அதிமுக பொதுக்குழு வழக்கு: ஆக.10-க்கு விசாரணை ஒத்திவைப்பு

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கின் விசாரணையை வரும் ஆகஸ்ட் 10-ம் தேதிக்கு தள்ளிவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஜூலை 11-ம் தேதி கூட்டப்பட்ட அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரியும், அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டது செல்லாது என்று அறிவிக்கக் கோரியும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர். இதை விசாரித்த தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, திட்டமிட்டபடி பொதுக்குழுவை நடத்தலாம் என்று தீர்ப்பளித்தார்.

இதை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, இந்த வழக்கை மீண்டும் சென்னை உயர் நீதிமன்றமே 2 வாரங்களில் விசாரித்து தீர்வு காண உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த வழக்குகள் நீதிபதி கிருஷணன் ராமசாமியிடம் பட்டியலிடப்பட்டிருந்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு விசாரணையை வேறு நீதிபதிக்கு மாற்றக் கோரி ஓபிஎஸ், வைரமுத்து ஆகியோர் சார்பில் உயர் நீதிமன்ற பதிவுத் துறையிடம் கடிதம் கொடுக்கப்பட்டது. தலைமை நீதிபதியிடமும் முறையிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இந்த வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றக் கோரி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி தலைமை நீதிபதி பரிந்துரை அளித்திருந்தார். இதையடுத்து உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் இந்த வழக்கை விசாரிப்பார் என்று தலைமை நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "இந்த வழக்கில் டெல்லியிலிருந்து மூத்த வழக்கறிஞர் ஆஜராக இருப்பதால், விசாரணையை நாளை மறுநாளுக்கு தள்ளிவைக்க வேண்டும்" என கோரிக்கை விடுத்தார். இந்த கோரிக்கையை ஏற்று, விசாரணையை வரும ஆகஸ்ட் 10-ம் தேதி பிற்பகல் 2.15 மணிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE