ஆறுமுகசாமி ஆணையத்திற்கு மேலும் 3 வார காலம் அவகாசம்: தமிழக அரசுக்கு கடிதம்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையம் மேலும் 3 வார காலம் கூடுதல் அவகாசம் கோரியுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த ஆறுமுகசாமி ஆணையத்தை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதன்படி ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் விசாரணையை நடத்தி முடித்து, விசாரணை அறிக்கை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

இந்த ஆணையத்தின் விசாரணைக்கு 13-வது முறையாக வழங்கப்பட்ட கால அவகாசம் நாளையுடன் (ஆக.3) நிறைவடைகிறது. இந்நிலையில், ஆறுமுகசாமி ஆணையம் கூடுதலாக 3 வார கால அவகாசம் வழங்க கோரி தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

ஆணைய விசாரணை குறித்து எய்ம்ஸ் மருத்துவக்குழு ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே மேலும் 3 வார காலம் கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என்று ஆணையத்தின் தரப்பில் தமிழக அரசிடம் கால அவகாசம் கேட்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தமிழக அரசு வழங்கும் 3 வார கால அவகாசத்தில், எய்ம்ஸ் மருத்துவக்குழு ஆய்வின் அறிக்கையினைப் பெற்று, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து தனது முழுமையான விசாரணை அறிக்கையை தமிழக அரசிடம் சமர்ப்பிக்க ஆறுமுகசாமி ஆணையம் திட்டமிட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE