சென்னை: அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து தொடர்ந்த வழக்கின் மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.
அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பி.எஸ், வைரமுத்து தாக்கல் செய்த மனுக்கள் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு இரண்டாவது நாளாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், "பொதுக்குழு உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று ஜூலை 11-இல் பொதுக்குழு கூட்டப்படும் என்று ஜூன் 23-ம் தேதி நடந்த பொதுக்குழுவிலேயே அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பு அப்போதே நேரலையாக அனைத்து தொலைக்காட்சிகளிலும், செய்தியாகவும் மறுநாள் அனைத்து பத்திரிகைகளிலும் வெளியானது. எனவே அதை நோட்டீசாக கருத வேண்டும்.
ஜூலை 11 ஆம் தேதி பொதுக்குழுவுக்கான நிகழ்ச்சி நிரல் ஜூன் 27ல் தயாரிக்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியானதால் தலைமைக்கழக நிர்வாகிகள் மூலம் பொதுக்குழு நோட்டீஸ்,ஜூலை 1-இல் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பொதுக்குழு சட்டப்படி தான் கூட்டப்பட்டது" என விளக்கம் அளித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, "ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்காலம் 5 ஆண்டுகளாக இருக்கும்போது ஒரு ஆண்டுக்கு முன்னரே எப்படி பதவிகள் காலாவதியானது" என்று கேள்வி எழுப்பினார்.
» மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஆக.11 - 17
» வைகை ஆற்று வெள்ளப்பெருக்கில் சிக்கிய சிஐஎஸ்எஃப் வீரர் 3-ம் நாளில் சடலமாக மீட்பு
அதற்கு பதிலளித்த இபிஎஸ் தரப்பு வழக்கறிஞர், "2021 டிசம்பர் 1-ம் தேதி செயற்குழுவில் மேற்கொள்ளப்பட்ட கட்சி விதி திருத்தங்களுக்கு பொதுக்குழுவில் ஒப்புதல் பெறவில்லை. எனவே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு பொதுக்குழு ஒப்புதல் அளிக்கவில்லை என்பதே முடிவாகும்.
தேர்தல் நடைமுறைகளுக்கு பொதுக்குழு ஒப்புதல் அளிக்காததால் பதவிகள் காலாவதியாகிவிடுகின்றன. இருவரின் பதவிகள் காலாவதியாகிவிட்டதால் தலைமைக் கழக நிர்வாகிகள் கட்சி விவகாரங்களை கவனிப்பர்கள் என்று தேர்தல் ஆணையத்தில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளில் மட்டுமே விதிகள் திருத்தப்பட்டன. பொதுக்குழு உறுப்பினர்களின் பதவிகள் காலாவதியாகவில்லை.
ஜுன் 23-ம் தேதி பொதுக்குழுவிலேயே, ஜூலை 11-ம் தேதி பொதுக்குழு கூட்டம் குறித்து அறிவிக்கப்பட்டதால், முன்கூட்டியே நோட்டீஸ் கொடுக்கவில்லை என கூற முடியாது. கூட்டம் நடப்பது குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் என்பதற்காகவே நோட்டீஸ் வழங்கப்பட்டது.
குறிப்பாக பொதுக்குழு உறுப்பினர்களில் 2432 பேர் ஒற்றைத் தலைமையை விரும்புவதாக கடிதம் அளித்துள்ளனர். எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு பின், கட்சியை வழிநடத்த வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமியை முன்னிறுத்தி கட்சியினர் கடிதம் அளித்துள்ளனர்" என்று வாதிட்டார்.
இதேபோல், இபிஎஸ் தரப்பில் மற்றொரு வழக்கறிஞரான மூத்த வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால், "கட்சி அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்தின் கோரிக்கை ஏற்கப்பட்டால், பெரும்பான்மையான உறுப்பினர்களின் முடிவுக்கு எதிரானதாகி விடும். மேலும், அதிமுக அலுவலகத்தில் நடந்த மோதல் விவகாரத்தில் பன்னீர்செல்வத்தின் நடத்தையை கவனிக்க வேண்டும்" என்று வாதிட்டார்.
அப்போது நீதிபதி ஜெயச்சந்திரன் குறுக்கிட்டு, வழக்கிற்கு தொடர்பில்லாத விவகாரம் குறித்து வாதிட வேண்டாம் என இபிஎஸ் தரப்புக்கு அறிவுறுத்தினார்.பின்னர் அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் தரப்பில் வழக்கறிஞர் நர்மதா சம்பத் ஆஜராகி, உள்கட்சி விவகாரங்களை பொருத்தவரை பெரும்பான்மையையே பார்க்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இதைத்தொடர்ந்து, ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ண குமார், "ஜூன் 23 பொதுக்குழுவில் எந்த தீர்மானங்களும் நிறைவேற்றப்படவில்லை என்றால், இரு பதவிகளுக்கான தேர்தலுக்கு ஒப்புதல் அளிக்கும் கேள்விக்கே இடமில்லை. பொதுக்குழு ஒப்புதல் அளிக்காவிட்டால் இரு பதவிகளும் காலாவதியாகிவிடும் என ஜூன் 23-ம் தேதியன்று நடந்த பொதுக்குழு தீர்மானத்தில் எங்குமே குறிப்பிடவில்லை.
எந்தவிதமான காலியிடமும் ஏற்படாத நிலையில், காலியிடம் ஏற்பட்டது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். 2017-இல் பொதுக்குழுவை தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டியதற்கான காரணம் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை தேர்வு செய்யத்தான். ஆனால் இப்போது இருக்கும் சூழலே வேறு.
பொதுக்குழு குறித்து தொலைகாட்சி மற்றும் பத்திரிக்கை மூலமாக தெரிந்து கொள்வது ஏற்று கொள்ள முடியாது. முறையாக நிகழ்ச்சி நிரல் தயாரித்து உறுப்பினர்களுக்கு நோட்டீஸ் கொடுக்க வேண்டும். அந்த நோட்டீசைதான் பொதுக்குழுவுக்கு வரும் உறுப்பினர்கள் கொண்டு வர வேண்டும்.
அப்போது நீதிபதி, பெரும்பான்மையான உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உள்ளார்களா? என கேள்வி எழுப்பியபோது, ஓபிஎஸ் தரப்பில், 2665 பொதுக்குழு உறுப்பினர்களின் முடிவை, ஒட்டுமொத்த ஒன்றரை கோடி தொண்டர்களின் விருப்பமாக கருத முடியாது என்று விளக்கம் அளிக்கப்பட்டது.
மேலும் கட்சி நலனுக்காகவே இந்த வழக்கை தொடர்ந்துள்ளதாகவும், இதுபோன்ற விவகாரங்களில் மனுதாரராக இருந்தாலும், ஒருங்கிணைப்பார் பதவியின் அடிப்படையில் எதிர்மனுதாரர்களில் ஒருவராக குறிப்பிட வேண்டும்" என்று வாதிட்டார்.
ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான மற்றொரு மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், "ஜூலை 11 பொதுக்குழு கூட்டத்துக்கு அழைப்பு விடுத்த நிரந்தர அவைத்தலைவர் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரால் நியமிக்கப்பட்டவர் அல்ல. இரு பதவிகளும் காலியாகிவிட்டதாக கூறுகின்றனர். ஆனால் அவைத் தலைவரை நிரந்தரமாக நியமிப்பதற்கு முன்மொழிந்தபோது இணை ஒருங்கிணைப்பாளர் என்றே எடப்பாடி பழனிசாமியை அழைத்ததற்கு வீடியோ ஆதாரங்கள் உள்ளன .
அதிமுகவில் மட்டும் தான் எந்த அடிப்படை உறுப்பினர் வேண்டுமானாலும் தலைவராக முடியும் என்ற விதி இருந்தது.ஆனால் 5 ஆண்டுகள் அடிப்படை உறுப்பினராக இருந்திருந்தால் மட்டுமே பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடலாம் என்ற விதியில் தற்போது திருத்தம் செய்யப்பட்டுள்ளது" என்று வாதிட்டார்.
பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் ஆஜராகி, "நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவை ஊடகங்கள் வெளியிடும் செய்தியை நீதிமன்றத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பாக எப்படி ஏற்றுக்கொள்ள முடியாதோ, அப்படிதான் ஜூன் 23 பொதுக்குழுவில் நேரலை செய்ததை ஜூலை 11 பொதுக்குழுவிற்கான நோட்டீசாக கருத முடியாது" என்று வாதிட்டார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜெயச்சந்திரன், அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்குகள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago