“பிஹாரில் ஏற்பட்டுள்ளது நல்ல மாற்றம். இது தொடரும்...” - திருப்பூரில் முத்தரசன் பேட்டி

By இரா.கார்த்திகேயன்

திருப்பூர்: பிஹார் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை பாராட்டுகிறோம் என, திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் இன்று திருப்பூரில் செய்தியாளர்களிடம் கூறியது: ''இந்திய கம்யூனிஸ் கட்சியின் 25-ம் மாநில மாநாடு திருப்பூர் மாவட்டத்தில் முதல்முறையாக மிகவும் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. திருப்பூர் மாநகரில் நடந்த பிரமாண்ட பேரணி மூலம் எழுச்சி ஏற்பட்டுள்ளது.

மாநாட்டில் 101 மாநிலக் குழு உறுப்பினர்கள் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 44 மாவட்ட அமைப்புகளில் 20-க்கும் மேற்பட்ட புதுமுக இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் கட்சியில் போட்டியிட்டுதான் அனைத்துப் பதவிகளும் நியமிக்கப்படுகிறது. நியமனம் எதுவும் இல்லை. கட்சியில் கோஷ்டி என்ற பேச்சுக்கே இடமில்லை. கட்சி உறுப்பினர் பாதிக்கப்படாத வகையில், ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் 7 பேர் கொண்ட கட்டுப்பாட்டுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு குழுத் தலைவர் கே.சுப்பராயன் எம்.பி. உள்ளார்.

நாட்டில் நிலவும் அரசியல் பிரச்சினைகள் குறித்து, மாநாட்டில் அலசி ஆராய்ந்தோம். நாடாளுமன்றத்தில் ஆட்சி நடத்தும் அதிகாரம் பாஜகவின் கையில் கிடைத்துள்ளது. அரசியலமைப்பு சட்டம் நாட்டை வழிநடத்துவதாக பிரதமர் மோடி சொல்கிறார். ஆனால் அவர் அதற்கு புறம்பாக செயல்படுகிறார். பிறருடைய உத்தரவை செயல்படுத்தக்கூடிய நிர்வாகம் நடப்பது, நாட்டின் ஜனநாயகத்துக்கு எதிரானது.

இன்றைக்கு சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. பல நிறுவனங்கள் வாடகைக்கு விட காத்திருக்கின்றன. தனியார் மற்றும் அரசு துறைகளாக இருந்தாலும், ஒப்பந்த ஊழியர்கள் நியமிக்கப்படுகிறார்கள். கல்வித் துறை, மருத்துவம் மற்றும் உள்ளாட்சித் துறை என பல்வேறு அரசு துறைகளிலேயே அரசு நிர்ணயித்த ஊதியத்தை விட குறைவான ஊதியமே வழங்கப்படுகிறது. அக்னிபத் திட்டம் மூலம், ராணுவத்தை ஆர்எஸ்எஸ் ஆக மாற்ற மத்திய அரசு முயற்சி மேற்கொள்கிறது. 2024-ம் ஆண்டு பாஜக ஆட்சி அகற்றப்பட வேண்டும்.

தமிழகத்தில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தொடர்வதும், தொடர்ந்து வலுப்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம். மின்சார சட்ட திருத்த மசோதா கண்டனத்துக்குரியது. மின்சாரத்தை தனியார்மயமாக்கும் முடிவால், தொழில்கள் மட்டுமில்லை; சாமானிய மக்களும் பாதிக்கப்படுவர்.

இன்றைக்கு பிஹார் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம், நல்ல மாற்றம். இதனை எங்கள் கட்சி வரவேற்கிறது. பாராட்டுகிறது. இது படிப்படியாக தொடரும். பாஜகவை விட்டு மாநில கட்சிகள் ஒவ்வொன்றாக வெளியேறத் தொடங்கிவிட்டன. பாஜக அல்லாத மாநிலங்களில் மாநில கட்சிகள், பாஜகவுக்கு எதிராக ஒன்று திரள வேண்டும்.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி குறிப்பிட்டது போல், ஆக்டோபஸ் மாதிரி மிக மோசமான உயிரினம் பாஜக. அதன் உண்மையான முகம், மக்களிடத்திலும், அரசியல் கட்சிகளிடத்திலும் படிப்படியாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்தி பேசும் மாநிலங்களில் பாஜகவை பலவீனப்படுத்தும் பணிகளை தீவிரமாக மேற்கொள்வோம்” என்று அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE