ஆக.15-ல் அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் - மாவட்ட ஆட்சியர்களுக்கு ஊரக வளர்ச்சி ஆணையர் அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ம் தேதி அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டங்களை நடத்த வேண்டும் என்றும், வீடுகளில் தேசியக் கொடியேற்றுவதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு ஊரக வளர்ச்சித் துறை ஆணையர் தாரேஸ் அகமது அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை மற்றும் வழிகாட்டுதல்களில் கூறியிருப்பதாவது:

சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ம்தேதி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும். கிராமசபைக் கூட்டத்தை ஊராட்சியின் எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையைப் பின்பற்றி அன்று காலை 11 மணியளவில் நடத்த வேண்டும். அனைத்து கிராம மக்களும் கூட்டத்தில் பங்கேற்க ஏதுவாக கூட்டம் நடைபெறும் இடம், நேரம் ஆகியவற்றை கிராம மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

விவாதிக்கும் பொருள்

கிராம ஊராட்சியின் நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம், குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்துதல், குறிப்பாக குடிநீரை சுத்தமான பாத்திரங்களில் மூடிவைத்து உபயோகிப்பது, கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க வேண்டும்.

இந்தியா சுதந்திரம் அடைந்து 75-ம் ஆண்டைக் கொண்டாடும் வகையில் சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா அனைத்து ஊராட்சிகளிலும் கொண்டாடப்படுகிறது. அனைவரின் மனதிலும் தேசம் சுதந்திரம் அடைந்ததன் பெருமிதத்தை உணரும் வகையில் அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி என்ற மாபெரும் இயக்கத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது.

அதன்படி ஆகஸ்ட் 13-ம் தேதிமுதல் 15-ம் தேதி வரை தேசியக்கொடியை அனைத்து வீடுகளிலும் ஏற்றி, சுதந்திரம் மற்றும் அதற்காக பாடுபட்ட தியாகிகளை நினைவில் கொள்ள வேண்டும்.

ஆக.15 முதல் அக்.2 வரை தனி நபர் சுகாதாரம் மற்றும் சுற்றுப்புற தூய்மையை மையப்படுத்தி எழில்மிகு கிராமம் என்ற சிறப்பு பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக கிராம ஊராட்சிக்கான நிறைவான சுகாதாரத் திட்ட அறிக்கை தயாரித்து விவாதிக்கப்பட வேண்டும்.

பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தியை தடை செய்தல், திட்டங்கள் மற்றும் நிதிக்குழு மானிய நிதியில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், ஊரகப் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்தும் நடவடிக்கைகள், நீர்வழிப்பாதை, நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் குறித்து விவாதிக்க வேண்டும்.

மேலும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்டத்துக்கான கணக்கெடுப்பு குறித்து தெரிவித்தல், ஜல் ஜீவன் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், பிரதமரின் குடியிருப்பு திட்டம், சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை, உணவுப்பொருள் வழங்கல் துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE