சென்னை: சென்னை மாமல்லபுரத்தில் கடந்த 28-ம் தேதி தொடங்கி நடந்து வந்த 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இன்று நிறைவு பெற்றது. இதில் 186 நாடுகளில் இருந்து 2000-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், “ஈராயிரம் ஆண்டுப் பழமை வாய்ந்த சங்க இலக்கியப் பாடலில் கணியன் பூங்குன்றனார், “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்றார். அத்தகைய உலகளாவிய உடன்பிறப்புணர்வோடுதான் தமிழ்நாடு அரசு இந்தப் பெருமைமிகு போட்டியை நடத்தியுள்ளது. அனைவரும் மெச்சத்தக்க வகையில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை மிகக் குறுகிய காலத்தில் தமிழ்நாடு அரசு வெகு சிறப்பாக நடத்தி முடித்துள்ளது.
கடந்த 28-ம் தேதி செஸ் ஒலிம்பியாட் விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்து நான் பேசும்போது, “இந்திய நாடு இதுவரை அடையாத ஒரு பெரும்புகழை அடையும் நாளாக இந்த நாள் அமைந்துள்ளது. சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் போட்டியானது, முதன்முதலாக இந்தியாவில் நடக்கிறது என்பது நமக்குக் கிடைத்திருக்கக்கூடிய பெருமை. அதிலும் குறிப்பாகத் தமிழ்நாட்டில் நடைபெறுவது அதைவிட மிகப்பெரிய பெருமை. இதன்மூலமாக இந்தியாவின் புகழ், தமிழ்நாட்டின் புகழ் உலகம் முழுக்க பரவும், உலக நாடுகளிடையே நம்முடைய செல்வாக்கு உயரும்” என்று குறிப்பிட்டேன். அதனைத்தான் கடந்த இரண்டு வாரங்களாக நாம் பார்த்து வருகிறோம். போட்டியில் வெற்றி பெற்றவர்களை விட, நான் அதிகமான மகிழ்ச்சியில் இருக்கிறேன்” என்றார்.
தொடர்ந்து சர்வதேச வீரர்களை குறிப்பிட்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், “என் அன்புக்குரிய வீரர்களே, சென்னையில் உங்களுக்குச் செய்து தரப்பட்ட ஏற்பாடுகளும், இங்கு கழித்த நாட்களும் உங்களுக்கு மகிழ்ச்சியளிப்பதாக இருக்கும் என்று உளமார நம்புகிறேன். உங்களது நாடு, பண்பாடு, மரபு குறித்து நாங்கள் அறிந்துகொள்ளவும் இது ஒரு சிறப்பான நல்வாய்ப்பாக அமைந்தது. செஸ் போட்டியில் பங்கேற்ற நினைவுகளுடன், இம்மண்ணின் பண்பாடு, கலாச்சாரம் மற்றும் உணவின் சுவை ஆகியவற்றையும் நீங்கள் திரும்பிச் செல்கையில் உங்களுடன் கொண்டுசெல்வீர்கள் என்பதில் எனக்கு எந்த ஐயமுமில்லை." என்றும் குறிப்பிட்டார்.
» செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா: கமல் குரலில் சுதந்திரப் போராட்டம், சமூக நீதி வரலாறு நிகழ்த்துக் கலை
» கைதிகளின் ஓவியங்களால் மிளிரும் புதுச்சேரி சிறைச்சாலை: ஆக.15-க்கு தயாராகும் 18 அடி சிறப்பு ஓவியம்
விளையாட்டில் முன்னோடி மாநிலமாக்க திட்டங்கள்:
தொடர்ந்து பேசிய முதல்வர், "தமிழ்நாட்டை விளையாட்டில் ஒரு முன்னோடி மாநிலமாக ஆக்குவதற்கு ‘திராவிட மாடல்’ தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்பான திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி வருகிறது.
* தமிழ்நாட்டில் உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் ஒலிம்பிக் பதக்கங்கள் வெல்வோரை உருவாக்கும் பொருட்டு ‘ஒலிம்பிக் தங்க வேட்டை’ என்ற திட்டம் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
* உலக அளவிலும், தேசிய அளவிலும் பதக்கங்கள் வென்று நாட்டிற்கும். மாநிலத்திற்கும் பெருமை தேடித் தரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு உயரிய ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், கடந்த ஓராண்டில் 1073 விளையாட்டு வீரர்களுக்கு மொத்தம் 26 கோடியே 85 லட்சம் ரூபாய் உயரிய ஊக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
இதில் அதிகமான நிதிக் கொடைகள் செஸ் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் விளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன கருவிகள் மற்றும் பயிற்சி வசதிகளை அளிப்பதற்கான திட்டத்தைப் பெரிய அளவில் விரிவுபடுத்த உள்ளோம். இதன்படி, 50 விளையாட்டு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு, நான்கு ஆண்டுகளில் அவர்களை மெருகேற்ற 60 கோடி ரூபாய் செலவு செய்யப்படும்.
* இதேபோல் கராத்தே, ஸ்குவாஷ், துப்பாக்கி சுடுதல், டோக்கியோ ஒலிம்பிக், பாரா ஒலிம்பிக், வாள் சண்டை போட்டிகளில் பதக்கங்கள் வென்றவர்களுக்கும் சிறப்பு நிதி உதவி செய்யப்பட்டுள்ளது.
* அனைத்துச் சட்டமன்றத் தொகுதிகளிலும் மினி விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்பட உள்ளது.
* தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் – வீராங்கனைகளுக்கு, பன்னாட்டு பயிற்சியாளர்களைக் கொண்டு பயிற்சியளிக்கப்பட உள்ளது. வட சென்னையிலும், கோபாலபுரத்திலும் குத்துச்சண்டை அகாடமிகள் நிறுவப்பட உள்ளன.
* தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு எனப்படும் “ஏறுதழுவுதலுக்கு” பிரம்மாண்டமாக தனி விளையாட்டுக் களம் விரைவில் அமைக்கப்பட உள்ளது.
* சென்னை ஓப்பன் டென்னிஸ் தொடரையும், ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளையும் சென்னையில் நடத்தவும் நாங்கள் முனைப்போடு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம் என்பதையும் உங்களோடு பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
தமிழ்நாட்டை உலகளாவிய விளையாட்டு மையமாக உயர்த்துவதற்கு நாங்கள் தொடர்ந்து முயல்வோம். மேலும், நமது மண்ணின் விளையாட்டுகளை உலக அரங்குக்குக் கொண்டு செல்வதிலும் கவனம் செலுத்தி வருகிறோம். தொடக்க விழாவில் உங்கள் அனைவரின் முன்பும் நிகழ்த்திக் காட்டப்பட்ட சிலம்பாட்டத்துக்கு தேசிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தரவும் முயன்று வருகிறோம்.
தமிழ்நாடு அரசு எடுத்துவரும் முயற்சிகளின் காரணமாக சிலம்பாட்டத்தில் ஒளிரும் வீரர்களுக்கு மற்ற விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படுவதைப் போல பரிசுத் தொகைகளும் - தமிழ்நாட்டின் கல்வி நிறுவனங்கள் மற்றும் பணிவாய்ப்புகளில் இட ஒதுக்கீடும் வழங்கப்பட்டிருக்கிறது.
12 ஒலிம்பிக் விளையாட்டுகள் மற்றும் கபடி, சிலம்பாட்டம் ஆகிய இரண்டு பாரம்பரிய விளையாட்டுகளுக்காக மாநில மற்றும் மாவட்ட அளவிலான "முதலமைச்சர் கோப்பை"க்கான விளையாட்டுப் போட்டிகள் விரைவில் நடைபெற உள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நவீன தேவைகளுக்கு ஏற்ப நம்முடைய விளையாட்டு உட்கட்டமைப்பை புதுப்பிக்க உள்ளோம். அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாடு வளர வேண்டும் என்று உழைத்து வருகிறோம். அதில் விளையாட்டுத் துறையும் முக்கியமானது என்பதை மனதில் வைத்துக் கொண்டு செயல்பட்டு வருகிறோம். இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்குப் பிறகு தமிழ்நாடு அரசின் விளையாட்டுத் துறையானது முன்னிலும் அதிக பாய்ச்சலோடு செல்லும் என்று நான் உறுதி அளிக்கிறேன்.
வெற்றி பெற்ற வீரர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகள். அடுத்தடுத்த ஆண்டுகளில் வெற்றி பெறப் போகும் வீரர்களுக்கும் எனது வாழ்த்துகள். எதிலும் வெற்றி - தோல்வி முக்கியமல்ல, பங்கேற்பு தான் முக்கியமானது. இந்த பங்கேற்பு ஆர்வத்தை எப்போதும் விட்டுவிடாதீர்கள் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
அடுத்த செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்த இருக்கும் புதாபெஸ்த் நகருக்கு என் வாழ்த்துகள்!” என்று பேசியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
40 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago