தமிழகத்தை முற்றிலுமாக என்எல்சி புறக்கணிப்பது நியாயமற்ற செயல்: ஓபிஎஸ் கண்டனம்

By செய்திப்பிரிவு

சென்னை: "பொறியாளர்கள் நியமன விவகாரத்தில் மத்திய அரசுக்கு தேவையான அழுத்தத்தைக் கொடுத்து, குறைந்தபட்சம் தமிழகத்தைச் சேர்ந்த 75 விழுக்காடு பொறியாளர்கள் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் பொறியாளர்களாக நியமிக்கப்படத் தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும்" என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: "ஆந்திரப் பிரதேசம், ஹரியாணா, கர்நாடாக, மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் உள்ளூர் மக்களை 75 விழுக்காடு பணியில் அமர்த்த தனியார் துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சட்டம் நிறைவேற்றியிருக்கிற நிலையில், தமிழ்நாட்டில் அமைந்துள்ள மத்திய அரசின் ‘நவரத்னா’ நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் பிற மாநிலங்களைச் சேர்ந்த 299 பொறியாளர்கள் நியமிக்கப்பட்டு இருப்பது தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களிடையே கடும் அதிருப்தியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

தொழில்கள் வளர வேண்டும், தொழிலாளர்கள் வாழ வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, நாட்டின் தொழில் வளர்ச்சிக்காகவும், மின் தேவைக்காகவும், சுமார் 65 ஆண்டுகளுக்கு முன்பு தங்களது நிலங்களை பல்வேறு ஏழை, எளிய கிராம மக்கள் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்திற்கு வழங்கினர். நிலம் வழங்கியவர்களுக்கு நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்ற உறுதிமொழி நிறுவனத்தின் சார்பில் அளிக்கப்பட்டு இருந்தாலும், அந்த உறுதிமொழி நிறைவேற்றப்படவில்லை என்பதும், இதற்கு மாறாக, பிற மாநிலத்தவர்களை நிரந்தரப் பணியாளர்களாக அமர்த்துவதும், தமிழர்களை, குறிப்பாக நிலம் கொடுத்தவர்களை ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகப் பணியாளர்களாக அமர்த்துவதும் தொடர் கதையாக இருந்து கொண்டிருப்பதாகத் தகவல்கள் வருகின்றன. இதுதான் பாதிக்கப்பட்டவர்களின் குற்றச்சாட்டாகவும் இருந்து வருகிறது.

இதனை நிரூபிக்கும் வகையில், இயந்திரவியல், மின்னியல், கட்டடவியல், சுரங்கவியல், வேதியியல், நிலத்தியல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் 299 பொறியாளர்களை நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் தேர்ந்தெடுத்து இருப்பதாகவும், இந்த 299 பொறியாளர்களில் ஒருவர்கூட தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் இல்லை என்பதும் தற்போது தெரிய வந்துள்ளது. நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் இச்செயல் கடும் கண்டனத்திற்குரியது.

‘கல்வி சிறந்த தமிழ்நாடு – புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு’ என்று பாடிய தேசிய கவிஞர் பாரதி பிறந்த தமிழ் மண்ணில், அண்ணா பல்கலைக்கழகம், முன்னாள் குடியரசுத் தலைவர் மறைந்த A.P.J. அப்துல் கலாம் படித்த Madras Institute of Technology உள்ளிட்ட பல்வேறு தலைசிறந்த பொறியியல் கல்லூரிகள் இருக்கின்ற இந்த மண்ணில், திறமையின் பிறப்பிடமாக விளங்கும் இந்த தமிழ் மண்ணில், பொறியியல் பட்டம் பெற்ற திறமையான தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் இருக்கின்ற நிலையில், தமிழ்நாட்டை முற்றிலுமாக நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் புறக்கணித்து இருப்பது நியாயமற்ற செயல்.

தமிழகத்தில் அமைந்துள்ள தொழில் நிறுவனங்களில் 75 சதவிகிதம் வேலைவாய்ப்புகளை தமிழர்களுக்கே வழங்கப்பட சட்டம் இயற்றப்படும் என்று வாக்குறுதி அளித்த திமுக, பொதுத் துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 299 பொறியாளர்களில் ஒரு பொறியாளர் கூட தமிழகத்தைச் சேர்ந்தவர் இல்லாதது குறித்து உரத்த குரல் எழுப்பாதது வேதனை அளிக்கிறது. இதனை மாற்றி அமைக்க வேண்டிய கடமை மத்திய, மாநில அரசுகளுக்கு உண்டு.

எனவே, தமிழக முதல்வர் இதில் உடனடியாகத் தலையிட்டு, மத்திய அரசுக்கு தேவையான அழுத்தத்தைக் கொடுத்து, குறைந்தபட்சம் தமிழகத்தைச் சேர்ந்த 75 விழுக்காடு பொறியாளர்கள் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் பொறியாளர்களாக நியமிக்கப்படத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று அதிமுக சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

21 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்