சென்னை: "மகளிருக்கான இலவசப் பேருந்துத் திட்டம் இன்று மக்களின் இதயத்தில் நீங்காத இடம்பெற்றுள்ளது. இதில் பயனடைந்தவர்களில் 80 விழுக்காட்டினர் பிற்படுத்தப்பட்ட மற்றும் ஆதிதிராவிடர் வகுப்பினைச் சேர்ந்தவர்கள் என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி மட்டுமல்ல, திராவிட மாடல் ஆட்சிக்கு இது நல்ல அடையாளமும் கூட" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை சேப்பாக்கம், எழிலகத்தில் மாநிலத் திட்டக் குழுவின் மூன்றாவது குழுக் கூட்டம் இன்று (ஆக.12) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியது: "இந்த 15 மாதங்களில் திட்டக்குழுவின் சார்பில் மூன்று கூட்டங்கள் நடைபெற்று, மாநிலத்திற்கான திட்டங்களை நாம் ஆலோசித்து வருகிறோம். இந்த ஆட்சி செல்ல வேண்டிய பாதையையும், செல்லும் பாதை சரியானது தானா என்பதையும் அறிவுறுத்தும் அமைப்பாகத் திட்டக்குழு செயல்பட்டு வருகிறது. அரசுக்கும், மக்களுக்கும் இடைவெளி ஏற்பட்டு விடாமல் அனைவருக்கும் அனைத்தும் கிடைப்பதற்குத் திட்டக்குழு சீர்மிகு பணியாற்றி வருகிறது என இந்தத் திட்டக்குழுவின் தலைவர் என்கிற முறையில் நான் பெருமிதம் கொள்கிறேன்.
தொடக்கம் முதல் எத்தகைய ஆர்வத்துடன் ஆலோசனைகளைச் சொல்லி வருகிறீர்களோ, அதைப் போலவே வருங்காலத்திலும் உங்களது பங்களிப்பு இதேபோல் தொடர்ந்து இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். சில முக்கியமான கொள்கைகளை வகுக்கும் பணி உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மின் வாகனக் கொள்கை, தொழில் 4.0 கொள்கை, குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் கொள்கை, துணிநூல் கொள்கை, கைத்தறிக் கொள்கை, சுற்றுலாக் கொள்கை
ஆகியவற்றைத் தயாரித்து விரைவில் நீங்கள் வழங்க இருக்கிறீர்கள்.
அதற்கான ஆழமான ஆய்வுகளை நடத்தியிருப்பீர்கள் என்று எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. எந்தக் கொள்கையாக இருந்தாலும் மக்களுக்கு நன்மை தருவதாகவும், மாநிலத்தின் வளர்ச்சிக்கு உதவுவதாகவும் இருக்க வேண்டும். இவைத்தவிர மாநிலத்திற்கு தேவையான எதிர்கால நோக்குடன் கூடிய மருத்துவம், சமூகநலன், வேலைவாய்ப்பு, சுற்றுச்சூழல் போன்ற முக்கிய துறை சார்ந்த சில கொள்கைகளையும் விரைந்து வகுத்து இறுதி செய்திட வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.
» “புதுச்சேரி வழியாக தமிழகத்திற்குள் நுழைய பாஜக முயற்சி” - புதுச்சேரி திமுக
» “ஆளுநர்களை நோக்கிதான் அதிக அம்புகள் வீசப்படுகின்றன” - தமிழிசை ஆவேசம்
பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், நீங்கள் செய்துள்ள சீராய்வுகள் அவற்றை மென்மேலும் சிறப்புறச் செயல்படுத்த ஒரு முக்கியத் திறவுகோலாக அமையும். குறிப்பாக, மகளிருக்கான இலவசப் பேருந்துத் திட்டம் இன்று மக்களின் இதயத்தில் நீங்காத இடம்பெற்றுள்ளது. இதில் பயனடைந்தவர்களில் 80 விழுக்காட்டினர் பிற்படுத்தப்பட்ட மற்றும் ஆதிதிராவிடர் வகுப்பினைச் சேர்ந்தவர்கள் என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி மட்டுமல்ல, திராவிட மாடல் ஆட்சிக்கு இது நல்ல அடையாளமும் கூட.
இத்திட்டத்தால் அந்தக் குடும்பங்களின் வருவாயில் 8 முதல் 12 விழுக்காடு சேமிப்பு கிடைக்கிறது என்பது ஒரு பொருளாதாரப் புரட்சி என்றே நான் சொல்வேன். ஆகவே இந்த மகளிருக்கான திட்டத்தை “இலவசம்”என்று ஒரு குறுகிய அடைப்புக்குள் அடக்கிடாமல், கிராமப்புற ஏழை எளிய மக்களிடையே நடைபெற்றுள்ள பொருளாதாரப் புரட்சி என்றே இதை எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஆகவே, இத்திட்டத்தின் மூலமாக ஏழை எளிய மக்கள் இன்னமும் பயனடைய வேண்டும். இதன் மூலமாக அவர்களது வாழ்க்கைத் தரம் எவ்வளவு உயர்ந்துள்ளது என்பதையும் அடையாளம் காணுங்கள். வேளாண் பகுதி, சுற்றுலா மற்றும் வர்த்தகப் பகுதி, தொழில்பகுதி என்று பிரித்து ஆய்வு செய்வதாக கூறியிருக்கிறீர்கள். அது நான் ஏற்கெனவே கூறிய மாதிரி நல்ல முயற்சி. அதை விரைந்து முடித்து, இந்தத் திட்டத்திற்கும், மக்களுக்கும் உள்ள நல்லுறவை தெரிவிக்க வேண்டும்.
இத்திட்டம் மட்டுமல்ல, பொது விநியோகத் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், இல்லம் தேடிக் கல்வி உள்ளிட்ட அரசு செயல்படுத்தும் அனைத்துத் திட்டங்களுக்கும், மக்களுக்கும் இடைவெளி ஏற்பாடாமல் இருக்க என்ன வழி என்பதை கண்டறியுங்கள். அறிவிக்கப்படும் திட்டத்தின் பிளஸ், மைனஸ் ஆகிய இரண்டையும் அலசி ஆராய்ந்து, நீங்கள்தான் அரசுக்குச் சொல்ல வேண்டும். திட்டமிடும் குழுவாக மட்டுமல்ல, கண்காணிக்கும் குழுவாகவும் நீங்கள் இருக்க வேண்டும்.
திராவிட மாடல் அரசின் முகமாக இருக்கும் திட்டங்கள் குறித்து மாநில அளவிலும், தேசிய அளவிலும் கட்டுரைகள் வெளியிடுவதன் மூலமாக நாம் பரப்புரை செய்தாக வேண்டும். மகளிர்க்கான இலவசப் பேருந்துப் பயணத் திட்டம், சமூக பொருளாதார அளவுகளில் ஏற்படுத்தி வரும் நேர்மறையான தாக்கங்கள் குறித்த கட்டுரைகள் பல்வேறு தளங்களில் வர வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அதற்கான முயற்சிகளை நீங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
நமது அரசினுடைய திட்டங்கள் குறித்து மற்ற மாநில அறிஞர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் என்ன மாதிரியான கருத்துகளை, ஆலோசனைகளை தெரிவிக்கிறார்கள் என்பதையும் அறிந்து சொல்லுங்கள்.திராவிட மாடல் கொள்கையின் முக்கியமான குறிக்கோள்களில் ஒன்று அனைத்து மாவட்ட வளர்ச்சி.
இதுகுறித்து, நீங்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு விதமான தனித்தன்மை இருக்கும். அதனை வரையறுத்து அரசுக்கு அதிலிருந்து சில திட்டமிடுதல்களையும் பரிந்துரைகளையும் செய்ய வேண்டும். வருங்காலத்தில் தமிழ்நாட்டில் முன்னேறிய மாவட்டம் - பின்தங்கிய மாவட்டம் என்ற வேறுபாடு இருக்கக் கூடாது என்று விரும்புகிறேன். நமது திட்டங்களைப் பல்வேறு மாநிலங்கள் பின்பற்றி வருகின்றன. அது போல பிற மாநிலங்களில் சிறப்பாகச் செயல்படுத்தப்படுத்தக்கூடிய திட்டங்களை குறிப்பிட்டுச் சொன்னால் நலமாக இருக்கும்.
இதுவரை மாநிலத் திட்டக் குழு எடுத்துள்ள முயற்சிகள் அரசின் செயல்பாட்டிற்கு தூண் போல் நின்று உதவுகிறது. அந்தப் பணியைத் தொடர்ந்து ஆற்றி, எனது தலைமையிலான இந்தத் திட்டக்குழு, தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் பொன்னேட்டில் பதிக்கப்படும் திட்டங்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான கொள்கைகளை வகுத்துக் கொடுக்க வேண்டும்" என்று அவர் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
7 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago