எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான சிபிஐ விசாரணை உத்தரவு ரத்து: உச்ச நீதிமன்றம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: முன்னாள் முதல்வர் எடப்பாடிக்கு பழனிசாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் நெடுஞ்சாலை பணிகளை மேற்கொள்ள ஒதுக்கீடு செய்யப்பட்ட டெண்டர் ஒப்பந்தத்தில் சுமார் 4,800 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறி, கடந்த 2018-ம் ஆண்டில் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் கடந்த 2018 அக்டோபர் 9-ம் தேதி தீர்ப்பளித்த உயர் நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, எடப்பாடி பழனிசாமி மீதான புகார் வெளிப்படைத் தன்மையுடன் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற காரணத்திற்காக இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டார்.

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. கடந்த 2018-ம் ஆண்டில் இவ்வழக்கில் விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், பழனிசாமி மீதான புகாரை சிபிஐ விசாரிக்க இடைக்கால தடை விதித்தது. இதன் பின்னர் இவ்வழக்கு நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வந்தது.

இந்நிலையில், இந்த வழக்கை விரைவாக விசாரிக்க கோரி தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் முறையிடப்பட்டதைத் தொடர்ந்து வழக்கை ஆக.3-ம் தேதி விசாரணைக்கு எடுப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் ஆர்.எஸ் பாரதி பதில்மனு தாக்கல் செய்தார்.

அந்த பதில் மனுவில், "நெடுஞ்சாலை சாலை ஒப்பந்தங்கள், திட்டங்களை, தனது நெருங்கிய உறவினர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வழங்கியது உலக வங்கியின் வழிகாட்டுதல்களுக்கு முற்றிலும் எதிரானது. எடப்பாடி பழனிசாமியின் இந்த செயலால் அதிக விலையை அரசு ஒப்பந்தங்களுக்கு கொடுக்க நேர்ந்தது. இதனால் கடுமையான இழப்புகள் ஏற்பட்டது.

எடப்பாடி பழனிசாமி செய்த தவறுகள் மீதான விசாரணையை தாமதப்படுத்தும் நோக்கில் வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முயற்சி தான் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு வழக்கு. எனவே, சிபிஐ விசாரணைக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்ய மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்" எனவும் கூறியிருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா மற்றும் நீதிபதிகள் கிருஷ்ண முராரி, ஹிமா கோலி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரியமா சுந்தரம், "ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கில் நாங்கள் இல்லாத நிலையில் உயர் நீதிமன்றம் எந்த கருத்தையும் கேட்காமல் ஒருசாரரின் கருத்தை கேட்டு உத்தரவை பிறப்பித்துள்ளது. எனவே உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும்" என வாதிட்டார்.

அப்போது தலைமை நீதிபதி, "இந்த வழக்கில் எதிர்மனுதாரரான ஆர்.எஸ்.பாரதி, சிபிஐ விசாரணை தான் வேண்டும் என்று கோருகிறீர்களா?” என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ஆர்.எஸ்.பாரதி தரப்பு மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், "இந்த வழக்கை சிபிஐ தான் விசாரணை செய்ய வேண்டுமென்று இல்லை. ஆனால் சுதந்திரமான ஒரு விசாரணை நடைபெற வேண்டும். அது எந்த அமைப்பாக இருந்தாலும் ஆட்சேபம் இல்லை” என தெரிவித்தார்.

இதனையடுத்து, தலைமை நீதிபதி அமர்வு பிறப்பித்த உத்தரவில்,"எடப்பாடிக்கு பழனிசாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கை சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது.

அதேவேளையில், இந்த விவகாரத்தில் சீலிடப்பட்ட கவரில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட லஞ்ச ஒழிப்புத் துறையின் தொடக்க நிலை விசாரணை அறிக்கையை முதலில் சென்னை உயர்நீதிமன்றம் தீர ஆய்வு செய்து, அதன்பின்னர் வழக்கை விசாரித்து உரிய முடிவெடுக்க வேண்டும். குறிப்பாக வழக்கை விசாரித்த பின்னர் இந்த விவகாரத்தை எந்த அமைப்பு விசாரணை நடத்த வேண்டும் என்பதை உயர் நீதிமன்றம் முடிவு செய்யலாம்" என்று உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

11 mins ago

தமிழகம்

23 mins ago

தமிழகம்

49 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்