எந்தச் சூழ்நிலையிலும் கருத்துரிமையை விட்டுத்தர மாட்டோம்: ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு உறுதி

By செய்திப்பிரிவு

எந்தக் காலத்திலும் எந்தச் சூழ்நிலையிலும் கருத்துரிமையை விட்டுத் தர மாட்டோம் என ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி சந்துரு தெரிவித்தார்.

புதுக்கோட்டை நகர்மன்றத்தில் மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆகியவை இணைந்து நடத்திய 5-வது புத்தகத் திருவிழா ஜூலை 29-ம் தேதி தொடங்கி, நேற்றுடன் நிறைவடைந்தது.

நிறைவு நாள் விழாவில், 10 படைப்பாளர்களுக்கு இலக்கிய விருதுகளை வழங்கி ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு பேசியது: நம் முன்னோர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதைப் பற்றிப் படிக்கும்போது அறிவு விசாலப்படுகிறது. நல்லவற்றை எடுத்துக்கொண்டு வேண்டாததை விட்டுவிடலாம். அப்படித்தான் புத்தகங்களைப் பார்க்க வேண்டும்.

சிறையில் சிறைவாசிகளுக்கு செய்தித்தாள்கள் வழங்க வேண்டும் என்பதையும், சிறைவாசிகளுக்கு புத்தகங்களை வாசிக்க வழங்க வேண்டும் என்பதையும் நீண்ட சட்டப் போராட்டத்துக்குப் பிறகுதான் பெற்றுத்தர முடிந்தது. கல்வி கற்பது அடிப்படை உரிமை என்றான பிறகு எந்த நூலையும் படிக்கக் கூடாது என்று யாரும் தடுக்க முடியாது.

சென்னை அண்ணா நூலகத்தை திறப்பதற்கு முன்பே மாணவர்கள் கூடி நிற்பார்கள். அத்தனை முக்கியமான நூலகத்தை மருத்துவமனையாக மாற்ற முயற்சித்தார்கள். அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்பார்கள். நான் நீதிபதியாக இருந்தபோது அந்த முடிவுக்கு இடைக்காலத் தடை விதித்தேன்.

இணையதள தகவல் புரட்சி ஏற்பட்டுள்ள இந்தக் காலத்தில் அச்சிட்ட நூல்கள் என்ன ஆகும் என்ற கேள்வி இயல்பாகவே எழுந்தது. இந்த நிலையில் நூலகங்களுக்கு புத்தகங்களை வாங்குவதற்காக தமிழ்நாடு முதல்வர் எடுத்த நடவடிக்கை மகிழ்ச்சியளிக்கிறது.

ஜெர்மனியில் நூலகத்திலுள்ள சில நூல்களை அழித்தார்கள். யாழ்ப்பாணத்தில் நூலகம் தீயிட்டு அழிக்கப்பட்டது. ஒரு மொழியை, அந்த மொழியால் உருவான நாகரிகத்தை ஒழிக்க வேண்டும் என்பதற்காக இதைச் செய்தார்கள். எந்தக் காலத்திலும் எந்தச் சூழ்நிலையிலும் கருத்துரிமையை விட்டுத் தர மாட்டோம். கருத்துரிமையை யார் தடுத்தாலும் எதிர்த்துக் கேட்போம் என்றார்.

ஆட்சியர் கவிதா ராமு பேசியது: கடந்த 10 நாட்களில் 2.5 லட்சம் பேர் கலந்துகொண்டுள்ளனர். கடந்த ஆண்டு ரூ.1 கோடிக்கு புத்தகம் விற்பனையானது. நிகழாண்டு மாலை நிலவரத்தின்படி ரூ.2 கோடிக்கு புத்தகம் விற்பனையாகி உள்ளது. இங்கு கூடியிருப்போர் அனைவரும் புத்தகம் வாங்கினால் கூடுதலாக ரூ.50 லட்சத்துக்கு விற்பனையாகும் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE