11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முறை தொடரும்: அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

By செய்திப்பிரிவு

சென்னை: 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு வழக்கம்போல் நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

சென்னையில் உள்ள பாரத சாரண, சாரணியர் இயக்க மாநிலத் தலைமை அலுவலகத்தில் சாரண, சாரணியர் இயக்க புரவலரும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று தேசியக் கொடி ஏற்றினார்.

இதனைத் தொடர்ந்து சாரண, சாரணியர்களின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், " சிக்கனமாக, ஒழுக்கமாக, தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதற்கு சாரண, சாரணியர்கள் ஓர் உதாரணம். ராணுவக் கட்டுப்பாடுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் சாரண, சாரணியருக்கு வாழ்த்துகள். நிலாவில் கால் வைத்தவர்களில் 11 பேர் சாரண, சாரணியர் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்" என்றார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்," கல்வித் தொலைக்காட்சி தலைமை செயல் அதிகாரி ஆர்எஸ்எஸ் பின்புலத்தைச் சேர்ந்தவரா என்பதை விட, அவருடைய செயல்பாடுகள் சரியாக உள்ளதா என்பதே முக்கியம். ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் நுழைந்துவிடாதபடி அரசு எச்சரிக்கையாகவே உள்ளது.

11 ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடைமுறை தொடரும். அதில் குழப்பம் வேண்டாம். தனியார் பள்ளிகள் முறையாக நடத்தப்படவில்லை என்ற காரணத்தால்தான் 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முறையே கொண்டு வரப்பட்டது" என்று கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE