தமிழகம்

தமிழகத்தில் அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்ற வேண்டும்: எல்.முருகன் வேண்டுகோள்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என்று பொதுமக்களுக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை வடபழனியில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் தமிழக பாஜக இதர மொழி பிரிவின் மாநில நிர்வாகிகள், மாவட்டதலைவர்கள் அறிமுகக் கூட்டம் நேற்று நடந்தது கூட்டத்துக்கு பிரிவின் மாநில தலைவர் கே.பி.ஜெயக்குமார் தலைமை தாங்கினார். மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று நிர்வாகிகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று எடுத்துரைத்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் எல்.முருகன் கூறியதாவது: பிற மாநிலங்களில் இருந்து பல ஆண்டுகளுக்கு முன்பு பலர் தமிழகத்துக்கு வந்து வாழ்ந்து வருகின்றனர். அவர்களிடம் பாஜகவை கொண்டு செல்லும் பணியில் இதரமொழி பிரிவினர் ஈடுபடுவர்.

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் வரும் 13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நாடு முழுவதும் அனைவரது வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்றபிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

இதையொட்டி, பல்வேறுவிழிப்புணர்வு பேரணிகள் நடந்துவருகின்றன. தமிழகத்திலும் அனைத்து வீடுகளிலும் 13 முதல்15-ம் தேதி வரை தேசியக் கொடியைஏற்ற வேண்டும் என்று பொதுமக்களை ேட்டுக்கொள்கிறேன்.

அமலாக்கத் துறை, சிபிஐ ஆகியவை தனித்து இயங்கும் அமைப்புகளாகும். அவர்கள், தங்கள் பணிகளைத்தான் செய்து கொண்டிருக்கின்றனர்.

ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் தொடர்ந்து நிகழ்ச்சிகளை நடத்தி தேசியக் கொடிகளை விநியோகித்து வருகின்றனர். தேசியக் கொடி பற்றி ஆர்எஸ்எஸ்ஸுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பாடம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

‘‘மின்கட்டண உயர்வு குறித்து தவறான தகவல்களை கூறுபவர்கள் மீது காவல் துறை மூலம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளாரே’’ என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த எல்.முருகன், ‘‘எதிர்க்கட்சிகள், கேள்வி கேட்பவர்களின் குரல்களை காவல் துறையை வைத்துமுடக்கும் செயலாகத்தான் இதைபார்க்கிறேன்’’ என்றார்.

SCROLL FOR NEXT