மறைமலை நகரில் குளம் தோண்டும்போது கிருஷ்ணன் கற்சிலை கண்டெடுப்பு: தொல்லியல் துறை ஆய்வுக்கு உட்படுத்த முடிவு

By செய்திப்பிரிவு

மறைமலை நகர்: மறைமலை நகர் அருகே குளம் தோண்டும்போது கிருஷ்ணன் சிலை கண்டெடுக்கப்பட்டது. இச்சிலை குறித்து, தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகர் அருகே செங்குன்றம் கிராமத்தில் 1 ஏக்கர் 50 சென்ட் பரப்பளவு கொண்ட அய்யா குளம் உள்ளது. இக்குளம் ரூ.30 லட்சம் மதிப்பில் தூர்வாரி சீரமைக்கும் பணி தற்போது நடந்து வருகிறது. அப்போது பொக்லைன் ஓட்டுநர் குளத்தின் மையப் பகுதியில் மண் எடுத்தபோது அங்கு 3.5 அடி உயரம் உள்ள கல்லால் ஆன கிருஷ்ணன் சிலை வெளிவந்துள்ளது.

இந்தத் தகவல் அப்பகுதியில் பரவி மக்கள் திரண்டனர். கண்டெடுக்கப்பட்ட சிலையை அங்கேயே வைத்து பூஜைகள் செய்து வழிபாடு செய்தனர்.

தகவலறிந்த செங்கல்பட்டு வருவாய்த் துறையினர் மற்றும் நகராட்சி அதிகாரிகள் விரைந்து வந்து சிலையை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். சிலையை தங்களுடைய கிராமத்தில் உள்ள கோயிலுக்கு அளிக்குமாறு பொதுமக்கள் அப்போது அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் சிலையை மீட்ட வருவாய்த் துறையினர் கருவூலத்தில் வைத்தனர். விரைவில் தொல்லியல் துறையினரிடம் அளித்து ஆய்வுகள் செய்யப்படும் என வருவாய்த் துறையினர் தெரிவித்தனர்.

இது குறித்து வட்டாட்சியர் நடராஜன் கூறியதாவது: கிருஷ்ணன் நின்று கொண்டு புல்லாங்குழல் ஊதுவது போன்றும் வலது இடது புறத்தில் சங்கு சக்கரம் உள்ளது. இது எந்த வகையான சிலை என்பதை இன்னும் உறுதி செய்ய முடியாத நிலை உள்ளது.

எனவே, தொல்லியல் துறையிடம் ஒப்படைத்து ஆய்வு செய்ய திட்டமிட்டு இருக்கிறோம். ஆய்வுக்குப் பின்பு அருங்காட்சியகத்தில் ஒப்படைப்பதா அல்லது கிராம மக்கள் கேட்டுக் கொண்டது போல் அவர்களிடம் ஒப்படைப்பதா என்பது பற்றி முடிவு செய்யப்படும்.

இவ்வாறு வட்டாட்சியர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE