சென்னையில் மழைநீர் தேக்க பிரச்சினைக்கு 3 மாதங்களில் நிரந்தர தீர்வு: கே.என்.நேரு உறுதி

By செய்திப்பிரிவு

சென்னை: “சென்னையில் மழைநீர் தேக்க பிரச்சினைக்கு 3 மாதங்களில் நிரந்தர தீர்வு காணப்படும்” என்று அமைச்சர் கே.என்.நேரு உறுதிபட தெரிவித்தார்.

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் சார்பில் சென்னை வேளச்சேரி மடுவின்கரை பகுதியில் அமைக்கப்படவுள்ள புதிய கழிவுநீர் உந்து நிலையத்திற்கு அமைச்சர்கள் கே.என் நேரு மற்றும் மா.சுப்பிரமணியன் ஆகியோர் அடிக்கல் நாட்டினர்.

இதனை தொடர்ந்து பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், "வேளச்சேரி தொகுதிக்கு உட்பட்ட மடுவின்கரை பகுதியில் உள்ள புதுநகர் பகுதியில், 28 தெருக்கள் உள்ளன. இங்கு அதிகம் இஸ்லாமிய மக்கள் வசிக்கும் பகுதியாக உள்ளது.

இங்கு அடிப்படை பிரச்சினைகள் கூட தீர்வு காணப்படாமல் 5 ஆயிரம் குடும்பங்கள் குறுகிய நிலபரப்பில் வசித்து வருகின்றனர். இதனால் அடிக்கடி கழிவு நீர் அடைப்பு ஏற்பட்டு, அவதிக்குள்ளாகியுள்ளனர். இதனை சரி செய்ய, நிரந்த தீர்வு காண கழிவு நீர் உந்து நிலையம் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதற்காக பொது நல சங்கத்திற்கு சொந்தமான கட்டிடத்தை அரசுக்கு வழங்கி பிரச்சினைக்கு தீர்வு காண வழிவகை செய்யப்பட்டுள்ளது" என்றார்.

தொடர்ந்து பேசிய நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே என்.நேரு," சென்னையில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 2 அல்லது 3 மாதங்களில் மழைநீர் தேக்க பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும். சென்னையில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்கான திட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக கழிவுநீர் தேங்காத வகையில் கழிவுநீர் உந்து நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE