ச் செடிகள், அலங்காரச் செடிகள் உற்பத்தி செய்து விற்பனை செய்கிறார்கள். கிராமப் பஞ்சாயத்து நடத்தும் நர்சரி கார்டன் இது. அவ்வளவும் பணம். குப்பையில் இருந்து கொட்டிக்கொண்டே இருக்கிறது பணம்!
சாதித்த கிராம சபை அதிகாரம்!
எப்படி சாத்தியமானது இது என்றோம் பஞ்சாயத்துத் தலைவர் ரவியிடம். “கடந்த அஞ்சு வருஷமாத்தான் பொறுப்பில் இருந்தேன். எங்க கிராமத்துல புறம்போக்கு நிலம் கொஞ்சமும் கிடையாது. ஆரம்பத்துல இந்தத் திட்டத்தை செயல்படுத்த யாரும் இடமும் தரலை. கடைசியிலே தனியார்கிட்ட ரெண்டு ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்தோம். திடக்கழிவு மேலாண்மை திட்ட வல்லுநர் வேலூர் சீனிவாசன் இங்கே வந்து எங்களுக்கு பயிற்சி கொடுத்தார். கிராமப் பஞ்சாயத்து மூலம் வானவில் மகளிர் சுய உதவிக்குழு தொடங்கப்பட்டு சுமார் 100 பெண்கள் மூலம் இந்தத் திட்டத்தை நடத்துறோம். தினம் 200 ரூபாய் சம்பளம். தவிர, சேமிப்பு, கடன் திட்டங்கள் மூலம் அவங்களுக்கு கூடுதல் வருமானமும் கிடைக்குதுங்க.
இங்கே இருக்கிற மாடுகள் அத்தனையும் சாலையோரம் சுற்றித் திரிந்த கைவிடப்பட்ட மாடுகள். குப்பைகள் எல்லாம் தூக்கி எறியப்பட்ட பொருட்கள். இந்த உலகத்துல வீணானதுன்னு எதுவுமே கிடையாதுங்க. பிளாஸ்டிக் சுற்றுச்சூழலுக்கு எதிரானதுதான். அதனால், பிளாஸ்டிக்கை ரோட்டுல போடாதீங்க. ரோட்டை பிளாஸ்டிக்குல போடுங்கன்னு வலியுறுத்துறோம். இங்கே சேகரமாகிற பிளாஸ்டிக் குப்பையை எல்லாம் இயந்திரத்துல அரைச்சு எங்க கிராமத்தில் பிளாஸ்டிக் சாலைகளைப் போட்டி ருக்கோம்.
மண் புழு உரம் தயாரிக்கும் இடம்
இதுமாதிரி பெரிய திட்டங்களைச் செயல் படுத்துறதுக்கு ஏது பணம்னு கேட்குறாங்க. எங்க கிராமப் பஞ்சாயத்து எல்லைக்குள்ள மட்டும் 8 பெரிய நிறுவனங்கள் இருக்கின்றன. அவங்கிட்ட இருந்து சமூக பொறுப்புணர்வு நிதியை கேட்டு வாங்குறோம். அதனை மக்கள் திட்டங்களுக்கு திருப்பி விட்டுறோமுங்க. நான் மட்டுமில்லைங்க, தமிழகத்துல இருக்கிற ஒவ்வொரு பஞ்சாயத்துத் தலைவரும் மனசு சுத்தியோடு நெனைச்சா இது சாத்தியமுங்க. அதுக்காகதானே கொடுத்திருக்காங்க கிராம சபைங்கிற அதிகாரம்!” என்கிறார்.
உண்மைதான், மக்கள் அதிகாரம் என்ன என்பதை நிரூபித்துக்காட்டியிருக்கிறது குருடம்பாளையம் கிராமப் பஞ்சாயத்து.
-பயணம் தொடரும்... | படங்கள்: ஜெ.மனோகரன்
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago