நெல் மூட்டைகளை பாதுகாக்க கிடங்குகளை அதிகரிக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

By செய்திப்பிரிவு

சென்னை: நெல் உற்பத்தியில் 18% மட்டுமே சேமிக்க முடியும்; கிடங்குகளை அதிகரிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ''தமிழகத்தின் பெரும்பான்மையான பகுதிகளில் பெய்து வரும் மழையால், பல இடங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து நாசமாகியுள்ளன. கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை சேமித்து வைக்கத் தேவையான அளவுக்கு கிடங்குகள் இல்லாதது தான் காரணம் எனும் நிலையில், கிடங்குகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படாதது ஏமாற்றமளிக்கிறது.

கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. எதிர்பாராத இந்த மழையால் மாநிலத்தின் பெரும்பான்மையான இடங்களில் அரசால் கொள்முதல் செய்து வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளன. இதை தமிழக உணவுத்துறை அமைச்சரும், முதலமைச்சரும் ஒப்புக்கொண்டுள்ளனர். இதற்கானத் தீர்வு கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை சேமித்து வைப்பதற்காக கிடங்கு வசதியை அதிகரிப்பது தான். இதைத் தான் பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

தமிழகத்தில் 2021-22 ஆம் ஆண்டில் 118 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் விளைந்துள்ளன. அவற்றில் 80.25 லட்சம் டன் நெல் ஆகும். ஆனால், இதில் பாதியளவு நெல் கூட அரசால் கொள்முதல் செய்யப்படுவதில்லை என்பது தான் வேதனையான உண்மை ஆகும். 2020-21 ஆம் ஆண்டில் 39.39 லட்சம் டன்னும், 2021-22 ஆம் ஆண்டில் மார்ச் 31-ஆம் தேதி வரை 29.48 லட்சம் டன்னும் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இது மிகவும் குறைவு என்பது ஒருபுறமிருக்க கொள்முதல் செய்யப்படும் நெல்மூட்டைகளை சேமித்து வைக்க போதுமான கிடங்கு வசதிகள் இல்லை என்பது கூடுதல் உண்மை.

இன்றைய நிலவரப்படி தமிழக அரசுக்கு சொந்தமான 260 கிடங்குகளில் 13.31 லட்சம் டன் நெல்லை மட்டும் தான் சேமித்து வைக்க முடியும். இது தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் நெல்லின் அளவில் வெறும் 18 விழுக்காடும், தமிழ்நாடு நுகர்பொருள் வாரியத்தால் கொள்முதல் செய்யப்படும் நெல்லின் அளவில் மூன்றில் ஒரு பங்கும் மட்டும் தான். மீதமுள்ள நெல்லில் பெரும்பகுதி தமிழகம் முழுவதும் உள்ள 103 திறந்தவெளி கிடங்குகளில் தான் சேமித்து வைக்கப்படுகின்றன. திறந்தவெளி கிடங்குகளில் சேமித்து வைக்கப்படும் நெல் மூட்டைகள் தான் மழைக்காலங்களில் நனைந்து, அழுகி வீணாகின்றன. அதனால் தான், நியாயவிலைக்கடைகளில் வழங்கப்படும் அரிசி தரமற்றதாக உள்ளது.

தமிழகத்தின் பொது வினியோகத் திட்டத்திற்கான ஆண்டு அரிசி தேவை 38 லட்சம் டன் ஆகும். இதற்காக அரிசியாகவும், நெல்லாகவும் சுமார் 60 லட்சம் டன்களை சேமித்து வைக்க வேண்டியிருக்கும். நெல் பல்வேறு கால கட்டங்களில் கொள்முதல் செய்யப்படும்; மாதத்திற்கு 3.20 லட்சம் டன் அரிசி வினியோகிக்கப்படும் என்பதைக் கணக்கில் கொண்டாலும் கூட, ஏதேனும் ஒரு கால கட்டத்தில் 40 லட்சம் டன் வரை நெல்லையும், அரிசியையும் இருப்பு வைக்க நேரிடும். ஆனால், அந்த அளவுக்கு தமிழகத்தில் கிடங்குகள் இல்லை. இந்த கிடங்கு பற்றாக்குறை உடனடியாக சரி செய்யப்பட வேண்டும்.

தமிழகத்தில் புதிய கிடங்குகளை உருவாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இப்போது கூட 3 லட்சம் டன் கொள்ளளவுள்ள கிடங்குகளை அமைக்க தமிழக அரசு ஆணையிட்டிருக்கிறது. ஆனால், இந்த கிடங்குகளை கட்டி முடிக்க குறைந்தது 4 ஆண்டுகளாகி விடும். இந்த அளவும், வேகமும் போதுமானதல்ல. அளவையும், வேகத்தையும் தமிழக அரசு உடனடியாக அதிகரிக்க வேண்டும்.

அதேபோல், தமிழத்தில் 2,932 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளன. இந்த கொள்முதல் நிலையங்களுக்கு ஒவ்வொரு நாளும் 5000 மூட்டைகள் நெல் கொண்டு வரப்படுகிறது. ஆனால், ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் தினமும் 1000 மூட்டைகள் நெல் மட்டும் தான் கொள்முதல் செய்யப்படுகிறது. இதற்குக் காரணம் தமிழகத்தில் போதிய அளவில் கிடங்குகள் இல்லாதது தான்.

தமிழகத்தில் உழவர்கள் அரும்பாடுபட்டு விளைவித்த நெல், மழை நீரில் நனைந்து வீணாவதை தடுக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதற்காகவே 2022 - 23ஆம் ஆண்டை வேளாண் விளைபொருட்கள் கொள்முதல் கட்டமைப்பு மேம்பாட்டு சிறப்பாண்டாக அறிவித்து, பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று நடப்பாண்டிற்கான வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையில் பா.ம.க. யோசனை தெரிவித்திருந்தது. அதன் முக்கியத்துவத்தை தமிழ்நாடு அரசு இப்போதாவது புரிந்து கொண்டு கொள்முதல் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும்.

தமிழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின் எண்ணிக்கை 3,500 ஆக உயர்த்தப்பட வேண்டும்; கிடங்குகளின் எண்ணிக்கை 400 ஆகவும், கொள்ளளவு 30 லட்சம் டன்னாகவும் உயர்த்தப்பட வேண்டும். ஒவ்வொரு நெல் கொள்முதல் நிலையத்திலும் குறைந்தது 5000 மூட்டைகள் சேமித்து வைப்பதற்கு வசதிகளை செய்ய வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.'' இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்