கரும்பு கொள்முதல் விலை; டன்னுக்கு ரூ.4500 தேவை: ராமதாஸ் கோரிக்கை

By செய்திப்பிரிவு

சென்னை: கரும்பு கொள்முதல் விலை ரூ.66 மட்டும் உயர்த்தப்பட்டுள்ளது. இதுமிகவும் குறைவானது, டன்னுக்கு ரூ.4500 தேவை என்று பாமக நிறுவனர் ச.ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவில் 2022-23 ஆம் ஆண்டில் ஒரு டன் கரும்புக்கான கொள்முதல் விலை ரூ.2,821 என்று மத்திய அரசு நிர்ணயித்திருக்கிறது. கடந்த ஆண்டின் விலையான ரூ.2,755 உடன் ஒப்பிடும் போது நடப்பாண்டில் டன்னுக்கு ரூ.66 மட்டுமே உயர்த்தப்பட்டிருக்கிறது. ஒரு டன் கரும்புக்கு குறைந்தபட்சம் ரூ.4500 விலை வழங்க வேண்டும் என்று உழவர்கள் வலியுறுத்தி வரும் நிலையில், அதில் மூன்றில் இரு பங்குக்கும் குறைவான கொள்முதல் விலையை மத்திய அரசு நிர்ணயித்திருப்பது நியாயமல்ல.

புதுடெல்லியில் நேற்று நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் 2022-23 ஆம் ஆண்டில் 10.25% சர்க்கரைத் திறன் கொண்ட கரும்புக்கான நியாய மற்றும் ஆதார விலையாக டன்னுக்கு ரூ.3.050 ஆக உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் கரும்புகளின் சர்க்கரைத் திறன் 9.5%க்கும் குறைவாகவே இருக்கும் என்பதால், அந்த வகை கரும்புகளுக்கான நியாய மற்றும் ஆதார விலையாக டன்னுக்கு ரூ.2,821 நிர்ணயிக்கப் பட்டுள்ளது. மத்திய அரசு நிர்ணயித்துள்ள இந்த விலைகள் உழவர்களுக்கு சிறிதும் கட்டுபடியாகாது.

2021-22ஆம் ஆண்டில் 9.5%க்கும் குறைவான சர்க்கரைத் திறன் கொண்ட கரும்புகளுக்கு டன்னுக்கு ரூ.2,755 கொள்முதல் விலையாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நடப்பாண்டில் கொள்முதல் விலை உயர்வு வெறும் 2.40% மட்டும் தான். கரும்பு சாகுபடிக்கான இடுபொருட்கள் தொடங்கி, தொழிலாளர்கள் கூலி வரை அனைத்தும் 10%க்கும் கூடுதலாக உயர்ந்துள்ள நிலையில், கரும்புக்கான கொள்முதல் விலையை மட்டும் வெறும் 2.4% உயர்த்துவது எந்த வகையிலும் நியாயம்? இது இழப்பையே ஏற்படுத்தும்.

தமிழகத்தைப் பொறுத்தவரை மத்திய அரசு அறிவித்துள்ள விலையுடன் ரூ.195 ஊக்கத்தொகை சேர்த்து ஒரு டன் கரும்புக்கு ரூ.3016 கொள்முதல் விலை வழங்கப்படும். இது 2021-22 ஆம் ஆண்டின் கொள்முதல் விலையான ரூ.2905-யை விட ரூ.111 மட்டும் தான் அதிகம். இதுவும் கட்டுப்படியாகாது.

கரும்புக்கான நியாய மற்றும் ஆதார விலையை நிர்ணயிப்பதில் மத்திய அரசும், ஊக்கத்தொகையை தீர்மானிப்பதில் மாநில அரசுகளும், உழவர்களின் நெருக்கடிகளை புரிந்து கொள்ளாமல், தவறான வழிமுறைகளை பின்பற்றுகின்றன.

எடுத்துக்காட்டாக, வேளாண் விளை பொருட்களுக்கான உற்பத்திச் செலவுடன் 50% லாபம் சேர்த்து கொள்முதல் விலையை நிர்ணயிக்க வேண்டும் என்ற எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரையை செயல்படுத்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, 2022-23ஆம் ஆண்டில் ஒரு டன் கரும்புக்கான உற்பத்திச் செலவு ரூ.1620 மட்டும் தான் என்று கணக்கிட்டு, அத்துடன் 88% லாபம் சேர்த்து நியாய மற்றும் ஆதார விலை நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது.

ஆனால், கரும்பு உற்பத்திக்கான பல செலவுகளை மத்திய அரசு கணக்கில் கொள்ளவில்லை. கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக மதிப்பீட்டின்படி ஒரு டன் கரும்புக்கான உற்பத்திச் செலவு ரூ.2,985 ஆகும். வட மாநிலங்களில் 10% சர்க்கரைத் திறன் கொண்ட கரும்பை உற்பத்திச் செய்ய டன்னுக்கு ரூ. 3,300 முதல் ரூ.3,500 வரை செலவு ஆவதாக உழவர் அமைப்புகள் கூறியுள்ளன. இவற்றை கருத்தில் கொள்ளாமல் கரும்புக்கு ரூ.2,821 - ரூ.3,050 விலை நிர்ணயிப்பது எந்த வகையில் நியாயம்?

அதேபோல், தமிழகத்தில் 2016-17ஆம் ஆண்டு வரை மத்திய அரசு அறிவிக்கும் விலைக்கு மேல் ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது. அப்போது, மத்திய அரசின் விலையுடன், மாநில அரசின் ஊக்கத்தொகையாக ரூ.650 வழங்கப்பட்டு வந்தது. ஆனால், அப்போதைய அரசு புகுத்திய வருவாய்ப் பகிர்வு முறையை காரணம் காட்டி மாநில அரசின் ஊக்கத்தொகை குறைக்கப்பட்டது.

ஆனால், வருவாய்ப்பகிர்வு முறையும் நடைமுறைக்கு வரவில்லை; மாநில அரசின் ஊக்கத் தொகையும் ரூ.650-லிருந்து ரூ.195 ஆக குறைக்கப்பட்டு விட்டது. இதனால் சர்க்கரை ஆலைகள் அதிக லாபம் அடைகின்றன; விவசாயிகள் தான் பாதிக்கப்படுகின்றனர். தமிழகத்தில் கரும்பு கொள்முதல் விலை கடந்த 6 ஆண்டுகளில் ரூ.266 மட்டுமே, அதாவது ஆண்டுக்கு ரூ.44 மட்டுமே உயர்த்தப்பட்டிருக்கிறது.

கரும்புக்கான உற்பத்திச் செலவை கணக்கிடும் முறையை மத்திய அரசும், ஊக்கத்தொகை வழங்கும் முறையை தமிழக அரசும் மாற்றியமைக்க வேண்டும். அதன் மூலம் ஒரு டன் கரும்புக்கு குறைந்தபட்சம் ரூ.4,500 கொள்முதல் விலையாக வழங்கப்படுவதை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்.'' இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

46 mins ago

தமிழகம்

35 mins ago

தமிழகம்

59 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்