தமிழ்நாடு உப்பு நிறுவனத்தின் ‘நெய்தல் உப்பு’ அறிமுகம்: உப்பளத் தொழிலாளர் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 ஆயிரம் நிவாரணம்

By செய்திப்பிரிவு

சென்னை: உப்பு உற்பத்தி இல்லாத மாதங்களில் உப்பளத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு உப்பு நிறுவனத்தின் தயாரிப்பான ‘நெய்தல் உப்பு’ விற்பனையையும் முதல்வர் தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: உப்பளத் தொழில் பருவகால தொழில் என்பதால், உப்பளத் தொழிலாளர்களுக்கு ஓராண்டில் 9 மாதங்கள் மட்டுமே பணிபுரிய வாய்ப்பு கிடைக்கும். மழைக் காலத்தில் போதிய மாற்றுப் பணிகள் கிடைக்க வாய்ப்பு இல்லாததால் பெரிதும் சிரமப்படுகின்றனர்.

இந்நிலையில், மழைக் காலங்களில் உப்பு உற்பத்தி பணிகள் பாதிக்கப்படும் நேரத்தில் உப்பளத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க, தமிழ்நாடு உடல் உழைப்புத் தொழிலாளர் சமூக பாதுகாப்பு நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 ஆயிரம் நிவாரண நிதியாக வழங்கப்படும் என்று 2021-22-ம் ஆண்டுக்கான தொழில் துறை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, உப்பு உற்பத்தி இல்லாத அக்டோபர் முதல் டிசம்பர் வரை உள்ள மாதங்களுக்காக உப்பளத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கும் திட்டத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் நேற்றுதொடங்கி வைத்து, 5 தொழிலாளர்களுக்கு நிவாரணத் தொகைக்கான காசோலையை வழங்கினார்.

புதிய வணிகப் பெயர்

பொதுமக்கள், பள்ளி செல்லும் குழந்தைகள் பயன்பெறும் வகையில், அயோடின் கலந்த கல் உப்பு, அயோடின் கலந்த சுத்திகரிக்கப்பட்ட தூள் உப்பு, இருவித செறிவூட்டப்பட்ட உப்பு ஆகியவற்றை பொது விநியோக திட்டம் மூலம் மலிவு விலையிலும், மதிய உணவு திட்டத்துக்கும் தமிழ்நாடு உப்பு நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

இந்த நிலையில், மக்கள் பயன்பெறும் வகையில், அயோடின் கலந்த கல் உப்பு, அயோடின் கலந்த சுத்திகரிக்கப்பட்ட தூள் உப்பு ஆகியவற்றை ‘நெய்தல் உப்பு’ என்ற புதிய வணிகப் பெயரில் தமிழ்நாடு உப்பு நிறுவனம் வெளிச்சந்தையில் விற்பனை செய்யும் என்று தொழில் துறை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, ‘நெய்தல் உப்பு’ என்ற புதிய வணிகப் பெயரில் அயோடின் கலந்த கல் உப்பு, அயோடின் கலந்த சுத்திகரிக்கப்பட்ட தூள் உப்பு ஆகியவற்றின் வெளிச்சந்தை விற்பனையை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் தொழில், வர்த்தகத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழிலாளர் நலன், திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன், கனிமொழி எம்பி, தலைமைச் செயலர் இறையன்பு, தொழில் துறை செயலர் எஸ்.கிருஷ்ணன், தொழிலாளர் நலத் துறை ஆணையர் அதுல் ஆனந்த், தமிழ்நாடு உப்பு நிறுவன மேலாண்மை இயக்குநர் கு.இராசாமணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE