சென்னை: “என்னை ‘சாஃப்ட் முதல்வர்’ என்று யாரும் கருதிவிட வேண்டாம். நேர்மையானவர்களுக்குத்தான் நான் சாஃப்ட், தவறு செய்வோருக்கு நான் சர்வாதிகாரியாக மாறுவேன்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
போதைப் பொருள் தடுப்பு குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய நிறைவுரை: "அனைவரும் போதைப்பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதில் முழு மூச்சோடு செயல்படப் போகிறீர்கள் என்பதை நினைக்கும்போது, கூட்டத்தின் துவக்கத்தில் இருந்த கவலை எனக்கு கொஞ்சம் குறைந்திருக்கிறது, முழுவதும் குறையவில்லை, கொஞ்சம் குறைந்திருக்கிறது.
அந்த மன நிறைவுடன் சில ஆலோசனைகளை, சில அறிவுரைகளை நான் உங்களிடத்தில் எடுத்துவைக்க விரும்புகிறேன். நீங்கள் இந்தச் செய்தியை உங்களின் கீழ் உள்ள ஒவ்வொரு காவலருக்கும், உதவி ஆய்வாளருக்கும், ஆய்வாளருக்கும், டிஎஸ்பிகளுக்கும் எடுத்துச் செல்ல வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
முதலில், “எனது காவல் நிலைய எல்லையில் போதை மருந்து விற்பனையை முற்றிலுமாகத் தடை செய்து விட்டேன்” என்று உங்கள் லிமிட்டில் உள்ள ஒவ்வொரு போலீஸ் இன்ஸ்பெக்டரும் உறுதி எடுத்துக் கொண்டால் போதும். அதுவே முதல் வெற்றி. போதைப் பொருள் நடமாட்டத்தைத் தடுத்துவிட முடியும். ஒவ்வொரு மாவட்டத்திலும் “போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு” டிஎஸ்பி பதவி உருவாக்கப்பட்டு, இந்தப் பிரிவு வலுப்படுத்தப்படும். அதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
» “பிஹாரில் ஏற்பட்டுள்ளது நல்ல மாற்றம். இது தொடரும்...” - திருப்பூரில் முத்தரசன் பேட்டி
» பி.எம். கிசான்: ஆதார் எண் பதிவு செய்த விவசாயிகளுக்கு மட்டுமே ரூ.2,000 நிதி
அண்டை மாநிலங்களில் இருந்து கஞ்சா கடத்தி வரப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். அதற்கு மாநில எல்லைப்புற மாவட்ட அதிகாரிகள் இதில் கூடுதல் கவனத்தைச் செலுத்த வேண்டும். அண்டை மாநிலக் காவல்துறையின் ஒத்துழைப்பையும் பெற்றுக் கொள்ளலாம். அதே நேரத்தில் எல்லைப்புற சோதனைச் சாவடிகளை வலுப்படுத்திட வேண்டும்.
தேனி, திண்டுக்கல் போன்ற மலையடிவாரப் பகுதிகள், மறைவான இடங்கள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில், இதர பயிர்களுக்கு இடையில் கஞ்சா பயிரிடுவதற்கு வாய்ப்புள்ள காரணத்தினால், மலையை ஒட்டி அமைந்திருக்கும் வேளாண் நிலங்களில் காவல் துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் குறிப்பிட்ட கால இடைவெளியில் சோதனைகள் செய்ய வேண்டும்.
சாதாரணப் பயணிகள் மூலமாகவும் கூரியர் வழியாகவும் போதைப் பொருள் வருவதாகச் சொல்லப்படுகிறது. பயணிகள் பேருந்துகள் கண்காணிக்கப்பட வேண்டும். கூரியர் நிறுவனங்களுக்கு இது குறித்த எச்சரிக்கைக் கடிதத்தை அனுப்பி வைக்க வேண்டும். கடலோர மாவட்டங்களில் கண்காணிப்பை அதிகப்படுத்த வேண்டும்.
ஆயத்தீர்வைத்துறை, வனத்துறை, வருவாய்த்துறை, புலனாய்வுத் துறை, சுங்கத்துறை, போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு மற்றும் காவல்துறையினர் ஆகியோர் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். போதைப் பொருள் தயாரிப்பில் முக்கிய நபர்கள்மற்றும் கடத்தல்காரர்கள் குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்களைச் சமூகத்திற்கு அம்பலப்படுத்தியாக வேண்டும்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் போதைப் பொருள் விற்பனை அதிகம் நடைபெறும் இடங்களை பட்டியலிட்டு, அங்கு கண்காணிப்பை வலுப்படுத்த வேண்டும். போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபடுவோர் வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் தங்களுக்கெனத் தனிக் குழுக்களை ஏற்படுத்திக் கொண்டு, அதில் பள்ளி மற்றும் மாணவர்களை இணைத்து விற்பனை செய்து வருவதாகவும் தகவல்கள் இருக்கிறது. இதனை நுண்ணறிவுக் காவல்துறையினர் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும்.
கல்வி நிறுவனங்களில் உள்ள விடுதிகளைக் கண்காணிக்க வேண்டும். அந்த நிறுவனங்களின் வார்டன்களை அழைத்துப் பேசி, அவர்களுக்கு வழிகாட்டுதலை வழங்கிட வேண்டும். போதைப் பொருள் தொடர்பான ரகசிய தகவல்களை பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் தெரிவிக்கக்கூடிய வகையில் தனியாக ஒரு கட்டணமில்லா தொலைபேசி எண் வழங்கப்பட வேண்டும்.
போதைப் பொருள் தடுப்பு சட்டத்தில் உள்ள பிரிவுகளின் அடிப்படையில் போதைப் பொருள் கடத்துபவர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய கூட்டாளிகளின் சொத்துக்களைப் பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும். போதைப் பொருள் குற்றங்களைச் செய்தவர்களுக்கு ஜாமீன் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வாய்ப்பு என்டிபிஎஸ் சட்டத்திலே (பிரிவு 37) கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே அரசு வழக்கறிஞர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு, இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் உடனே ஜாமினில் செல்வதைத் தடுத்து நிறுத்துங்கள்.
அதேபோல் “மீண்டும், மீண்டும் இந்தக் குற்றத்தைச் செய்யமாட்டார் என நீதிமன்றத்திற்குத் திருப்தியளிக்கக்கூடிய விதத்தில் தகுந்த காரணங்களை சொன்னால் மட்டுமே, இக்குற்றத்தை செய்தவருக்கு ஜாமீன்” என்று இதே பிரிவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆகவே திரும்பத் திரும்ப போதைப் பொருள் குற்றத்தில் ஈடுபடுவோருக்கு எதிராக இச்சட்டப்பிரிவை பயன்படுத்த நீதிமன்றங்களின் உதவியை நாடுங்கள்.
பள்ளிகள், கல்லூரிகள், சமூகக் கூடங்கள் உள்ளிட்ட இடங்களில் போதைப் பொருள் விற்பதற்கு எதிராக அதிகபட்ச தண்டனை வழங்க இச்சட்டத்தின் 32B (d) பிரிவை முழுமையாகப் பயன்படுத்துங்கள். அதிலும் குறிப்பாக இந்தப் பிரிவில், “the fact that offence is committed in other place to which School children and students resort for educational, sports and Social activities” என்று இருக்கும் பிரிவு மிக முக்கியமானது என உங்களுக்கு எல்லாம் தெரியும் என்று நான் நினைக்கிறேன். அந்தப் பிரிவை நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். இந்தச் சட்டத்தின்கீழ் உள்ள அதிகபட்ச சிறைத் தண்டனையை நிச்சயம் பெற்றுக் கொடுக்க முடியும்.
தற்போது தமிழகத்தில் தென் மண்டல காவல் துறைத் தலைவர் அஸ்ரா கார்க் சட்டம், ஒழுங்கு, குற்றச் செயல்களை தடுத்தல் மட்டுமின்றி, போதைப் பொருட்கள் தடுப்பிலும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். இவரைப் போல இதர மண்டலங்களில் உள்ள அதிகாரிகளும் உத்வேகத்துடன் பணியாற்ற வேண்டுமென நான் கேட்டுக் கொள்கிறேன். இதேபோல் பலரும் சிறப்பாகப் பணியாற்றி வந்தாலும், நான் எடுத்துக்காட்டிற்காக அதைக் குறிப்பிட்டுச் சொன்னேன். போதை நடமாட்டத்தை தடுக்கும் நடவடிக்கைகளில் காவல்துறையினர் ஈடுபடும்போது, மற்றவர்கள் போதைப் பொருள் பாதிப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்களைச் செய்ய வேண்டும். போதைப் பொருட்களைப் பயன்படுத்தினால் என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்ற பிரச்சாரத்தை செய்ய வேண்டும்.
போதையின் பாதையில் யாரும் செல்ல வேண்டாம் என்று மன்றாடிக் கேட்டுக் கொள்ளுங்கள். நீங்கள் பாராட்டிச் சீராட்டி வளர்த்த உடம்பை நீங்களே ஏன் கெடுத்துக் கொள்கிறீர்கள்? தீமையை நீங்களே ஏன் விலை கொடுத்து வாங்குகிறீர்கள்? கெடுதலை நீங்களே ஏன் தேடிப் போகிறீர்கள்? என்று அவர்களிடம் கேளுங்கள். போதை உங்கள் சிந்தனையை அழிக்கும்! உற்சாகத்தைக் கெடுக்கும்! வளர்ச்சியைத் தடுக்கும்! எதிர்காலத்தைப் பாழாக்கும்! நண்பர்களிடம் இருந்து உங்களைப் பிரிக்கும்! உறவினர்களைப் பகைக்கும்! மொத்தத்தில் உங்களையே சிதைக்கும்! என்று அவர்களுக்குச் சொல்லுங்கள்.
போதைக்குத் தெரிந்தது ஒன்றே ஒன்றுதான் – அழித்தல்! அழிவுக்குத் துணை போகாதீர்கள்! என்று திரும்பத் திரும்பச் சொல்லுங்கள். போதையுடன் கைக்குலுக்காதீர்கள், வாழ்க்கையே கைநழுவிப் போய்விடும் என அறிவுறுத்துங்கள்.
மீண்டும் மீண்டும் சொல்வது இதுதான் - போதை பாதை அழிவுப்பாதை! அதில் யாரும் செல்லாதீர்கள். மற்றவர்களையும் செல்ல விடாதீர்கள். மற்ற அனைத்து வளர்ச்சியையும் இந்த போதை வளர்ச்சி கெடுத்துவிடும், அழித்துவிடும். அதனால்தான் இந்தப் பிரச்னையில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று உங்களை இந்தக் கூட்டத்திற்கு அழைத்திருக்கிறோம்.
தமிழகத்தின் முதலமைச்சராக சமூக மருத்துவனான தமிழ்நாட்டு எதிர்காலம் குறித்து சிந்தித்து செயலாற்றக்கூடியவன் நான். காவல் துறை அதிகாரிகளை அழைத்து பூட்டிய அறைக்குள் இதனைப் பேசுவதால் பயனில்லை. காவல்துறை மட்டுமல்ல, அத்துறையுடன் சேர்ந்து மக்கள் அனைவரும் காவலர்களாக மாறி இந்தப் போதைப் பாதையை அடைத்தாக வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இதற்கு ஒரு சில முக்கிய அறிவிப்புகளை நான் இங்கே வெளியிட விரும்புகிறேன்.
மதுவிலக்கு அமலாக்கப்பிரிவோடு போதைப் பொருள் நுண்ணறிவு தடுப்புப் பிரிவு இணைக்கப்படும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தேன். அதற்கு விரைவில் அரசாணை வழங்கப்படும். NDPS வழக்குகளை விசாரிக்க, தற்போது 12 சிறப்பு நீதிமன்றங்கள் இருக்கின்றன. இனி இரு மாவட்டங்களுக்கு ஒரு சிறப்பு நீதிமன்றம் என முதற்கட்டமாக அமைக்கப்படும்.
போதைப் பொருள் தடுப்பில் தகவல் தொழில்நுட்பம் முக்கியப் பங்காற்றுகிறது. ஆகவே, இப்பிரிவிற்கு தனியாக ஒரு “சைபர் செல்”உருவாக்கப்படும். போதைப்பொருள் தடுப்புப் பிரிவு – மதுவிலக்கு அமலாக்கப்பிரிவுடன் இணைக்கப்படுவதால், மதுவிலக்குப் பிரிவில் உள்ள “மத்திய நுண்ணறிவுப் பிரிவு” மேலும் வலுப்படுத்தப்படும். இந்த ஆலோசனைகளை, அறிவுரைகளை, புதிய அறிவிப்புகளோடு - ஒரு எச்சரிக்கையையும் விடுக்க நான் விரும்புகிறேன்.
காவல்துறையில் உள்ளவர்கள் தவறு செய்யக்கூடாது என்று திரும்பத் திரும்ப நான் சொல்லி வருகிறேன். சாதாரணத் தவறுகளுக்கே துணைபோகக் கூடாது என்றால், நம்முடைய அமைச்சர் துரைமுருகன் சொன்னதுபோல, ஒரு சமுதாயத்தையே சீரழிக்கும் போதைப் பொருள் நடமாட்டத்திற்கு எந்த விதத்திலும் துணைபோகக் கூடாது.
இதை ஏதோ நான் விளையாட்டாகச் சொல்லவில்லை. இவர் ‘சாஃப்ட் முதலமைச்சர்’ என்று யாரும் கருதிவிட வேண்டாம். நேர்மையானவர்களுக்குத்தான் நான் சாஃப்ட். தவறு செய்வோருக்கு - குறிப்பாக போதைப் பொருள் நடமாட்டத்திற்கு துணை போவோருக்கு நான் சர்வாதிகாரியாக மாறுவேன். அதற்கான அதிகாரத்தை நான் எங்கும் தேடி அலைய வேண்டிய அவசியம் இல்லை. NDPS சட்டத்தில் உள்ள 32B (a) பிரிவை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்தப் பிரிவில் உள்ள, “the fact that the offender holds a public office and that he has taken advantage of that office in committing the offence” என்ற வாசகத்தைக் குறிப்பாக நினைவில் கொள்ளுங்கள்.
ஆனால், அப்படியொரு நிலைமைக்கு என்னையோ அல்லது உங்களையோ உங்களின்கீழ் உள்ள அதிகாரிகள் தள்ளி விடமாட்டார்கள், அப்படியொரு சூழ்நிலையை உருவாக்க மாட்டார்கள் என்று இன்னமும் நம்புகிறேன். நமக்கு, குறிப்பாகத் தமிழ்நாட்டிற்கு, போதைப் பொருள் அறவே கூடாது! அந்த இலக்கை நோக்கி அனைவரும் நடைபோடுவோம். போதைப் பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவோம்" என்று முதல்வர் பேசினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
36 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago