மழைக் காலத்தை எதிர்கொள்ள மின்வாரியம் தயாராக உள்ளது: அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: மழைக் காலத்தை எதிர்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு மின்வாரியம் தயார் நிலையில் உள்ளது என, மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, சென்னையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் அதிகாரிகளுடன் அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று ஆலோசனை நடத்தினார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

தமிழகத்தில் சில மாவட்டங்களில் பெய்துவரும் கனமழை காரணமாக,தடையில்லா சீரான மின்விநியோகம் செய்வதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, தேனி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களிலும், ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள விருதுநகர், ஈரோடு, மதுரை மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள தூத்துக்குடி, திருச்சி,கரூர், நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் கடந்த ஒரு மாதமாக சிறப்பு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வரும் நாட்களில் எவ்வளவு மழைபெய்தாலும் மின்விநியோகம் தடைபடாமல், சீராக விநியோகம் செய்வதற்காக அந்தந்த மாவட்டங்களில் அதிகாரிகள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இரவு நேரங்களிலும் அதிகாரிகள் பணியில்ஈடுபடுவர். எனவே, மழையை எதிர்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மின்கட்டணம் உயர்வு குறித்து கருத்து தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், முதலில் அவர்கள் கூட்டணியில் இடம்பெற்றுள்ள மத்திய பாஜக அரசுக்கு கடிதம் எழுத வேண்டும். குறிப்பாக, மின்கட்டணத்தை உயர்த்த அழுத்தம் கொடுக்கக் கூடாது என்பதை மத்திய அரசிடம் தெரிவிக்க வேண்டும்.

அரசியலுக்கு அமலாக்கத் துறை

மின்கட்டணத்தை உயர்த்த வேண்டும் என மத்திய அரசு அழுத்தம் கொடுத்ததற்கான கடிதத்தை வெளியிட வேண்டும் என அண்ணாமலை கூறியுள்ளார். 2 அரசுகள் சம்பந்தப்பட்ட, ஒழுங்குமுறை ஆணைய கோப்புகளை வெளியிட சொல்வதே ஒரு தவறான முன்னுதாரணம்.

மேலும் என்னை கைது செய்யப் போவதாகவும் அவர் கூறியுள்ளார். அவர் அமலாக்கத் துறையின் இயக்குநரா? அல்லது மத்திய நிதியமைச்சரா? ஒரு தனிப்பட்ட அமைப்பாக செயல்படும் அமலாக்கத் துறை என்னவெல்லாம் செய்யும் என்பதை பொதுவெளியில் கூறுவதன் மூலம், எந்த அளவுக்கு அமலாக்கத் துறையை அரசியலுக்காக மத்திய பாஜக அரசு பயன்படுத்துகிறது என்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE