ஜி.கல்லுப்பட்டியில் இருந்து உள்ளே தள்ளி இருக்கிறது மணியின் தோட்டம். மணியைப் பற்றி சிறு அறிமுகம். மணி ஒருகாலத்தில் முரடராக வலம் வந்தவர். இன்று காந்தியவாதி! வாயைத் திறந்தால் ‘வாழ்க வளமுடன்’ வருகிறது. அத்தனையும் ஜி.கல்லுப்பட்டி பஞ்சாயத்துத் தலைவர் வளையாபதியின் கைங்கர்யம். மணி சொந்தமாக ஆட்டோ ஓட்டுகிறார். கொஞ்சம் தென்னை, வாழை, காய்கறி பயிரிட்டு இருக்கிறார். மணியின் தோட்டத்திலேயே இரவு தங்கிக்கொண்டேன். மறுநாள் காலை ஊருக்குள் சென்றோம்.
எதிரே குப்பை வாகனத்தில் வளைய வந்துக்கொண்டிருக்கிறார் வளையாபதி. ஆச்சரியத்துடன் “ஏன் இந்த வேலை?” என்று கேட்டேன். “மக்கள் குப்பையைக் கண்ட இடத்துல வீசிடுறாங்க. துப்புரவுப் பணியாளர்கள் பலமுறை சொல்லியும் யாரும் கேட்கலை. அதனால நானே குப்பை வண்டியில உட்கார்ந்து மைக்கை பிடிச்சு பிரச்சாரம் செய்ய ஆரம்பிச்சேன். இப்ப ஊருக்குள்ள ஒருத்தர்கூட குப்பையைக் கண்ட இடங்கள்ல போடுறதில்லை” என்கிறார். இப்படி சேகரமாகும் குப்பைகள் தரம் பிரிக்கப்படுகின்றன. பிளாஸ்டிக் குப்பைகள் விற்பனைக்குச் செல்கின்றன. மக்கும் குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்கப்படுகிறது. அவற்றை ஊரின் விவசாயிகளே முறை வைத்து இலவசமாக எடுத்துக்கொள்கிறார்கள்.
காவல்துறைக்கு சோதனை சாவடி
ஜி.கல்லுப்பட்டி பஞ்சாயத்தைப் பற்றி நிறையச் சொல்லலாம். கொடைக்கானல் சென்றிருக்கிறீர்களா? மலைப் பாதை ஏறும் முன்பாக காவல்துறை சோதனைச் சாவடி மற்றும் காவலர் மையம் இருக்கும். காவல் துறைக்கு அதைக் கட்டிக்கொடுத்தது ஜி.கல்லுப்பட்டி கிராமப் பஞ்சாயத்துதான். ஏற்கெனவே அங்கு சோதனை மையம் இருந்தாலும் தங்கும் வசதி எதுவும் இல்லை. இரவு நேரங்களில் காவலர்கள் இல்லாததால் மலைப் பாதையிலும் கொடைக்கானலிலும் குற்றங்கள் அதிகரித்தன. அப்போது டி.ஐ.ஜி-யாகஇருந்த அறிவுச்செல்வன், பஞ்சாயத்துத் தலைவரை அழைத்து கட்டிடத்துடன் சோதனை சாவடி அமைத்துத் தர முடியுமா என்று கேட்டிருக்கிறார். உடனடியாக பஞ்சாயத்தின் சொந்த நிதியில் சோதனை மையம் கட்டி முடிக்கப்பட்டது!
வளையாபதி தனது கிராமத்தின் ஆக்கிரமிப்புகளை அகற்றிய விதம் அலாதியானது. இரு ஆண்டுகளுக்கு முன்பு ஜி.கல்லுப்பட்டி ஊருக்கு உள்ளே செல்லும் முகப்பு சாலை மிகவும் குறுகலாகயிருந்தது. சாலையின் பாதியை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டியிருந்தனர். பேருந்துகள் அங்கு திரும்ப முடியாததால் அவை ஊருக்குள் வருவதில்லை. ஆக்கிரமிப்பாளர்கள் செல்வாக்கு மிக்கவர்கள். அதிகாரிகள் வரை அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்தார்கள்.
வளையாபதி என்ன செய்தார் தெரியுமா? தினமும் அதிகாலை 6 மணிக்கு எல்லாம் ஆக்கிரமிப்பாளர் வீட்டுக்குச் சென்றுவிடுவார். சம்பந்தப்பட்டவர் வெளியே வந்ததும் “அய்யா, நீங்க கட்டியிருக்கிற கடையால ஊருக்குள்ள பஸ் போக முடியலை. தயவு செஞ்சு அப்புறப்படுத்திடுங்கய்யா...” என்று கையெடுத்து கும்பிடுவார். சுமார் இரு ஆண்டு
காலம் இப்படியே ஓடியது. ஒரு கட்டத்தில் ஆக்கிரமிப்பாளர்களால் தாங்க முடியவில்லை, விடிந்து கதவைத் திறந்தால் கையைக் கட்டிக்கொண்டு காத்திருக்கிறார் காந்தியவாதி. பார்த்தார்கள், அனைவரும் ஒன்றுகூடி பேசி, “ஆக்கிரமிப்பை அகற்றிக்கொள்ளுங்கள்…’’ என்று எழுதிக் கொடுத்துவிட்டார்கள். இன்று விசாலமாக இருக்கிறது சாலை. முன்னாள் ஆக்கிரமிப்பாளர்கள் சிலரிடம் நம்மையும் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தினார். “ஆமாம் தம்பி, அது ஒருகாலம். ஊருக்காக அய்யா இவ்வளவு செய்யறாப்புல. நாம தப்பு செய்யக்கூடாதில்லையா…” என்று சொல்லி புன்னகையோடு உபசரிக்கிறார்கள்.
வியாபாரிகளை சமாளித்துவிடலாம். ஆனால், அரசியல்வாதிகளை? அவர்களையும் அகிம்சை முறையிலேயே வழிக்குக் கொண்டுவந்திருக்கிறார் வளையாபதி. மற்றொரு சாலையின் முகப்பில் அனைத்து கட்சிகளும் தங்கள் கொடியை நட்டு பீடம் அமைத்து ஆக்கிரமித்திருந்தார்கள். அங்கே ஊரின் பிரதான கோயிலுக்கு செல்லும் முகப்பு வளைவு இருந்தது. அதன் வழியாக சவ ஊர்வலம் எடுத்துச் செல்லக் கூடாது என்பது மக்களின் நம்பிக்கை. கொடிக் கம்பங்களின் ஆக்கிரமிப்பால் சவ ஊர்வலம் 2 கி.மீ தூரம் சுற்றிச் செல்ல வேண்டியிருந்தது.
உள்ளூர் கட்சி நிர்வாகிகள் ஒவ்வொருவரின் வீட்டுக்கும் சென்றார் வளையாபதி. ‘‘அவனை எடுக்கச் சொல்லு, நான் எடுக்கிறேன்’’ என்றார்கள் அவர்கள். சுமார் ஆறு மாதங்கள் அலைந்தார். ஒருகட்டத்தில் அனைத்துக் கட்சியினரும் கூடி கொடிகளை அகற்ற சம்மதித்தார்கள். அவையும் அப்புறப்படுத்தப்பட்டன. இதே பாணியில் மேலும் சில ஆக்கிரமிப்பாளர்களிடம் பேசியே அந்த இடங்களை மீட்டு சமுதாய மையக் கட்டிடம், நூலகம் உள்ளிட்டவற்றை கட்டியிருக்கிறார்.
தியாகத்தில் பொங்கிய தண்ணீர்!
ஜி.கல்லுப்பட்டியில் ‘ரீச்சிங் டு அன்ரீச்டு’ தொண்டு நிறுவனம் மூலம் குடிநீர்த் திட்டங்கள் கொண்டுவந்தார் இல்லையா. ஆனாலும் ஊரின் தண்ணீர் பிரச்சினை தீரவில்லை. குடிநீருக்கு கடும் பஞ்சம் ஏற்பட்டது. ஊருக்குள் எங்கு தோண்டினாலும் தண்ணீர் இல்லை. ஊருக்கு வெளியே சுமார் 15 கி.மீ தொலைவில் மஞ்சலாறு அணை அருகே தோண்டினால் மட்டுமே தண்ணீர் கிடைக்கும் சூழல். குறிப்பிட்ட கிராமப் பஞ்சாயத்திடம் பேசி கிராம சபை தீர்மானம் மூலம் சம்மதம் பெற்றார். அங்கே கிராம மக்களே ஒன்று திரண்டு பிரமாண்டமான கிணற்றை வெட்டத் தொடங்கினார்கள். பல மாதங்கள் தோண்டியும் தண்ணீர் வரவில்லை. பாறைகளாக பிளந்தது பூமி.
அப்போது நடந்தது ஒரு துயர சம்பவம். கிணறு தோண்டும்போது ராமு என்கிற இளைஞர் மீது பாறைகள் சரிந்து விழுந்தன. அங்கேயே பலியானார் அவர். ஊரே அழுதது. பாறைகளை அப்புறப்படுத்தி, அவரது உடலை தூக்கினார்கள். உடல் கிடந்த இடத்தில் இருந்து பீய்ச்சியடித்தது தண்ணீர். இன்று நீர் நிறைந்து காணப்படும் அந்தக் கிணற்றுக்கு ‘ராமு கிணறு’ என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.
கிணறு தோண்டியாயிற்று. சுமார் 15 கி.மீ தள்ளியிருக்கும் ஊருக்குத் தண்ணீர் கொண்டு வர வேண்டுமே. கொடைக்கானல் அடிவாரத்தில் இருக்கும் தனியார் கட்டுமான நிறுவனத்திடம் பேசினார் வளையாபதி. அவர்கள் சமூகப் பொறுப்புணர்வு நிதியாக ரூ.25 லட்சம் கொடுத்தார்கள். 15 கி.மீ. தூரத்துக்கு குழாய் பதிக்கப்பட்டு தண்ணீர் ஊருக்குள் வந்தது. ஊர் தாகம் தணிந்தது!
இவரது சேவையைப் பாராட்டி மன்மோகன் சிங் அரசு இவருக்கு சிறந்த பஞ்சாயத்து தலைவர் விருதை வழங்கியது. கடந்த மாதம் தற்போதைய மத்திய அரசும் டெல்லிக்கு இவரை அழைத்து விருது வழங்கியது. மக்கள் அதிகாரத்துக்கு கிடைத்த அங்கீகாரம் அது!
யார் இந்த தாத்தா?
ஜேம்ஸ் கிம்டன்…1925, மே 23-ல் இங்கிலாந்தில் உள்ள நார்த் வேல்ஸில் பிறந்தவர். தங்குவதற்கு வீடு இல்லாததால் இவர்களின் குடும்பம் தேவாலயத்தில் தஞ்சமடைந்திருந்தது. அங்குதான் ஜேம்ஸ் பிறந்தார். 1952-ல் கல்வி சேவைக்காக இலங்கைக்குச் சென்றார் ஜேம்ஸ். 1964-ல் இலங்கை அரசு குடியுரிமைப் பெறாதவர்களை திருப்பி அனுப்பியது. ஜேம்ஸ் இந்தியா வந்தார். மதுரை, நாகமலை புதுக்கோட்டையில் 1964 முதல் 1974 வரை ‘பாய்ஸ் டவுன்’ தொடங்கி ஏழைகளுக்கு இலவச தொழிற்கல்வி வழங்கினார். 1974-ல் ஜி.கல்லுப்பட்டிக்கு வந்து ‘ரீச்சிங் டூ அன்ரீச்டு’ தொண்டு நிறுவனத்தைத் தொடங்கினார். அந்தக் காலகட்டத்தில் இங்கு தொழுநோய் தீவிரமாக பாதித்தபோது அதற்கு சிகிச்சை அளிப்பதில் பெரும் பங்காற்றினார். இந்தப் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் நிறைய குழந்தைகள் இருப்பதை கண்டவர் 1976 இந்தக் குழந்தை கிராமங்கள் திட்டத்தை தொடங்கினார்.
1980-களில் பெரும்பாலான கிராம குழந்தைகள் வேலைக்குச் சென்றனர். அவர்களது பெற்றோரிடம் ஜேம்ஸ் இதுகுறித்து கேட்டபோது, ‘‘கூலிப் பணத்தை யார் தருவா, நீங்க தருவீங்களா?’’ என்றார்கள். ‘‘தருகிறேன்…’’ என்றவர் வீடு வீடாகச் சென்று வேலைக்குச் செல்லும் குழந்தைகளைக் கணக்கெடுத்து அவர்களை அரசுப் பள்ளிகளுக்கு அனுப்பினார். நூற்றுக்கணக்கான குழந்தைகளின் குடும்பங்களுக்கு குழந்தையின் வாராந்திர கூலியான ரூ.40-யை கொடுத்தார். இப்படியாக தொடங்கிய சேவைதான் இன்று மிகப் பெரிய தொண்டு நிறுவனமாக ‘ரீச்சிங் டூ அன்ரீச்டு’ வளர்ந்து நிற்கிறது!
- பயணம் தொடரும்..
முக்கிய செய்திகள்
தமிழகம்
48 secs ago
தமிழகம்
21 mins ago
தமிழகம்
31 mins ago
தமிழகம்
57 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago