சென்னை: "போதிய உள்ளூர் அறிவிப்பு தராமல் மக்கள் எதிர்பாராத நேரத்தில் தண்ணீர் வெளியேற்றும் அளவை அதிகப்படுத்தக் கூடாது. குறிப்பாக இரவு நேரத்தில் தண்ணீர் அளவினை வெளியேற்றுவதை அதிகப்படுத்துவதை தவிர்க்க வேண்டும்" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆக.4) தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெய்துவரும் கனமழை மற்றும் மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் அதிகப்படியான வெள்ளநீரினை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து திருச்சிராப்பள்ளி, கரூர், சேலம், நாமக்கல், தஞ்சாவூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், ஈரோடு, திருவாரூர், கடலூர், திருப்பூர் ஆகிய மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மேட்டூர் அணையிலிருந்து வெள்ள நீர் வெளியேற்ற முன்னெச்சரிக்கை : காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில், மேட்டூர் அணையிலிருந்து இன்று காலை 9 மணி முதல் 2 லட்சம் கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதால் காவிரி மற்றும் கொள்ளிடம் கரையோர மாவட்டங்கள் பாதிப்பிற்குள்ளாகக்கூடும். எனவே, இந்த மாவட்டங்களுக்கென நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்கள் உடனே தொடர்புடைய மாவட்டங்களுக்கு விரைந்து சென்று உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு தமிழக முதல்வர் அறிவுறுத்தினார்.
இதுமட்டுமின்றி, தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ள 44 வீரர்களைக் கொண்ட தேசிய பேரிடர் மீட்புப் படையின் இரண்டு குழுக்களும், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் ஒரு குழுவும் உடனடியாக திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு விரைந்து செல்லவும், ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களுக்கு தலா 40 வீரர்களைக் கொண்ட தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் இரண்டு குழுக்கள் அனுப்பிடவும் தமிழக முதல்வர் அறிவுறுத்தினார்.
» திருப்பூர் | அமராவதி அணையிலிருந்து 10 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றம்: வெள்ள அபாய எச்சரிக்கை
மேட்டூர் மற்றும் வைகை அணையிலிருந்து அதிகப்படியான உபரி நீர் வெளியேற்றப்படுவதால், ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களின் பாதுகாப்பு கருதி, பொதுவான எச்சரிக்கை நடைமுறை (CAP – Common Alert Protocol) மூலம் 21.87 லட்சம் செல்லிடப்பேசிகளுக்கு எச்சரிக்கை குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த வெள்ள அபாய மேலாண்மையின் பொருட்டு வருவாய் நிருவாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, உள்துறை, பொதுப்பணித் துறை, வேளாண்மைத்துறை, காவல்துறை, தீயணைப்பு மீட்புத் துறை ஆகிய அரசுத் துறைச் செயலர்கள் மற்றும் துறை தலைவர்களுடனும் மற்றும் காவிரி மற்றும் கொள்ளிட ஆற்றின் கரையோர 12 மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக தமிழக முதல்வர் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.
இக்கூட்டத்தில், பயிர் சேதங்கள் ஏதும் ஏற்பட்டிருந்தால் உடனடியாக நேரடி களஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், அமைச்சர்கள் இம்மாவட்டங்களுக்கு நேரில் சென்று நிவாரணப் பணிகளை துரிதமாக மேற்கொள்ளவும் முதல்வர் உத்தரவிட்டார்.
பேரிடர் தொடர்பான தகவல்களை துறை அலுவலர்களுக்கும், பொது மக்களுக்கும் தெரிவிக்கும் வகையில், மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையமும், மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு மையங்களும் 24 மணி நேரமும் கூடுதலான அலுவலர்களுடன் செயல்பட்டு வருகின்றன. பொதுமக்கள் மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு மையம் மற்றும் மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்தை முறையே 1070 மற்றும் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி வாயிலாகவும், வாட்ஸ் அப் எண்.94458 69848 மூலமாகவும் புகார்களை பதிவு செய்யலாம்.
கன மழை மற்றும் வெள்ள அபாய எச்சரிக்கையினைத் தொடர்ந்து ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் அரசு மற்றும் மாவட்ட நிருவாகம் மூலம் வழங்கப்படும் முன்னெச்சரிக்கை செய்திகளை கூர்ந்து கவனித்து செயல்படுமாறும், மாவட்ட நிருவாகத்திற்கு ஒத்துழைப்பு நல்குமாறு முதல்வர் கேட்டுக் கொண்டார்.
இக்கூட்டத்தில் பேசிய முதல்வர் தனது உரையில், போதிய உள்ளூர் அறிவிப்பு தராமல் மக்கள் எதிர்பாராத நேரத்தில் தண்ணீர் வெளியேற்றும் அளவை அதிகப்படுத்தக் கூடாது என்றும், குறிப்பாக இரவு நேரத்தில் தண்ணீர் அளவினை வெளியேற்றுவதை அதிகப்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
அதேபோல, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு தரமான உணவு, குடிநீர், குழந்தைகளுக்கு பால், ரொட்டி போன்றவற்றை வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். தேவைப்படும் இடங்களில் மருத்துவ முகாம்களை அமைத்திட வேண்டும் எனவும், தேவைப்படும் இடங்களில் நிவாரண உதவிகளையும் வழங்கிட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
அனைத்து நிலை அலுவலர்களும் கரையோர பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுத்திடவும் அறிவுறுத்தினார். முக்கியமாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் சில இடங்களில் மழையில் வீணாகிவிடுவதாக செய்திகள் வருகின்றன. நெல் மூட்டைகள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படாத வகையில் தார்பாய்கள் கொண்டு மூட வேண்டும் என்றும், உடனடியாக அவற்றை சேமிப்பு கிடங்குகளில் மாற்றிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். விழிப்போடு இருந்து இந்தப் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள மாவட்ட ஆட்சித் தலைவர்களை முதல்வர் கேட்டுக் கொண்டார்.
இந்தக் கூட்டத்தில், பல்வேறு துறை அமைச்சர்கள், துறை செயலாளர்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago