இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணையை தமிழ்நாட்டில் நடத்த மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் குறித்து விசாரிப்பதற்காக 12 உறுப்பினர்கள் கொண்ட குழுவை ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவநீதம்பிள்ளை அமைத்திருக்கிறார். விசாரணைக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக ஐ.நா.வின் மூத்த அதிகாரிகளில் ஒருவரான சான்ட்ரா பெய்தாஸ் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
இலங்கைப் போரில் ஒன்றரை லட்சம் அப்பாவி தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதற்கு நீதி பெற்றுத் தருவதற்கான முயற்சிகளில் இது குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும்.
இலங்கையில் கடந்த 2009ஆம் ஆண்டில் நடைபெற்ற இறுதிகட்ட போரின் போது போர் தொடர்பான சர்வதேச விதிமுறைகள் அனைத்தையும் இலங்கை மீறியது. தடை செய்யப்பட்ட கொத்து குண்டுகள் உள்ளிட்ட அனைத்து ஆயுதங்களையும் பயன்படுத்தி அப்பாவி தமிழர்களை சிங்களப்படையினர் கொன்று குவித்தனர்.
போர் முடிந்து ஐந்தாண்டுகளுக்கு மேலாகியும் இதற்குக் காரணமானவர்களுக்கு தண்டனை கிடைக்கவில்லையே என்று வெம்பிக் கொண்டிருந்த தமிழர்களுக்கு நம்பிக்கையளிக்கும் அளிக்கும் வகையில் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது. இதை பாட்டாளி மக்கள் கட்சி வரவேற்கிறது.
ஐ.நா. மனித உரிமை ஆணையரின் விசாரணை குழுவுக்கு ஒருங்கிணைப்பாளராக அமர்த்தப்பட்டுள்ள சான்ட்ரா பெய்தாஸ் மனித உரிமை தொடர்பான விசாரணைகளை கையாள்வதில் சிறந்த அனுபவம் கொண்டவராவார். தெற்கு சூடானில் நடந்த விடுதலைப் போரின் இறுதி கட்டத்தில் அங்குள்ள பெண்கள் எத்தகைய பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர் என்பது குறித்த ஆதாரங்களை ஐ.நா.விடம் அறிக்கையாக தாக்கல் செய்தவர்.
உலக பொது மன்னிப்பு அவை உள்ளிட்ட மனித உரிமை அமைப்புகளில் நீண்ட காலம் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இம்மாத மத்தியில் தொடங்கி அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை மொத்தம் 10 மாதங்களுக்கு பெய்தாஸ் குழு நடத்தவிருக்கும் விசாரணையின் முடிவில் இலங்கைப் போர்க்குற்றவாளிகளின் பட்டியல் அடங்கிய அறிக்கை ஐ.நாவிடம் தாக்கல் செய்யப்படும்; போர்க்குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப்படுவர் என்ற நம்பிக்கை உள்ளது.
ஆனால், இந்த விசாரணையை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், விசாரணைக் குழுவினரை இலங்கைக்குள் அனுமதிக்க முடியாது என்றும் ஐ.நா. மனித உரிமைப் பேரவைக்கான இலங்கையின் தூதர் ரவிநாத ஆரிய சின்ஹா அறிவித்துள்ளார். உரிமைகளைக் கோரியதற்காக அப்பாவி தமிழர்களை கொடூரமாக கொலை செய்த சிங்கள அரசு, இதனால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு எந்த நியாயமும் கிடைத்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளது. அதனால் தான் ஐ.நா. அமைப்புக்கே சவால் விடும் வகையில் விசாரணையை அனுமதிக்க முடியாது என்று மிகவும் திமிருடன் அறிவித்திருக்கிறது. இலங்கைக்கு எதிரான இந்த விசாரணை நடத்தப்படாவிட்டால், தமிழர்களுக்கு நீதி கிடைப்பது தடைபடும்.
இலங்கையில் நாட்டையும் இழந்து, உரிமைகளையும் இழந்த தமிழர்கள் தங்களது உறவுகள் கொல்லப்பட்டதற்காவது நீதி கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். பால் மனம் மாறாத பாலகன் பாலச்சந்திரன், செய்திவாசிப்பாளர் இசைப்பிரியா ஆகியோர் கொடூரமான முறையில் கொலை செய்யப்படும் காட்சிகளை உலகமே பார்த்து கண்ணீர் வடித்த பிறகும் அதற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வில்லை என்றால் நீதி, மனித நேயம், ஐ.நா. போன்ற சொற்கள் பொருள் இழந்துவிடும்.
மத்தியில் இதுவரை ஆட்சி செய்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இலங்கைக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த நிலையில்,மத்தியில் புதிதாக பதவியேற்றுள்ள நரேந்திர மோடி தலைமையிலான அரசு தங்களுக்கு நீதி வழங்கும் என்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் நம்புகின்றனர்.
எனவே, இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணையை கொழும்பில் நடத்த ராஜபக்சே அரசு மறுத்துவிட்ட நிலையில், அந்த விசாரணையை தமிழ்நாட்டில் நடத்தவும், இலங்கைப் போரில் பாதிக்கப்பட்டு உலகம் முழுவதும் தஞ்சமடைந்துள்ள தமிழர்களும், தமிழகத்தில் உள்ள ஈழ அகதிகளும் விசாரணையில் அச்சமின்றி பங்கேற்கவும் மத்திய அரசு அனுமதிக்க வேண்டும். இதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்று பட்டு குரல் கொடுக்க வேண்டும்" என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
40 mins ago
தமிழகம்
52 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago