ஒரு புள்ளிவிவரம்: உலக வங்கியின் நிதி உதவியுடன் தமிழகத்தின் 26 மாவட்டங்களில் 4,174 பின்தங்கிய கிராமப் பஞ்சாயத்துக்களில் ‘புதுவாழ்வுத் திட்டம்’ செயல்படுகிறது. 2,736 கிராமங்க ளில் வறுமை ஒழிப்பு சங்கங்கள் அமைக் கப்பட்டுள்ளன. 23,042 கிராம சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 3,45,289 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 89,150 மாற்றுத் திறனாளிகள், 84,751 நலிவடைந்தவர்கள் பலன் பெற்றுள்ளனர். மேற்கண்ட திட்டங்க ளுக்காக இதுவரை ரூ.1,142.09 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அரசு சொல்லும் புள்ளிவிவரம் இது. அப்படியே எடுத்துக்கொள்ளலாகாது. ஆய்வு செய்து பார்க்கலாம் என்று தோன்றியது. வறுமை ஒழிப்பு சங்கங்கள் உண்மையிலேயே இருக்கின்றனவா? அவை வறுமையை ஒழித் திருக்கின்றனவா? இளைஞர்கள் பயிற்சி பெற்றிருக்கிறார்களா? வேலை கிடைத்தி ருக்கிறதா? சுய உதவிக் குழுக்கள் மூலம் கடன்கள் வழங்கப்பட்டிருக்கின்றனவா? அவை முறையாக வசூலிக்கப்படுகின்றனவா? கிளைகளாக விரிகின்றன கேள்விகள். பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். ஒரு சோறு என்ன பல சோறு பரிசோதிப்போம். வாருங்கள்.
திண்டுக்கல்லில் இருந்து பழநி செல்லும் சாலை. ஐந்தாறு கிலோ மீட்டர் தொலைவில் கிராமத்து இணைப்புச் சாலை ஒன்று உள்ளே அழைக்கிறது. பரவாயில்லை என்கிற அளவுக்கு இருக்கிறது பசுமை. மானாவாரிப் பயிர் களை விளைவித்திருக்கிறார்கள். ஊர் மந்தை யில் முதியவர்கள் சிலர் கூடை முடைந்துக் கொண்டிருக்கிறார்கள். கே.புதுக்கோட்டை கிராமம் அது. இங்கே புதுவாழ்வு திட்டத்தைப் பராமரிக்கிறார் கணக்காளர் ரங்கநாயகி.
ஓட்டுநர் பயிற்சி... கணினிப் பயிற்சி!
“கடந்த நாலு வருஷத்துல 15 சுய உதவிக் குழுக்களை உருவாக்கியிருக்கோம். எங்க கிராமத்துல 38 குடும்பங்களை வறு மையில் இருந்து மீட்டிருக்கோம்” என்றவர் தெருக்களில் அழைத்துச் சென்றார். “இது கிறிஸ்துவ தெருவுங்க. இவங்கதான் மலர்க் கொடி - பூபதி தம்பதி. இவங்க மகன் ராஜ மாணிக்கம். பிளஸ் டூ முடிச்சிட்டு சும்மா இருந்தாப்ல. கோயமுத்தூர் கார் கம்பெனிக்கு பயிற்சிக்கு அனுப்பினோம். இப்ப ஈரோட்டுல வேலை பாக்குறாங்க. எம்புட்டும்மா சம்பளம்?” என்று வயதான தம்பதியிடம் கேட் கிறார். ‘‘எம்புட்டுன்னு தெரியலை தாயி. பதினஞ்சாயிரம் அனுப்புறான்’’ என்கிறார் அந்த அம்மா.
“ஒட்டன்சத்திரம் ஜோதி டிரைவிங் ஸ்கூல், திண்டுக்கல் பாலு டிரைவிங் ஸ்கூல்கள்ல 30 பேருக்கு ஓட்டுநர் பயிற்சி கொடுத்திருக்கோம். திறன் மேம்பாட்டு பயிற்சியில் பயிற்சி பெற்ற 5 பேர் ஈரோடு, சென்னை, தாராபுரத்தில் கார் கம்பெனிக்கு வேலைக்குப் போறாங்க. 7 பேர் தையல் பயிற்சி முடிச்சு வீட்டிலேயே தைக்கிறாங்க. ரெண்டு பொண்ணுங்க முத்தனம்பட்டி சுரபி நர்சிங் ஸ்கூல்ல நர்சிங் பயிற்சி முடிச்சுட்டு வேலைக்குப் போவுதுங்க. ரெட்டியார் சத்திரம் ஜெயம் ஐ.டி.ஐ-யில 10 பேருக்கு பயிற்சி கொடுக்கப்பட்டிருக்கு. திண்டுக்கல் சி.எஸ்.இ. கம்ப்யூட்டர் மையத்துல 7 பேருக்கு கம்ப்யூட்டர் பயிற்சி கொடுக்கப் பட்டிருக்கு.
தவிர, பஞ்சாயத்து அளவிலான பெண்கள் கூட்டமைப்பில் 30 பேருக்கு தனிநபர் கடனாக ரூ.12.20 லட்சம் கொடுத்திருக்கோம். 18 பேரு மாடு வாங்கியிருக்காங்க. பால் வியாபாரம் செய்றாங்க. இதுதவிர சிறப்பு நிதி மூலம் வட்டியில்லாக் கடனாக மாற்றுத்திறனாளிகள், நலிவடைந்தோர் 75 பேருக்கு ரூ.4 லட்சத்து 52 ஆயிரம் கடன் கொடுத்திருக்கோம். 26 பேர் கடனை முழுசா கட்டி முடிச்சு, திரும்பவும் ரூ.3 லட்சத்து 19 ஆயிரம் கடன் வாங்கியிருக்காங்க. இதனால சுமார் 40 பேர் சிறு பெட்டிக்கடை, கைவண்டி டிபன் கடை, பூக்கடை, காய்கறி வியாபாரம் பாக்குறாங்க. பத்து காசு வாராக் கடன் கிடையாது” என்கிறார்.
கணிசமான வீடுகளில் கறவை மாடுகள்!
கொஞ்சம் தள்ளியிருக்கிறது சில்வார்ப்பட்டி கிராமப் பஞ்சாயத்து. கணிசமான வீடுகளில் கறவை மாடுகளைக் கட்டியிருக்கிறார்கள். கணக்காளர் சசிகலாவும் ஒருங்கிணைப் பாளர் கஸ்தூரியும் பதிவேடுகளை எடுத்துப் போடுகிறார்கள். கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மூலம் மகளிருக்கு ரூ.26 லட்சத்து 86 ஆயிரம் வழங்கியிருக்கிறார்கள். மாற்றுத் திறனாளிகள் 55 பேருக்கு ரூ.7 லட்சத்து 24 ஆயிரமும், நலிவடைந்தோர் 32 பேருக்கு ரூ.4 லட்சத்து 44 ஆயிரமும் கடன் வழங்கப்பட்டிருக்கிறது. 88 கறவை மாடுகள் வாங்கப்பட்டு காப்பீடும் செய்யப்பட்டிருக்கிறது.
அருகில் இருக்கும் கூட்டுறவு பால் பண்ணைக்கு பால் விநியோகம் செய்யப்படுகிறது. ஒரே தொழில் செய்யும் மக்களை ஒருங்கிணைத்து சமூக நலக்கூடத்தில் தையல் பயிற்சி அளிக்கப்படுகிறது. 20 குடும்பங்கள் இதன் மூலம் வாழ்வாதாரம் பெறுகின்றன. காந்தி கிராமம் பல்கலைக்கழகத்துக்குச் சென்று பிஸியோதெரபி மருத்துவம் பெற்ற மகளிர் குழு ஒன்று மாற்றுத் திறனாளிகளுக்கும் மனநிலை பிறழ்ந்தவர்களுக்கும் பிஸியோ தெரபி அளிக்கிறது. 135 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தொழில் பயிற்சி அளிக்கப் பட்டிருக்கிறது. பயிற்சி பெற்றவர்களில் 40 பேர் வேலைவாய்ப்பு பெற்றிருக்கிறார்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில் சில்வார்ப்பட்டியில் மட்டும் சுமார் அரை கோடி ரூபாய் சுழல் நிதியாக புரள்கிறது.
கணினியில் கணக்குகள்!
மேட்டுப்பாளையம் அருகே ஓடந்துறையில் கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மூலம் 400 பேருக்கு கறவை மாடுகள் வாங்கித் தரப்பட்டிருக்கிறது. கால்மிதி ஆடை உற்பத்தி நடக்கிறது. மளிகைக் கடைகள், சிறு உணவகங்கள் வைத்துத் தரப்பட்டிருக்கின்றன. ராமநாதபுரம், மைக்கேல்பட்டினத்தில் புது வாழ்வுத் திட்டத்தை நிர்வகிக்கும் கணக்காளர் ஜெனிடா 8-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். திட்டத்தில் சேர்ந்த பிறகு 10 வகுப்பு முடித்துவிட்டு, பிளஸ் டூ-வுக்கு விண் ணப்பித்திருக்கிறார். இடையே நூலகர் பயிற்சி படிப்பை முடித்துவிட்டார்.
‘டேலி’ மென்பொருள் பயிற்சியைக் கற்றுக்கொண்டு கணினியில் கணக்குகளைக் கையாள்கிறார். தனது கிராமப் பஞ்சாயத்தில் மின் கட்டணம், மக்களின் எல்.ஐ.சி. தவணைத் தொகை இவற்றை ஆன் லைனிலேயே செலுத்துகிறார். தனது கிராம மக்களுக்கு கணினி வழியாகவே சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், முதல் பட்டதாரிக்கான சான்றிதழ் பெற்றுத் தருகிறார். ராமநாதபுரம் மாவட்ட ஊரக முகமை அலுவலகத்துடன் கணினி மூலமாக தொடர்பு கொண்டு திட்டங்களைச் செயல்படுத்துகிறார். ஏழு ஆண்டுகளுக்கு முன்பு மைக்கேல்பட்டினத்துக்கு கிடைத்த புதுவாழ்வுத் திட்ட நிதியான 11 லட்சத்தை தற்போது ரூ.43 லட்சத்து 45 ஆயிரமாக பெருக்கியிருக்கிறார். கிராமத்தின் அவசரத் தேவைக்கான சேமிப்பு கணக்கில் மட்டும் ரூ.50 ஆயிரம் கையிருப்பு இருக்கிறது. வாராக் கடன் ஒரு ரூபாய்கூட கிடையாது. இப்படியாக கிராமங்கள்தோறும் திட்டங்களை நிர்வகிக்கும் பெண்கள் பலரும் படிப்பறிவு இல்லாதவர்கள் அல்லது பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தி யவர்கள். ஆரம்பத்தில் ஆயிரம் ரூபாயைகூட ஒருசேர பார்க்காதவர்கள். பலருக்கு ரூபாய் நோட் டுகளை எண்ண தெரிந்திருக்கவில்லை. கணக்கு எதுவும் தெரியாது. கணவரை இழந்தவர்கள் பலர். கணவரால் கைவிடப்பட்டவர்கள் பலர். கணிசமான பெண்களின் குடும்ப வருவாய் ஆண்களின் குடிப்பழக்கத் தால் தடைப்பட்டிருக்கிறது. அவர்களுக்கு எல்லாம் புதுவாழ்வுத் திட்டம் உண்மையிலேயே புதுவாழ்க்கையை அளித்திருக்கிறது.
முதல் ஆறு மாதங்கள் மட்டுமே இவர்கள் திட்டங்களை நிர்வகிக்கத் தடுமாறுகிறார்கள். பின்பு சுதாரித்துக்கொள்கிறார்கள். திட்டங்கள் அனைத்தும் சுயதொழிலாக இருப்பதால் தொழிலாளி மனோபாவம் இல்லாமல் சுதந்திரமாக செயல்படுகிறார்கள். சொந்த தொழில் மனோபாவம் தானாகவே எச்சரிக்கை உணர்வையும் பொறுப்பையும் அளிக்கிறது. நிதியை கவனமாக கையாள்கிறார்கள். பைசா பாக்கி இல்லாமல் கறாராக தவணைத் தொகையை வசூலிக்கிறார்கள். நாம் பார்த்த கிராமங்களிலேயே நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வறுமையிலிருந்து மீண்டிருக் கின்றன. வாழ்வாதாரம் பெற்றிருக்கின்றன.
பெரும் நிறுவனங்களுக்கு பல ஆயிரம் கோடி ரூபாயை கடன் தள்ளுபடி செய்யும் ஆட்சியாளர்களும் சுமார் 3.75 லட்சம் கோடி ரூபாயை வாராக்கடனாக வைத்திருக்கும் வங்கித் தலைவர்களும் இந்த எளிய பெண் களிடம் கற்றுக்கொள்ள ஏராளம் இருக்கிறது!
- பயணம் தொடரும்...
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago