மதுரை: “மதுரை மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் எந்த வளர்ச்சி திட்டங்களும் செய்யவில்லை என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறுவது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதாகும்” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பட்டியலிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் மதுரை மூன்றுமாவடியில் நடைபெற்ற அரசு விழாவில் கடந்த 10 ஆண்டுகளில் மதுரையில் எந்த ஒரு பணியும் நடைபெறவில்லை என்று கூறியுள்ளார். அப்படி அவர் கூறியிருப்பது முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் கதையாக உள்ளது. இதை மதுரை மக்கள் யாரும் நம்ப மாட்டார்கள்.
குறிப்பாக ஜெயலலிதாவின் புனித அரசை தலைமை தாங்கி நடத்தி வந்த சாமானிய முதல்வராக சரித்திரம் படைத்த எடப்பாடியார் மதுரை மாவட்ட மக்களுக்கு தனி அக்கறையோடு பல்வேறு வளர்ச்சிகளை தந்துள்ளார். குறிப்பாக மதுரை மக்கள் மீது தனி அக்கறை காட்டி மக்களின் எதிர்கால நன்மை குறித்து பல்வேறு வரலாற்றுத் திட்டங்களை செயல்படுத்தி உள்ளார்.
தென் மாவட்ட மக்களின் கோரிக்கை ஏற்று எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரையில் உருவாக்கி கொடுத்தார். இதற்காக 223 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்தது எடப்பாடியார் தலைமையிலான அரசு ஆகும். மேலும் அங்கு 21 கோடியில் சாலை மற்றும் பல்வேறு பணிகளுக்கு ஒதுக்கப்பட்டன. மேலும் எய்ம்ஸ் கட்டிட பணிகள் விரைவில் தொடங்க உள்ளன.
» மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் தனியாரின் செயற்கை அருவிகள் அகற்றம்
» ஆக.4 வரை அதிக கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்கத் தடை
மதுரை மாவட்டத்தில் 40 ஆண்டுகளுக்கு எந்த குடிநீர் பிரச்சினை வரா வண்ணம் ரூ.1296 கோடி மதிப்பில் முல்லை பெரியார் லோயர் கேம்ப் வழியாக கூட்டு குடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்தார். அதேபோல் ரூ.30 கோடி மதிப்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் கூடுதல் கட்டிடத்தை உருவாக்கிக் கொடுத்தார்.
மதுரையில் சீர்மிகு திட்டத்தின் கீழ் 974.86 கோடி மதிப்பில் பல்வேறு திட்ட பணிகள் தொடங்கப்பட்டது. இதில் ரூ.167 கோடி மதிப்பில் பெரியார் பேருந்து நிலையம் மேம்படுத்தப்பட்டது அந்த முடிவுற்ற பணியை தற்போதைய முதல்வர் திறந்து வைத்தார் என்பதை சுட்டிக்காட்டுகிறேன். அதேபோல் மதுரை மாட்டுத்தாவணியில் ரூ.12 கோடியில் பழ சந்தை அமைத்துக் கொடுக்கப்பட்டது
புரதான சின்னங்கள் மற்றும் தெருவிளக்குளை மேம்படுத்த நிதி ஒதுக்கப்பட்டது மீனாட்சி அம்மன் கோயில் அருகே ரூ.42 கோடி மதிப்பில் பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைக்கும் திட்டத்தை தந்தது அதிமுக அரசு.
விளக்குத்தூண் மற்றும் பத்துதூண் பகுதிகளை புரணமைத்தல் மற்றும் திருமலை நாயக்கர் மகாலைச் சுற்றி உள்ள பகுதிகளை அழகுபடுத்தல் சுற்றுலாப் பயணிகளுக்காக தகவல் மையம், 4 மாசி வீதிகளில் 50 கோடி ரூபாய் மதிப்பில் சிறப்பு சாலை அமைக்கப்பட்டது. அதேபோல் தமுக்கம் மைதானத்தில் ரூ.47 கோடி மதிப்பில் கலாச்சார மையம் கட்டும் திட்டத்தை தந்தது ஜெயலலிதா அரசு.
வைகை ஆற்றின் குறுக்கே 4 தடுப்பணைகள், அதேபோல் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வண்ணமும், மழை காலங்களில், கரையோரங்களில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகாமல் இருக்க வைகைக் கரையோரங்களில் சாலையில் அமைத்தும், தடுப்பு சுவர் கட்டியும், பூங்காக்கள் ஆகியவற்றை ரூ.303 கோடியில் உருவாக்கப்பட்டது.
அதேபோல் ரூ.32 கோடி மதிப்பில் வைகை ஆற்றில் குறுக்கே இரண்டு பாலங்களும் கட்டப்பட்டது, ரூ.23 கோடியில் குருவிக்காரன் சாலையில் புதிய மேம்பாலம் கட்டப்பட்டது. அந்த பாலத்தை கூட தற்போதைய முதல்வர் தான் திறந்து வைத்தார்.
மதுரை நத்தம் சாலையில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் பறக்கும் பாலமும், ரூ.493 கோடி மதிப்பில் மதுரை வெளிவட்ட சாலை வாடிப்பட்டி முதல் திருமங்கலம் வரையும், ரூ.659 கோடி மதிப்பில் காரைக்குடி, மேலூர் நான்கு வழிச்சாலையும் போன்ற திட்டப்பணிகளை தந்தது அதிமுக அரசு.
மதுரை மாநகரில் மேம்பாலம் மற்றும் மைய தடுப்புச் சுவர் மற்றும் வடிகால் அமைக்கும் பணிகளுக்கு 52 கோடியாய் வழங்கியது அதிமுக அரசு, அதேபோல் 55 கோடி மதிப்பில் காளவாசல் சந்திப்பில் மேபாலம் கட்டித் தந்தது அதிமுக அரசு.
அதிமுக அரசால் பாண்டிக் கோவில் சந்திப்பில் புதிய மேம்பாலம் அமைக்கப்பட்டது. அதைக் கூட தற்போதைய முதல்வர் தான் திறந்து வைத்தார். மேலும், மதுரை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய தமிழகத்தில் முதல் முறையாக அண்டர் பாஸ் திட்டத்திற்கு மத்திய அரசிடம் ஒப்புதல் பெற்று அதற்காக திட்ட மதிப்பீட்டினையும் பெற்றுத் தந்தது அதிமுக அரசாகும்.
அதேபோல் மதுரை மாவட்ட மக்களின் நிர்வாக வசதிக்காக திருப்பரங்குன்றம், மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, கள்ளிக்குடி என 4 புதிய வட்டங்களையும், மேலூர் திருமங்கலம் என 2 கோட்டங்களையும் உருவாக்கி தந்தது ஜெயலலிதா அரசாகும்.
சுகாதார வசதிக்காக பழமை வாய்ந்த ராஜாஜி மருத்துவமனையில் ரூ.150 கோடி மதிப்பில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை உருவாக்கி தந்தது மட்டுமல்லாது, ராஜாஜி மருத்துவமனையில் ரூ.325 கோடி மதிப்பில் ஆபரேஷன் தியேட்டர் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வழங்கும் திட்டத்தை வழங்கியது ஜெயலலிதா அரசாகும்.
மேலும், அன்றைய முதல்வர் ஜெயலலிதா மதுரை மாநகராட்சி வளர்ச்சிக்காக கடந்த 2011 ஆம் ஆண்டு ரூ.250 கோடியை சிறப்பு நிதியாக வழங்கினார். மதுரை மாவட்டத்தில் 10 தொகுதி உள்ளது, கடந்த 10 ஆண்டுகளில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எந்த பாரபட்சமின்றி திட்டங்களை அதிமுக அரசு வழங்கியது. அதனால்தான் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் கூட திமுகவின் பல்வேறு அவதூறு பிரச்சாரங்களை மீறி மதுரை மக்கள் 5 தொகுதிகளை அதிமுகவிற்கு வழங்கினார்கள்.
குறிப்பாக மதுரை மாவட்டத்தில் கிராமப்புற இணைப்பு சாலைகள் எல்லாம் சிறப்பாக இருந்து வருகிறது. 100 சதவீத வளர்ச்சிகளை மக்களுக்கு எடப்பாடியார் வழங்கினார். குறிப்பாக குடிமராமத்து திட்டத்தின் மூலம் மதுரை மாவட்டத்தில் உள்ள ஏரி, கண்மாய் ஆகியவற்றை தூர்வாரப்பட்டதின் மூலம் இன்றைக்கு நிலத்தில் நீர் உயர்ந்துள்ளது.
அதிமுக அரசு செய்த பல ஆயிரம் கோடி வளர்ச்சி சாதனை திட்டங்களை எதுவும் செய்யவில்லை என்று கூறி முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியாது, பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டுவிட்டது என்று நினைக்கக் கூடாது.
மக்கள் பிரதிநிதியாக உள்ளவர்கள் உண்மை நிலையை மக்களுக்கு எடுத்துக் கூற வேண்டும். அரசியல் உள்நோக்கத்தோடு இருக்கக் கூடாது என்பதை நிதியமைச்சர் நன்கு அறிவார். அரசு பொறுப்பில் உள்ள நீங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி மக்களுக்கான திட்டங்கள் செய்ய வேண்டும். தற்போது தான் மதுரை மாநகராட்சிக்கு மாஸ்டர் பிளான் என்று கூறி உள்ளீர்கள். இதுவரை கடந்த ஒன்றரை ஆண்டு கால ஆட்சியில் மதுரை மாவட்ட வளர்ச்சிக்கு எந்த திட்டங்கள் செய்யப்பட்டது என்று பட்டியலிட்டு கூற முடியுமா?
ஆனால், இந்த ஒன்றரை ஆண்டு காலத்தில் கருணாநிதி பெயரில் நூலகம்தான் அமைக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த டிஜிட்டல் யுகத்தில் ஆன்லைன் மூலம் நூலகத்தை தங்கள் இல்லம் தேடி வரவழைக்கும் வேளையில் மக்கள் நூலகங்களை நாடுவார்கள் என்ற தோற்றத்தை உருவாக்கப்பட்டு வருகிறது.
தற்போதைய சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர், கனமழையால் உயிர் இழப்புகள், வீடு சேதாரம் என்று விரிவான அறிக்கை வெளியிட்டிருந்தார். குறிப்பாக அதில் வானிலை ஆராய்ச்சி மையம் அறிவிப்பு கொடுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பி உள்ளார். அரசுக்கு மக்கள் மீது அக்கறை இருக்குமானால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரண உதவி வழங்க மட்டுமல்ல, அமைச்சர்களும் ஆய்வு கூட்டத்தை நடத்தி அதிகாரிகளுக்கு உரிய வழிகாட்டுதலை வழங்கிட வேண்டும்.
வாய் சொல் வீராக இருப்பது வளர்ச்சியைத் தந்துவிடாது. மதுரை மாவட்டத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நீங்கள் தமிழகத்திற்கு நிதியை ஒதுக்கும் மந்திரியாக உள்ளீர்கள். மதுரை மாவட்ட மக்களின் வளர்ச்சிக்காக கடந்த ஒன்றரை ஆண்டுகளில் என்னென்ன சிறப்பு நிதியை கொண்டு வந்தீர்கள் என்று விளக்கம் சொன்னீர்கள் என்றால் உங்களைத் தேர்ந்தெடுத்த மக்கள் மட்டுமல்லாது நானும் மகிழ்ச்சி அடைவேன்'' என்று கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
57 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago