’தேசிய கல்விக் கொள்கை ஒரு புரட்சிகர முன்னெடுப்பு’ - சுதந்திர தினத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரை

By செய்திப்பிரிவு

சென்னை: காலனியாதிக்கக் கல்வி முறையின் வழியில், வெற்றுப் பட்டதாரிகளையும் மனப்பாடக் கிளிகளையும் மட்டுமே உருவாக்குகிற கல்வித் திட்டம் செயல்பட்டது. நம்முடைய கல்வித் திட்டத்தை நவீனப்படுத்தும் புரட்சிகர முன்னெடுப்பே, தேசியக் கல்விக் கொள்கை 2020 என்பதாகும்.என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.

76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஆளுநர் மாளிகையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

இனைத் தொடர்ந்து அவர் ஆற்றிய உரையில் "இந்தியத் தாய், சுதந்திரத் திருநாளின் அமுதப் பெருவிழாவைக் கொண்டாடுகிறாள். நம்முடைய நாட்டின் விடுதலை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நேரம் இது; வெளி உலகிற்கு அறியப்படாதவர்கள் இவர்களில் பலர் உண்டு. நம்முடைய நாட்டின் மேன்மைமிக்க வரலாற்றை, செறிவுமிக்க பண்பாட்டை, பெருமைமிக்க சாதனைகளையும் கொண்டாடுகிற நேரமிது.

வீடு தோறும் மூவர்ணக் கொடி என்னும் வகையில், தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தி, வரலாறு காணாத உற்சாகத்தை மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர். பல்லாயிரக்கணக்கான விடுதலை வீரர்களின் வீரத்திலும், ரத்தத்திலும் உருவானது நம்முடைய தேசியக் கொடி. இந்த நன்னாளில், அவர்கள் அனைவருக்கும் நம்முடைய நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நாட்டின் நில, நீர் மற்றும் வான் எல்லைகளில் துடிப்பான பாதுகாப்பை நல்குவதற்கும், சைபர் வெளிகளைக் காப்பதற்கும், நம்முடைய முப்படைகள், துணை ராணுவப் படைகள், காவல் துறை, நுண்ணறிவு அமைப்புகள் ஆகியவையும் பாதுகாப்பு அறிவியலாரும் முனைப்புடன் செயல்பட்டுள்ளனர்.இதனால், உள்நாட்டு அமைதியையும் காத்துள்ளனர். இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமை, நேர்மை, அரசமைப்பு விழுமியங்கள், உள்நாட்டு அமைதி ஆகியவற்றைக் காப்பதில் தங்கள் இன்னுயிர் ஈந்த மாபெரும் வீரர்களுக்கும், நம்முடைய மனமார்ந்த நன்றியறிதலை இத்தருணத்தில் உரித்தாக்குகிறோம்.

உலகையே ஆட்டிப்படைத்த பெருந்தொற்றுக் காலத்தில், நம்முடைய மக்களின் உயிர்களைக் காப்பாற்றும் பணியில், நம்முடைய மருத்துவர்களும் செவிலியரும் பிற நலவாழ்வுப் பணியாளர்களும் அசாதாரணமான துணிவையும் ஈடுபாட்டையும் வெளிப்படுத்தினர். இந்தப் பணியில் தங்களின் இன்னுயிர் ஈந்த மருத்துவர்க்கும் நலவாழ்வுப் பணியாளர்க்கும் நம்முடைய அஞ்சலியைச் செலுத்துகிறோம்.

சூழலுக்கேற்ப மேம்பட்டு நின்ற நம்முடைய மருந்தாக்கியல் துறை, தக்க மருந்துகளை உலகிற்குத் தந்தது; உலகெங்கும் உள்ள மக்களைப் பாதுகாக்கும் வகையில், தக்க தடுப்புமருந்துகளையும் அளித்தது. நம்முடைய நன்றியை இவர்களுக்குத் தெரிவித்துக் கொள்வோம். வளர்ந்து கொண்டிருக்கும் நம்முடைய மக்கட்தொகைக்குப் போதுமான அளவில் மட்டுமில்லாமல், பிற நாட்டினருக்கும் உதவும் அளவில் நம்முடைய விவசாயிகள் உணவை உற்பத்தி செய்துள்ளனர். இத்தகைய சாதனை அளவு உணவு உற்பத்தியைத் தந்துள்ள நம்முடைய வேளாண் பெருமக்களை வாழ்த்தி வணங்குகிறோம்.

ஒலிம்பிக் போட்டிகள், பாரா ஒலிம்பிக் போட்டிகள், காமன்வெல்த் விளையாட்டுகள், சதுரங்க ஒலிம்பியாட் போன்ற பன்னாட்டு விளையாட்டு நிகழ்வுகளில் மிகச் சிறப்பாகப் பங்கேற்று, நம்முடைய நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ள பவானி தேவி, மாரியப்பன் தங்கவேலு, சரத் கமல், ஜோஷ்னா சின்னப்பா, தீபிகா பாலிகல், சதீஷ் சிவலிங்கம், கே. சசிகிரண், டி. குகேஷ், பி. அதிபன், ஆர். பிரக்ஞானந்தா, எஸ்.பி. சேதுராமன், கார்த்திகேயன் முரளி, ஆர். வைஷாலி ஆகிய வீரர்களையும் வீராங்கனைகளையும் எண்ணிப் பெருமிதம் அடைகிறோம்.

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுகளில், கைப்பந்து (வாலி பால்) போட்டிகளிலும், 4 முறை 400 மீட்டர் தொடர் ஓட்டத்திலும் சிறப்பாகப் பங்கேற்று, நம்முடைய மாநிலத்திற்குப் பெருமை சேர்த்துள்ள டி. மாதவன், செல்வ பிரபு, எல். தனுஷ், லட்சுமி பிரபா, ஜனனி ரமேஷ் ஆகியோரைக் குறித்தும் பெருமை கொள்கிறோம். இவர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவர்களின் வெற்றியானது, இளைஞர்கள் பலருக்கும் உந்துதலாக இருக்கும் என்றும், நம்முடைய மாநிலத்தில் ஆரோக்கியமிக்க விளையாட்டுக் கலாசாரத்தை வலுப்படுத்தும் என்றும் நம்புகிறேன். மேற்கூறிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றாலும், பதக்கங்கள் வெல்லமுடியாது போனோருக்கும் என்னுடைய வாழ்த்துகள். அடுத்த போட்டிகளில் இவர்கள் வெற்றி பெறவும் வாழ்த்துகள்.

இந்த மங்கல வேளையில், மாற்றுத் திறனாளிகளின் சேவையில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டுள்ள அனைவருக்கும் என்னுடைய வணக்கங்களையும் நன்றிகளையும் உரித்தாக்குகிறேன். மாற்றுத்திறனாளிகள், நம்முடைய சகோதரர்கள், சகோதரிகள், மகன்கள் மற்றும் மகள்கள் ஆவர். அவர்கள் அனைவரும் நாட்டின் முழுமையான குடிமக்கள். கௌரவத்தோடு அவர்கள் வாழ்வதற்கும், நாட்டின் பெருமையுடைய குடிமக்களாக உணர்வதற்கும் தக்க நிலையை நாம் அனைவரும் உருவாக்கவேண்டும்.

ஆட்டிஸ குறைப்பாடு கொண்ட குழந்தைகளின் எண்ணிக்கை, அச்சுறுத்தும் அளவில் உலகெங்கும் உயர்ந்து கொண்டுள்ளது. நம்முடைய நாட்டிலும், பல லட்சம் ஆட்டிஸக் குழந்தைகள் உள்ளனர். தக்க இடையீடுகள் வழியாக இவர்களுக்கு உதவிகள் தரப்படவேண்டும். மேலும் ஆராய்ச்சிகள் செய்யப்படவேண்டும். ஆட்டிஸம் குறித்த கூடுதல் விழிப்புணர்வு, சமுதாயத்தில் ஏற்படுத்தப்படவேண்டும்.

பெண் குழந்தை ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்டிருந்தால், பெற்றோர்கள் பெரும்பாலும் இதனை இல்லையென்று மறுத்துவிடுகிறார்கள். இதனால், அந்தக் குழந்தைக்குத் தேவையான சிகிச்சை மறுக்கப்பட்டு விடுகிறது. இப்படிப்பட்ட குழந்தைகள் குறித்து உணர்வுடனும் ஆதரவுடனும் செயல்படுமாறு மக்களை வேண்டுகிறேன். இக்குழந்தைகளுக்கு விரைவான சிகிச்சைகள் தரப்படவேண்டும். சிகிச்சை தாமதமானால், குழந்தைக்கு நன்மை கிடைக்காது. ஆய்க்குடி அமர் சேவா சங்கத்தைச் சேர்ந்த எஸ். ராமகிருஷ்ணன் மற்றும் எஸ். சங்கரராமன், விழுப்புரம் சிருஷ்டி அறக்கட்டளையைச் சேர்ந்த கார்த்திகேயன் கணேசன் மாற்றுத் திறனாளிகளுக்கும் ஆட்டிஸக் குழந்தைகளுக்கும் பெரும் சேவை செய்து கொண்டிருக்கும் பிறருக்கும் என்னுடைய அன்பான வணக்கங்கள்.

வசதியான வாழ்க்கையை விட்டுக் கொடுத்து, கிராமப்புற ஏழைகளுக்கும் புறந்தள்ளப்பட்டவர்க்கும் உதவுவதற்காகப் பணிசெய்யும் ஸோஹோ கார்ப்பரேஷன் ஸ்ரீதர் வேம்பு போன்றோருக்கும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நம்முடைய நாட்டின் ஏழைகளுக்கும் வசதி குறைந்தோருக்கும் கல்வி, பயிற்சி, திறன் போன்றவற்றை அளித்து, அவர்களின் ஆற்றலையும் வலிமையையும் நவீன தொழில்நுட்பத்தின் வாயிலாக அதிகப்படுத்தி, வாழ்வாதார வாய்ப்புகளை மேம்படுத்திக் கொண்டிருக்கிற இவர்களுக்கும் நன்றி.

ஏறத்தாழ 150 குளங்களையும் ஏரிகளையும் மீட்டெடுக்க உதவியிருக்கும் இந்திய சுற்றுச்சூழல் அறக்கட்டளையின் அருண் கிருஷ்ணமூர்த்தி, தஞ்சாவூர் பொம்மைகளைத் தயாரித்து விற்பனை செய்வதற்குப் பெண்கள் பலருக்கும் உதவி செய்துள்ள தஞ்சாவூர் மகளிர் சுய உதவிக் குழுவினர் ஆகியோரையும் இத்தருணத்தில் மரியாதையோடு எண்ணி வணங்குகிறோம்.
நம்முடைய இளைஞர்களும் யுவதிகளும், புதுமை படைப்பவர்களாக, புதியன விரும்பிகளாக, முன்பைக் காட்டிலும் களத்தில் இறங்குவதற்கு அச்சப்படாதவர்களாகத் திகழ்கிறார்கள். பெரிதாகக் கனவு காண்கிறார்கள்; பெரிதாக சாதனை படைக்கிறார்கள்.

சமீப காலங்களில் மிக வேகமாக வளர்ந்துகொண்டிருக்கும் ஸ்டார்ட் – அப் அமைப்புகள், நம்முடைய இளைஞர்களின் படைப்புத் திறனை வெளிப்படுத்தி, உலகையே வியப்பில் மூழ்கடிக்கின்றன. ஸ்டார்ட்-அப் சூழலில், உலகிலேயே முதன்மை இடத்தை இந்தியா வகிக்கிறது. இந்தத் தருணத்தில், விண்வெளி ஏவுகணை செலுத்து ஊர்திகளைக் கட்டமைப்பதற்காக விண்வெளி தளத்தில் ஸ்டார்ட் – அப் நிறுவியுள்ள ஊக்கமிக்க புதுமையாளர்களும், சென்னை ஐ ஐ டியைச் சேர்ந்தவர்களுமான ஸ்ரீநாத் ரவிச்சந்திரன், எஸ்.பி.எம். மோயின், எஸ் ஆர் சக்கரவர்த்தி ஆகியோரைப் பாராட்ட விழைகிறேன்.

நண்பர்களே! பிரமாண்டமாகப் பரவிய பெருந்தொற்று, உலகையே புரட்டிப்போட்டு, பொருளாதாரத்தை முடக்கிவிட்ட போதிலும், நம்முடைய வேளாண் பெருமக்கள், தொழிலதிபர்கள், சிறு-குறு தொழில் அமைப்புகள், சுய தொழில் முனைவர்கள், புதியன ஆக்குவோர் போன்றோரின் பங்களிப்பு காரணமாக, உலகின் முதல் மூன்று வேகவளர்ச்சிப் பொருளாதாரங்களில் இந்தியாவும் இடம் பிடித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையின்கீழ், இந்தியா முன்னோக்கி நடை போடுகிறது. ‘எல்லோருடனும், எல்லோருக்காகவும், எல்லோரின் முயற்சியாலும்’ என்னும் தாரக மந்திரத்தை அடிப்படையாகக் கொண்டு, ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்னும் மேன்மை காண்கிறது. வளர்ச்சியிலும் மேம்பாட்டிலும் மானுடத்திற்கு உதவுகிற சேவைகளிலும் நம்பமுடியாத அளவுக்கான இலக்குகளை நிர்ணயித்துக் கொண்டு, அவற்றை எட்டியும் சாதனை படைக்கிறது.

பிற நாடுகளுக்குத் தடுப்பு மருந்துகளையும் மற்ற மருந்துகளையும் கொடுத்து உதவுவதாக இருந்தாலும் சரி, விஸ்வரூபமெடுத்து அச்சுறுத்திக் கொண்டிருக்கும் வானிலைச் சிக்கலைத் தீர்ப்பதற்கான துணிகர, தொலைநோக்குத் தலைமைத் தன்மையாக இருந்தாலும் சரி, பிற நாடுகளிலுள்ள பசித்தவர்களின் பட்டினியைப் போக்குவதற்கான முன்னெடுப்புகளாக இருந்தாலும் சரி, நம்முடைய நாடு ஆக்கபூர்வமான தலைமையைப் பெற்றுள்ளது.

வட்டார – குறு வட்டார சமன்குறைகளைக் களைந்து, பாலின வேறுபாடுகளை நீக்கி, சமூக ஒற்றுமைக்கு வழி கோலி, மக்களின் எல்லையற்ற படைப்பாற்றலையும் கற்பனாசக்தியையும் வெளிப்படுத்துவதில், மத்திய அரசின் அரவணைப்புமிக்க வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு முன்னெடுப்புகள் பெரும் பணியாற்றுகின்றன. இன்றளவில், நம்முடைய மக்கட்தொகையில் செம்பாதியாக இருக்கும் நம்முடைய தாய்மார்களும் சகோதரிகளும் மகள்களும், கல்வி, அறிவியல், ஆராய்ச்சி, தொழில், பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் வெற்றிக் கொடி நாட்டி, தங்களின் சக ஆண் குடிமக்களோடு தோளுக்குத் தோள் நிகராக நின்று, வலிமைமிக்க, செழிப்புமிக்க, அன்புமிக்க புதிய இந்தியாவை உருவாக்குவதில் சரிநிகர் சமானமான பங்குதாரர்களாக விளங்குகின்றனர்.

எந்தவொரு நாடும் பெருமைமிக்கதாகத் திகழவேண்டுமெனில், அதன் குடிமக்கள், நன்கு கற்றவர்களாகவும் தக்க ஆற்றல் திறன் கொண்டவர்களாகவும் இருக்கவேண்டும். மிக நீண்ட காலத்திற்கு நம்முடைய மக்களின் படைப்பு மற்றும் கற்பனாசக்தி அடக்கப்பட்டிருந்தது; காலனியாதிக்கக் கல்வி முறையின் வழியில், வெற்றுப் பட்டதாரிகளையும் மனப்பாடக் கிளிகளையும் மட்டுமே உருவாக்குகிற கல்வித் திட்டம் செயல்பட்டது. நம்முடைய கல்வித் திட்டத்தை நவீனப்படுத்தும் புரட்சிகர முன்னெடுப்பே, தேசியக் கல்விக் கொள்கை 2020 என்பதாகும்.

இதனால், ஆரோக்கியமான, நுண்ணறிவுமிக்க, ஆய்வு நுட்பம் செறிந்த, அனுபவக் கற்றல் வாய்ந்த, மிக முக்கியமாக, தன்னம்பிக்கை நிறைந்த குடிமக்கள் உருவாவார்கள். கல்வியிலும் கற்றலிலும் ஏற்கெனவே இருக்கும் சிறைக்கட்டுமானம் போன்ற பள்ளங்களைத் தகர்ப்பதன் மூலமும், நவீனமான மதிப்புக்கூட்டு முறையின் மூலமும், தங்களுக்குப் பிடித்தமான, தங்களின் ஈடுபாட்டுக்கு ஏற்ற வெவ்வேறு துறைகளையும் பாடங்களையும் கற்பதற்கு மாணாக்கர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும். இதனால், இன்றைய மட்டுமல்லாமல், நாளைய சவால்களையும் எதிர்கொள்கிற திறன்களை மாணாக்கர்கள் பெறுவார்கள்.

தேசிய (புதிய) கல்விக் கொள்கையில், கல்வியை (உயர் மற்றும் தொழிநுட்பக் கல்வி உட்பட), வட்டார மொழிகளில் கற்பது குறித்து வலியுறுத்தப்படுகிறது. உயர்கல்வி நிறுவனங்களில் தமிழ்மொழியின் பயன்பாட்டைப் புதிய கல்விக் கொள்கை ஊக்குவிக்கிறது. தமிழ் மொழி குறித்த பெருமிதத்தை மாணாக்கர்களிடையே மேம்படுத்தவும், பெருமிதத்தோடு தமிழைக் கற்பதை ஊக்குவிக்கவும், மருத்துவம், பொறியியல், சட்டம் உள்ளிட்ட அறிவியல்-தொழில்நுட்பக் கல்வியில் தமிழை அறிமுகப்படுத்தவேண்டும். மிக்க உற்சாகத்தோடும் ஆர்வத்தோடும் புதிய கல்விக் கொள்கை மக்களால் வரவேற்கப்பட்டிருப்பதையும் கல்வி நிறுவனங்களால் நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதையும் காண்கையில், மிகுந்த மனநிறைவு ஏற்படுகிறது.

நாட்டில் நன்கு செயல்படுகிற மாநிலங்களில், நம்முடைய தமிழ்நாடு மாநிலமும் ஒன்றாகும். சுகாதாரம், கல்வி, உள்கட்டமைப்பு, தொழில்மயமாக்கம் போன்ற துறைகளில் நாம் மெச்சத்தக்க மேம்பாட்டை எட்டியுள்ளோம். நம்முடைய மனித மேம்பாட்டுச் சுட்டிகள், நாட்டின் தலைசிறந்த சுட்டிகளிடையே அமைகின்றன. இத்தகைய சாதனைகள் மிகுந்த நிறைவைத் தருகின்றன. இந்தியாவின் உயர்வுக்குத் தமிழ்நாட்டின் உயர்வு மிக முக்கியம் என்பது மட்டுமன்று; அடிப்படையும்கூட எனலாம். நம்முடைய பலங்களையும் பலவீனங்களையும் நாம் அடையாளம் காணவேண்டும். நம்முடைய பலங்களை ஆதாரமாகக் கொண்டு, நம்முடைய பலவீனங்களைக் களைய முற்படவேண்டும்.

நம்முடைய வளர்ச்சியிலும் மேம்பாட்டிலும், சமபங்கும் சமன்பாடும் இருப்பதை நாம் உறுதி செய்யவேண்டும். வளர்ச்சியிலும் மேம்பாட்டிலும், நம்முடைய மாநிலத்தில் காணப்படுகிற உள்வட்டாரச் சீரின்மைகளைக் களையவேண்டும். புறந்தள்ளப்பட்ட மக்களிடையே, குறிப்பாக, பட்டியலினத்தார், ஆதி திராவிடர் போன்றோரிடையே காணப்படுகிற மேம்பாட்டுக் குறைகளை நீக்குவதற்கு முயலவேண்டும். அவர்கள் விடுபடக்கூடாது; விட்டுவிடவும் கூடாது.

மாநிலத்தின் சில பகுதிகளில் காணப்படுகிற தீண்டாமை என்பது கடந்தகாலத்தின் அருவருப்புத் தொடர்ச்சி என்பது மட்டுமல்ல, நம்முடைய முகத்திலும் மனசாட்சியிலும் இருக்கிற களங்கமும் ஆகும். நாகரிகச் சமூகத்திற்கு, இது ஒத்துக் கொள்ளப்படக்கூடியதோ, தாங்கிக் கொள்ளக் கூடியதோ அன்று. மனிதாபிமானமற்ற, அவமானத்திற்குரிய இந்த வழக்கம் உடனடியாக நிறுத்தப்படவேண்டும். நாம் எல்லோருமாகச் சேர்ந்து இந்தத் தீமையை ஒழிக்கவேண்டும்.

நம்முடைய மாநிலத்தில், உயர்கல்வித் துறை உள்கட்டமைப்பு மிகச் சிறப்பாக இருக்கிறது என்பது நிறைவான ஒன்று. இப்போது நம்முடைய அணுகுமுறை, தரத்தை உயர்த்துவதாக இருக்கவேண்டும். நம்முடைய உயர்கல்வியை மேலும் பயனுடையதாக ஆக்கவேண்டுமெனில், உயர்கல்வி நிறுவனங்களுக்கும் தொழிலகங்களுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பில் கவனம் செலுத்தவேண்டும்.

இன்றைய நிலையில், ’ஸ்டெம்’ (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம்) பின்னணியில் உள்ள மாணாக்கர்களுக்குத் தொழில் மற்றும் வாழ்வாதார வாய்ப்புகள் கூடுதல் என்பதை நாம் அறிவோம். மேலும் மேலும் மாணாக்கர்கள், ஸ்டெம் படிப்புகளை நோக்கிச் செல்லும்படியான நடவடிக்கைகளைப் பள்ளிக்கூடங்களில் நாம் மேற்கொள்ளவேண்டும்.
தனியார் முதலீடுகளை ஈர்ப்பதற்கான அனைத்து வசதிகளும் நம்முடைய மாநிலத்தில் உள்ளன – சாலை, ரயில், விமான மற்றும் கடல்வழித் தடங்கள் போன்ற தக்க உள்கட்டமைப்புகள், தட்டுப்பாடற்ற மின்சாரம், திறன்மிக்க மனித வளம், தொழிலக உறவுகளின் ஆரோக்கியச் சூழல் போன்றவற்றைக் கூறலாம்.

எனினும், மக்களின் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் உயர்த்துவதற்கு முதலீடுகள் அவசியம். நம்முடைய அண்டை மாநிலங்கள் சில, நம்மைக் காட்டிலும் பல மடங்கு முதலீடுகளை ஈர்க்கின்றன. இதற்கான காரணங்களைக் கண்டறிந்து, அவற்றைச் சீர் செய்து, மாநிலத்தின் வளர்ச்சிக்காக, முதலீடுகளை மேம்படுத்தவேண்டும்.

என்னருமை சகோதர சகோதரிகளே! தமிழ்நாட்டின் மக்களாகிய நாம், வளமிக்க மொழியையும் பண்பாட்டையும் நம்முடைய செல்வங்களாகப் பெற்றுள்ளோம். உலகின் வாழ்மொழிகளில், தமிழே தொன்மைமிக்கது எனலாம். பழைமையானது என்பது மட்டுமல்லாமல், தமிழ் மொழி செழுமையும் வளமையும் செறிந்ததாகும். சங்ககாலம் தொட்டு நமக்குக் கிட்டியிருக்கும் தமிழ் இலக்கியம், இத்தகைய இலக்கிய, அறிவார்ந்த, தத்துவ,கலை, ஆன்மீகச் செழுமைகளுக்குச் சான்றாகும். நம்முடைய பண்பாடும் மிகவும் தொன்மையானது. ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான நம்முடைய திருக்கோயில்கள் பலவற்றைச் சுற்றியே நம்முடைய கலையும் பண்பாடும் செழித்துள்ளன.

நம் திருக்கோயில்களின் கட்டுமான மேன்மைக்கும் அழகியல் மகத்துவத்திற்கும் உலகில் வேறெங்குமே நிகரில்லை. பண்பாடு மற்றும் ஆன்மீகத்தின் உறைவிடங்களாகவே சேர சோழ பாண்டிய பல்லவ மன்னர்கள் திருக்கோயில்களைக் கட்டியுள்ளனர். தவிரவும், ஒவ்வொரு குடும்பத்திலும் கிராமத்திலுமாக, எண்ணற்ற குலதெய்வங்களும் உள்ளனர். இவை யாவும், தமிழ் பண்பாட்டின் முக்கியமான, பிரிக்கமுடியாத அங்கங்களாகும். இப்படிப்பட்ட ஆன்மீகத்தைக் கொண்டே நம்முடைய செவ்வியல் கலை, இசை, பாட்டு, நடனம் ஆகிய யாவும் உருவாகியுள்ளன; உந்துதல் பெற்றுள்ளன. இவற்றையெல்லாம் காக்கவும் மேம்படுத்தவும் ஆற்றல் பெறச் செய்யவும் நமக்குக் கடமைகள் உள்ளன.

என்னருமை இளைய நண்பர்களே! சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டுவிழாவை எட்டிவிட்ட நிலையில், அடுத்த 25 ஆண்டுகளுக்கான அமிர்த காலத்தை இப்போது நாம் அடைந்துள்ளோம். வருகிற இந்தக் கால் நூற்றாண்டு உங்களுடையது! நம்முடைய நாட்டின் வருங்காலம் உங்கள் கைகளில் உள்ளது. 2047-ல், அதாவது, சுதந்திரத்தின் நூற்றாண்டைக் கொண்டாடுகிற தருணத்தில், உலகத் தலைமையின் உசியில் இந்தியா இலங்கவேண்டும். உங்களுடைய கால் நூற்றாண்டு என்பதால், உங்களுடைய ஆக்கமே, நாட்டின் அமைப்பையும் உயர்வையும் நிர்ணயிக்கும். உங்களையெல்லாம், கனவுகளை நனவாக்கிக் கொள்ள எழும்பவும், நற்கனவு காணவும், உழைக்கவும் வேண்டுகிறேன். சுவாமி விவேகானந்தர் விடுத்த அறைகூவல் போல், ‘நோக்கம் நிறைவேறும்வரை நிற்காதீர்கள்’.

இதுவரை காணாத வாய்ப்புகளை உங்களுக்குத் தரக்கூடிய ஆண்டுகளே, இனி வருகிற ஆண்டுகளாகும். வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்குமான புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்கிற அதே நேரத்தில், அரசமைப்புச் சட்டத்தில் பொதியப்பெற்றுள்ள, நாட்டிற்கான அடிப்படைக் கடமைகளை நீங்கள் மறந்துவிடலாகாது. நெடுநாட்களாக, நம்முடைய உரிமைகளைப் பற்றி அறிந்துள்ளோம்; நம்முடைய கடமைகள் குறித்தும் விழிப்புணர்வு வேண்டும். உரிமைகளுக்கும் கடமைகளுக்கும் இடையில், பொருத்தமான சமன்பாடு இருந்தால் மட்டுமே, நாட்டிற்கு முழுமையான வளர்ச்சியும் மேம்பாடும் கிட்டும். நம்முடைய நாட்டின் உணர்வுநிலையை, கீழ்க்காணும் வரிகளில், பாரதப் பிரதமர் மிகச் சரியாகத் தந்துள்ளார்கள்:

”இதுவே நேரம், சரியான நேரம்; பாரதத்தின் பொன்னான நேரம், எண்ணற்ற கரங்களின் ஆற்றல் இங்கு உள்ளது. எங்கும் நாட்டுப் பற்று பரவியுள்ளது. உங்களால் சாதிக்க முடியாது என்று எதுவுமில்லை. நீங்கள் எழுந்து உழைக்கத் தொடங்குங்கள். உங்கள் திறனை அறிந்து கொள்ளுங்கள். உங்கள் கடமையை உணருங்கள். இதுவே பாரதத்தின் பொன்னான நேரம், இதுவே நேரம், சரியான நேரம்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

தமிழகம்

24 mins ago

தமிழகம்

52 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்