பண்டிகை காலங்களில் சொந்த ஊருக்குச் செல்வது, அதுவும் குறிப்பாக சென்னையிலிருந்து வெளியூர்களுக்குச் செல்வது பெரிதினும் பெரிய சவால். அந்தச் சவாலை சமாளித்து டிக்கெட் வாங்கிவிட்டாலும் பயணத்தை சுற்றியிருக்கும் சர்ச்சைகள் ஏராளம்.
ஆம். வழக்கமாக சென்னை, மதுரை, கோவை, சேலம், திருச்சி என்று வாடிக்கையாளர்களை வரவேற்றுக் கொண்டிருக்கும் அரசு, ஆம்னி பஸ் டிரைவர்களும், கண்டக்டர்களும் அன்றுமட்டும் ஒரு கடினமான அதிகாரியாக மாறியிருப்பார்கள்.
"சீட் இல்லைப்பா, எல்லாம் ஃபுல், வேற பஸ் பாருங்க, சீசன் டைம்ல இப்ப வந்தா எப்டி.., கடைசி சீட் வேணா இருக்கு.." இப்படி விதவிதமாக பதில்களை சொல்லிக் கொண்டிருப்பார்கள்
உற்றார், உறவினருக்கு வாங்கிய பரிசுப் பொருட்களுடனும், எப்படியாவது வீட்டுக்குச் சென்றுவிட வேண்டும் என்ற கனவுடனும் அரசுப் பேருந்துகள் நிற்குமிடத்துக்கும் ஆம்னி பேருந்துகள் நிலையத்துக்கும் இடையே 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஓடும் வேகத்தில் ஓடித்திரியும் உசேன் போல்டுகளைப் பார்க்கலாம். உணர்வுபூர்வமாக சற்றே பரிதாபமான காட்சியே அது.
உங்களுக்கும்கூட இந்த அனுபவம் இருந்திருக்கும். அத்தகைய அனுபவமும் அதைச் சார்ந்த அரசியலும் குறித்ததே இந்த செய்தி அலசல்.
இதற்கான மெனக்கெடலில் முதல் முயற்சியாக சீசன் வேளையில் உங்களது வெளியூர் பயணம் பற்றிய அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்களேன் என முகநூலில் தோழர்களிடம் கேட்டிருந்தேன்.
பெரும்பாலோனோர் நெருக்கடி காலங்களில் ஆம்னி பேருந்துகளின் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது, கட்டணத்துக்கேற்ற வசதியை அளிப்பதில்லை, அச்சுறுத்தும் வேகத்தில் பேருந்துகளை இயக்குகின்றனர் என அடுக்கடுக்காக புகார்களை முன்வைத்தனர்.
மக்கள் புகார்களை தொகுத்துக் கொண்டு மாநில ஆம்னி பேருந்துகள் உரிமையாளர் சங்கத் தலைவர் அப்சலை அணுகினோம். அவர் கூறியதாவது: "தீபாவளி நெருங்கிவிட்டது. இந்த தீபாவளிக்கு ஆம்னி பேருந்துகளில் இவ்வளவு கட்டணம்தான் பெற வேண்டும் என உயர் நீதிமன்றமே உத்தரவிட்டுள்ளது. இது ஒரு வரவேற்கத்தக்க உத்தரவு. நீதிமன்ற அறிவுறுத்தலை கடைபிடிக்க அனைத்து ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு முன்னர், சங்கம் நிர்ணயித்த கூடுதல் கட்டணத்தை செலுத்தி டிக்கெட்டுகள் வாங்கியவர்களுக்கு அவற்றைத் திருப்பிச் செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன" என்றார்.
இவ்வளவு முறையாக விஷயங்கள் நடைபெறுகிறது என்றால் பிரச்சினை எங்கு இருக்கிறது எனக் கேட்டபோது, அவர் சொன்ன பல விவரங்கள் அரசால் கவனிக்கத்தக்கது.
"கூடுதல் கட்டணப் புகார்களில் சிக்கும் பேருந்துகள் எல்லாமே சிலரால் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்படுபவை. மக்களின் அவசரத்தை அறிந்து கொண்டு அதைவைத்து பேரம் பேசி சிலர் முறைகேடாக தொழில் செய்கின்றனர். அவ்வாறான ஒப்பந்ததாரர்களை பலமுறை அழைத்து நாங்கள் பேசியிருக்கிறோம். ஆம்னி பேருந்துகள் நிலையத்தைப் பயன்படுத்திக் கொள்ளவும், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மக்களிடம் வசூலிக்கவும் வலியுறுத்திவிட்டோம். ஆனால், அவர்கள் எந்தவித கட்டுப்பாட்டுக்குள்ளும் வர விரும்பவில்லை. காரணம் ஓரிரு தினங்களிலேயே கிடைத்துவிடும் கொள்ளை லாபம். இப்படி பேருந்து நிலையங்களில் இல்லாமல் கண்ட இடங்களில் பயணிகளை ஏற்றும் பேருந்துகளில்தான் கூடுதல் கட்டணம்; சில நேரங்களில் இருமடங்குகூட கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படுகின்றன.
இவர்களைக் கட்டுப்படுத்த காவல்துறை நினைத்தால் மட்டுமே முடியும். ஆனால், சில இடங்களில் கடமையைத் தாண்டியும் லஞ்சம் ஓங்கி நிற்கிறது. விளைவு, பயணிகள் அசவுகரியம். கட்டணத்தையும் கொட்டிக் கொடுத்து, வசதியில்லாத பேருந்தில் ஏறிக் கொண்டு ஓட்டுநர் பேருந்தை விரட்ட உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு சொந்த ஊர் செல்கிறார்கள்.
ஒப்பந்த அடிப்படையில் பேருந்துகளை இயக்குபவர்களை நெறிமுறைப்படுத்த மாநில காவல்துறையும், போக்குவரத்து அமைச்சகமும் இணைந்து செயல்பட்டாலே மக்கள் பயணத்தை இனிதாக்க முடியும்” என்றார்.
அப்போது எனக்கு அண்மையில் நேர்ந்த அனுபவத்தைக் குறிப்பிட்டு சில கேள்விகளை முன்வைத்தேன்.
ப்ளாஷ் பேக்...
ஆயுதபூஜையை ஒட்டி 5 நாள் விடுமுறை விடப்பட்டிருந்தது. அப்போதுதான் ஊரில் இருந்து ஒரு சோகத் தகவல் வர, ஆன்லைனில் அவசரமாக டிக்கெட்டுகளைத் தேடினேன். இரவு 10.30 மணிக்கு ஒரு ஸ்லீப்பர் ஏ.சி. பேருந்தில் இரண்டு டிக்கெட்டுகள் மட்டுமே இருந்தது. உடனே அதில் ஒன்றை புக் செய்துவிட்டு 10.10 மணியளவில் டிக்கெட்டில் குறிப்பிட்டிருந்த போர்டிங் பாயின்டுக்குச் சென்றுவிட்டேன்.
அவர்கள் கொடுத்திருந்த எண்ணில் தொடர்பு கொண்டு, அசோக் பில்லரில் நிற்கிறேன் என்றேன். மறுமுனையில், 'மேடம் வெயிட் பண்ணுங்க. கொஞ்சம் லேட்டாகும். சீசன் டைம்னால ஒரே டிராபிக். ஸாரி' என்ற கனிவான குரல் கேட்டது. சரியென்று நின்றிருந்தேன் மணி 11.00. மீண்டும் அதே நம்பருக்கு அழைத்தேன். இதோ வந்துவிடும்.. என்ற அவசரமாக துண்டிக்கப்பட்டது அழைப்பு. 11.30 மணியிருக்கும் என்னைக் கடந்து நான் செல்ல வேண்டிய பேருந்து அதிவேகமாக பாய்ந்து செல்வதைப் பார்த்து அதிர்ந்துபோனேன்.
அதே டிராவல்ஸ் பெயர், அதே ஸ்லீப்பர் ஏ.சி. பேருந்து. செய்வதறியாது ஒரு சில நொடிகள் பதற்றத்துக்குப் பின் மீண்டும் அந்த எண்ணுக்கு போன் செய்தேன். "மேடம்.. நீங்க இன்னும் ஏறலையா. பஸ் வந்திருக்குமே.. டிரைவர் நம்பர் தாரேன் பேசுங்க" என்றவுடன் எனக்கு ஆத்திரம் வந்தது. "நீங்கள் சொன்ன இடத்தில் நான் நின்று கொண்டிருக்கிறேன். என்னைத் தாண்டி அந்த பேருந்து செல்கிறது. இப்போ நான் எதுக்கு டிரைவரிடம் பேச வேண்டும். ஏமாற்றாதீர்கள். நான் பத்திரிகையில் பணிபுரிகிறேன்" என்றேன். எதிர்முனையில் பம்மிய நபர் இதோ லைன்ல வரேன் என்று சொல்லி துண்டித்தார்.
அசோக் பில்லரில் இருந்து மீண்டும் மைலாப்பூரில் உள்ள வீட்டுக்குச் செல்லலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தபோதே ஓர் அழைப்பு. "மேடம் நான் டிரைவர் பேசுறேன். உங்களுக்கு கால் பண்ணி பார்த்தோம்.. நாட் ரீச்சபிள்னு வந்துச்சு. 5 நிமிஷம் வெயிட் பண்ணிட்டு கிளம்பிட்டோம். இப்ப வண்டி ஆலந்தூர் மெட்ரோ கிட்ட இருக்கு. உங்களுக்காகவே வெயிட் பண்ணிட்டு இருக்கோம். வந்துடுங்க ப்ளீஸ்" என்றார் டிரைவர்.
"பொய் சொல்லாதீங்க சார். என் கண் முன்னாடியே உங்க பஸ் போறத நான் பார்த்தேன். பிக்அப் பாயின்டுன்னு நீங்க சொன்ன இடத்துலதான் நின்னேன். அந்த இடத்தில் நீங்க நிறுத்தல. அது உங்களோட தப்பு. இப்ப என்ன ஆலந்தூர் வரச் சொன்னா எப்படி வர முடியும்?” எனக் கேட்க.. மறுபடியும் எதிர்முனையில் கெஞ்சல்.
துக்க நிகழ்வுக்கு செல்லாமல் இருக்க முடியாது. மேலும், அசோக் பில்லரில் இருந்து தனியாக மைலாப்பூர் செல்வதைக் காட்டிலும் ஆலந்தூர் பக்கமே. ரூ.1265 டிக்கெட் செலவு வேறு.
எல்லாவற்றையும் யோசித்து ஒரு ஆட்டோவில் ஆலந்தூர் புறப்பட்டேன். ஆனால், ஈக்காட்டுத்தாங்கல் பாலம் ஏறும்போதே பயம் தொற்றிக் கொண்டது. மீண்டும் பஸ் டிரைவருக்குப் பேசி நான் வந்து கொண்டிருக்கிறேன். ஒரு பத்திரிகையாளரையே நீங்கள் இப்படி ஏமாற்றினீர்கள் என்றால் சாதாரண மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றுவீர்கள் என கடிந்து கொண்டேன். என் நோக்கம், நான் செல்லும் ஆட்டோ ஓட்டுநருக்கும் நான் ஒரு பத்திரிகையில் பணிபுரிகிறேன் என்பதை கன்வே செய்துவிட வேண்டும் என்பதாகவே இருந்தது.
சில நிமிடங்களில் பேருந்தை பார்த்துவிட்டேன். "என்னைவிட்டுச் சென்றதற்கு தண்டனையாக ஆட்டோ கட்டணத்தை நீங்களே கொடுங்கள்" என்று கூறிவிட்டு பஸ்ஸில் ஏறினேன்.
அன்றைய தினத்தின் அந்த ஒரு மணி நேரம் ஏற்படுத்திய கோபம், அச்சம், கசப்புணர்வுகள் என்றும் என் நினைவிலிருந்து நீங்காது. ஒருவகையில் இந்த கசப்பனுபவம்கூட இந்தச் செய்திக்கான உந்துதல் என்றால் அதுமிகையல்ல.
இந்த பிளாஷ்பேக்கை சுருக்கமாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தலைவர் அப்சலிடம் கூறினேன். நான் பயணித்த டிராவல்ஸின் பெயரையும் கேட்டுக் கொண்டு ஆன்லைன் டிக்கெட் புக்கிங் பற்றி பேசத் தொடங்கினார்.
அவர் மேலும் கூறியதாவது:
"முதலில் நீங்கள் பயணித்த அந்த டிராவல்ஸ் நான் ஏற்கெனவே கூறியதுபோல் ஒப்பந்த அடிப்படையில் இயங்குவதாகும். இப்படி ஒப்பந்த அடிப்படையில் இயங்கும் ஆம்னி பேருந்துகளின் தவறுகளால்தான் ஒட்டுமொத்தமாக ஆம்னி பேருந்துகள் அனைத்துமே களங்கத்துக்குள்ளாகின்றன.
ஆன்லைனில் பஸ் டிக்கெட் பதிவு செய்யும் தனியார் நிறுவனங்கள் புற்றீசல்போல்கள் போல் பெருகிவிட்டன. ஏதோ வெளிநாடுகளில் இருந்துகொண்டு இவற்றின் முதலாளிகள் இங்கே வர்த்தகம் செய்கின்றனர். அவர்களது முழு இலக்கு பிசினஸ் மட்டுமே. ஒரு பெரிய ஆன்லைன் பிராண்ட் இத்தகைய டிராவல்ஸ் நிறுவனத்தை பரிந்துரைக்கும்போது வாடிக்கையாளர்கள் தயக்கமின்றி டிக்கெட் முன்பதிவு செய்யத்தான் செய்வார்கள்.
டிராவல்ஸ் நிறுவனங்களின் சேவை தரத்தைப் பொறுத்தே அவற்றைப் பட்டியிலிடுவது குறித்து இத்தகைய ஆன்லைன் டிக்கெட் புக்கிங் நிறுவனங்கள் முடிவு செய்ய வேண்டும். ஆனால், எத்தனை நிறுவனங்கள் அவ்வாறாக செய்கின்றன? தொழில் இலக்கு லாபமாக இருந்தாலும் அது நியாயமாக இருக்க வேண்டும். இரண்டாவதாக, மக்கள் இதுபோன்ற அசவுகரியங்களை சந்திக்கும்போது எந்த ஆன்லைன் நிறுவனத்தில் டிக்கெட் புக் செய்தார்களோ அந்த நிறுவனத்திடம் புகார் தெரிவிக்க வேண்டும். தொடர்ச்சியாக புகார்கள் வந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழலுக்கு நிர்பந்திக்கப்படுவார்கள்.
இதுதவிர போக்குவரத்து அமைச்சகமும் இத்தகைய ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு நிறுவனங்களுக்கான சட்டதிட்டங்களை வகுத்து கண்காணிக்க வேண்டும்." இவ்வாறு அவர் கூறினார்.
முறையாக ஆம்னி பேருந்து போக்குவரத்து மையங்களில் இருந்தும் இயங்கும் பேருந்துகளில் பயணிக்கும்போது கட்டணக் குறைபாடோ, அதிவேகமாக பஸ் இயக்கப்பட்டாலோ, அல்லது ஓட்டுநர், நடத்துநர் பெண் பயணியிடம் தகராறு செய்தாலோ 9940155547 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார்களைப் பதிவு செய்யலாம். புகாரின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பிரத்யேக புகார் எண் ஏதாவது இருக்கிறதா என்ற கேள்விக்கு இப்போதைக்கு இல்லை. இதுபோன்ற அமைப்பை ஏற்படுத்த வேண்டுமென்றால் அது அனைத்து பேருந்து உரிமையாளர்களுடனும் விரிவான பேச்சுவார்த்தை ஏற்படுத்தியே செயல்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.
இந்த முறை பெண்களுக்காக தீபாவளிப் பண்டிகையை ஒட்டி சென்னையில் இருந்து மதுரைக்கும், மதுரையிலிருந்து சென்னைக்கும் ஒரே ஒரு அனைத்து மகளிர் பஸ் இயக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
சரி ஆம்னி பேருந்துகளில் மட்டும்தான் இத்தகைய பிரச்சினைகள் இருக்கின்றனவா அரசுப் பேருந்துகளில் சீசன் பயணம் சுமுகமாக இருக்கிறதா என்று கேட்டால், அங்குள்ள சிக்கல்கள் குறித்து மக்கள் கூறுவது இன்னும் மலைப்பாக இருக்கிறது.
சக ஊழியருக்கு சொந்த ஊர் திருத்தணி. அவர் பண்டிகை காலத்தில் சொந்த ஊருக்குச் சென்றபோது நேர்ந்த அனுபவத்தைக் கூறினார். "பண்டிகை காலத்தில் திருத்தணிக்குச் செல்ல சென்னை - திருப்பதி பேருந்தில் ஏறினேன். அதில்மட்டுமே இடமிருந்தது. ஆனால், நடத்துநர் என்னிடம் திருப்பதிக்கான கட்டணத்தை பெற்றுக் கொண்டார். ஊருக்கு சென்றே ஆக வேண்டும் என்ற நெருக்கடியால் வேறு வழியின்றி திருப்பதிக்கு டிக்கெட் எடுத்துவிட்டு திருத்தணியில் இறங்கினேன். மீறி பேசினால், பேருந்து பைபாஸில் செல்லும் நீ இறங்கிக் கொள் என்பார் நடத்துனர். அந்த அனுபவமும் இருக்கிறது."என்றார்.
மற்றொரு சகா கூறும்போது, "பண்டிகை காலத்தைவிடுங்க மூன்று நாள் சேர்ந்தாப்ல் லீவு விட்டுட்டா போதும் இந்த பஸ்காரங்களுக்கு.. படி காசு கல்லா கட்றதுலயே குறியா இருப்பாங்க. சின்ன குழந்தைகளுக்கு அரை டிக்கெட் எடுத்தா உட்கார இடம் தரணும். ஆனா, அரை டிக்கெட்டும் வாங்கிவிட்டு குழந்தைய மடியிலும் உட்கார வைக்கச் சொல்வார்கள். அப்புறம், சென்னை - மதுரை பேருந்தில் ஏறினால் வழியில் எங்கு இறங்கினாலும் விழுப்புரம் டிக்கெட்தான் வாங்க வேண்டும்" என்றார். இப்படித்தான் சீசன் நேரத்தில் எந்தப் பகுதிக்குச் சென்றாலும் இடையில் ஏதாவது ஊரில் இறங்க வேண்டும் என்றாலும் இலக்குக்கான கட்டணமே பெற வேண்டும். இந்த கட்டண கொள்ளையை எந்த வகையில் சேர்ப்பது என பொதுமக்கள் சிலர் பொருமுகின்றனர்.
இது தொடர்பாக அரசு போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவரைத் தொடர்பு கொண்டோம். மதுரை மண்டல வணிகப் பிரிவு துணை மேலாளரான அவர் "சென்னையில் இருந்து மதுரைக்கு என்று பிரத்யேகமாக இயக்கப்படும் பேருந்துகளில் மதுரை செல்லும் பயணிகள் மட்டுமே ஏற்றப்படுகின்றனர். இதுதவிர வழியில் உள்ள பிற இடங்களிலும் நின்று செல்லும் ரூட் பஸ்களை மாநில விரைவு போக்குவரத்துக் கழகமே இயக்குகிறது. இத்தகைய புகார்கள் மதுரை மண்டலத்துக்கு வந்ததில்லை. அதேபோல். அரை டிக்கெட் கொடுத்தால் அந்த குழந்தைக்கு தனியாக இருக்கை ஒதுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு மீறப்பட்டால் 94875 99019 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். இதேபோல் ஒவ்வொரு மண்டலத்துக்கும் தனித்தனியாக புகார் எண் இருக்கிறது. பொதுமக்கள் மண்டல வாரியான புகார் எண்களை தெரிந்து கொண்டு புகார் செய்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
பண்டிகைக்கு ஊருக்குச் செல்லும்போது முன் கூட்டியே பயணத்தை திட்டமிட்டால் இத்தகைய அசவுகரியங்களை தவிர்க்கலாம் என்ற அறிவுரை ஏற்புடையதுதான் என்றாலும், அத்தனை பேரும் அரசு ஊழியராக இருந்தால் விடுமுறையை முன்னரே திட்டமிட்டுக் கொள்ளலாம்; இங்கு வேலை பார்ப்பவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் தனியார் நிறுவனத்தினர். சிலருக்கு முதல்நாளன்றுதான் விடுப்பு உறுதியாகிறது. அத்தகையோரும் இனிமையாக பயணிக்க வேண்டாமா?. அவர்கள் பயணத்தை இனிதாக்கும் பொறுப்பு பேருந்து உரிமையாளர்கள், அரசு போக்குவரத்து அதிகாரிகள், தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் என அனைவருக்குமே இருக்கிறது.
பேருந்து பயணங்கள் இப்படி இருக்க ரயில் டிக்கெட் முன்பதிவு பற்றி சொல்ல வேண்டுமானால் அதற்கு ஒரு தனி கட்டுரையே எழுத வேண்டும். ஆம்னி பேருந்துகளைப் பார்த்துதான் ரயில்வே துறை சுவிதா ரயிலை இயக்குகிறது. பண்டிகைக் காலங்களில் முன்பெல்லாம் சிறப்பு ரயில் இயக்கப்படும். ஆனால், இப்போதெல்லாம் சிறப்பு ரயில்கள் பெரும்பாலானவை சுவிதா ரயில்களாகவே இருக்கின்றன என அங்கலாய்த்துக் கொள்கின்றனர் பயணிகள்.
எத்தனை, எத்தனை சங்கடங்கள் ஏற்பட்டாலும் அத்தனையையும் தாங்கிக் கொள்வது, பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடவேண்டும் என்ற ஏக்கத்தில்தானே!
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 min ago
தமிழகம்
2 mins ago
தமிழகம்
21 mins ago
தமிழகம்
24 mins ago
தமிழகம்
30 mins ago
தமிழகம்
50 mins ago
தமிழகம்
51 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago