காஷ்மீரில் வீரமரணம் அடைந்த லட்சுமணனின் உடல் ராணுவ மரியாதையுடன் சொந்த ஊரில் நல்லடக்கம்

By செய்திப்பிரிவு

மதுரை: காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் லட்சுமணனின் உடல், 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் அவரது சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

காஷ்மீர் மாநிலத்தில் இந்திய ராணுவ முகாமில் வியாழக்கிழமை காலை தீவிரவாத தாக்குதல் நடந்தது. அப்போது, இந்திய ராணுவத்தினர் எதிர்தாக்குதல் நடத்தியபோது, இருதரப்பிலும் மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய ராணுவ வீரர்கள் 4 பேரும், தீவிரவாதிகள் 2 பேரும் உயிரிழந்தது தெரியவந்தது. இந்திய வீரர்கள் 3 பேரில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர். அவர், மதுரை மாவட்டம், திருமங்கலம்- உசிலம்பட்டி செல்லும் சாலையில் உள்ள து.புதுப்பட்டியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி தர்மராஜின் 2வது மகன் லட்சுமணன் (25).

பிபிஏ முடித்த லட்சுமணன் கடந்த 3 ஆண்டுக்கு முன்பு ராணுவத்தில் சேர்ந்துள்ளார். துப்பாக்கி சுடும் போட்டியில் ஏற்கெனவே திறமை வாய்ந்தவர் என்பதால், ராணுவத்திலும் துப்பாக்கி சுடுதல் பிரிவில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் தான் காஷ்மீர் பகுதியில் ராணுவ முகாமில் பாதுகாப்பு பணியில் இருந்தபோது, தீவிரவாதிகள் தாக்குதலில் லட்சுமணன் வீரமரணம் அடைந்தார்.

முன்னதாக லட்சுமணின் உடல் இன்று காலை ஹைதராபாத் வந்தடைந்தது. அங்கிருந்து விமானம் மூலம் இன்று மதியம் 12.15 மணிக்கு மதுரைக்கு கொண்டு வரப்பட்டது. ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு அமைச்சர் பி.டிஆர்.பழனிவேல் தியாகராஜன், மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர், மாநகராட்சி ஆணையர் சிம்ரன் ஜித்சிங் கலோன், காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத், மேயர் இந்திராணி, துணைமேயர் நாகராஜன், முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

அதைத்தொடர்ந்து ராணுவ வாகனத்தில் லட்சுமணனின் உடல் அவரது சொந்த ஊரான டி.புதுப்பட்டிக்கு கொண்டு செல்லப்பட்டது.

அங்கு அவரது உடலுக்கு பொற்றோர்கள், உறவினர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.

மேலும், தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட 20 லட்சம் ரூபாய்கான காசோலை லட்சுமணனின் பெற்றோரிடம் வழங்கப்பட்டது.

பின்னர் லட்சுமணின் உடலுக்கு 21 ராணுவ குண்டுகள் முழங்க மரியாதை செய்யப்பட்டது. இறுதிச்சடங்குகள் முடிந்து அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது உடலுடன் அவருக்குப் பிரியமான கிரிக்கெட் மட்டையும் வைக்கப்பட்டது. அவர் உடலில் போர்த்தியிருந்த தேசியக் கொடி அவரது குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டது.

லட்சுமணனின் வீரமரண செய்தி வந்தவுடனேயே அவரது தந்தை தர்மாஜ், ‘‘எனது இரு மகன்களையும் ராணுவத்தில் சேர்க்க திட்டமிட்டேன். லட்சுமணனுக்கு முதலில் வாய்ப்பு கிடைத்து சென்றார். அவர் முழுமையாக பணிபுரிய முடியாமல் போனது வருத்தம் என்றாலும், நாட்டுக்காக உயிர் தியாகம் செய்திருப்பதை பெருமையாகவே கருதுகிறேன். வாய்ப்பு கிடைத்தால் எனது இன்னொரு மகனையும், ராணுவத்திற்கு அனுப்புவேன். லட்சுமணன் விட்டுச் சென்ற பணியை மூத்த மகன் நிறைவு செய்வான்’’ என்று கூறியிருந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE