அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு: உயர் நீதிமன்றத்தில் தனி நீதிபதி முன்பு நாளை முதல் மீண்டும் விசாரணை

By செய்திப்பிரிவு

அதிமுக பொதுக்குழுவை எதிர்த்துஓ.பன்னீர்செல்வம், பொதுக்குழுஉறுப்பினர் வைரமுத்து தொடர்ந்த வழக்குகள் மீதான விசாரணை உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, உயர்நீதிமன்ற தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு நாளை (ஆக.4) முதல் மீண்டும் விசாரணைக்கு வர உள்ளன.

கடந்த ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவுக்கு தடைவிதிக்கக் கோரி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வமும், பொதுக்குழு உறுப்பினர் என்ற முறையில் அம்மன் வைரமுத்துவும் உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க மறுத்து, ஓபிஎஸ் மற்றும் வைரமுத்து தாக்கல் செய்திருந்த இடைக்கால மனுக்களை தள்ளுபடி செய்தார். இதையடுத்து ஜூலை 11-ம் தேதி அதிமுக பொதுக்குழு நடத்தப்பட்டு, கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.

தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ்ஸும், வைரமுத்துவும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அதை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான வழக்கை சென்னை உயர் நீதிமன்றமே விசாரிக்க வேண்டும். இந்த விசாரணையை 2 வாரங்களில் விசாரித்து முடிக்க வேண்டும்’ என்று அறிவுறுத்தியது.

இந்நிலையில், இந்த வழக்குகளை நாளை (ஆக.4) முதல் மீண்டும் விசாரிக்க உயர் நீதிமன்ற தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி ஒப்புதல் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, அதிமுக உட்கட்சி தேர்தலை எதிர்த்து வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன், சுரேன் பழனிசாமி தொடர்ந்த வழக்குகள் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தன. அந்த வழக்குகளை ஆக.16-ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்துள்ளார்.

அதேபோல, ஜூன் 23-ல் நடந்த அதிமுக பொதுக்குழுவுக்கு தடைகோரி பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை, நீதிபதிகள்எம்.துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வில் நடந்தது.

அப்போது இந்த வழக்கில் 23 தீர்மானங்கள் தவிர்த்து வேறு எந்த தீர்மானத்தையும் நிறைவேற்றக் கூடாது என நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து பழனிசாமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கு, ஆக.12-ல் விசாரணைக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சண்முகம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஆக.16-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE