தமிழகத்தின் சுற்றுலாத் தலங்களில் கொல்லிமலைக்கு சிறப்பிடம் உள்ளது. மூலிகை வளம் நிறைந்த மலை என்பதே இதற்கு காரணமாகும். நாமக்கல், சேலம், திருச்சி ஆகிய மூன்று மாவட்ட எல்லையில் அமைந்துள்ள கொல்லிமலைக்கு ஆண்டுதோறும் தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் பயணிகளை மகிழ்விக்கும் வகையில், கொல்லிமலையில் பல்வேறு இடங்கள் உள்ளன.
இதில் குறிப்பிடத்தக்கது ஆகாய கங்கை நீர் வீழ்ச்சியாகும். ஏறத்தாழ 160 அடி உயரத்தில் இருந்து தண்ணீர் விழும் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியை, கீழிருந்து பார்க்கும்போது ஆகாயத்தைப் பிளந்து கொண்டு தண்ணீர் கொட்டுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும். இதனால், ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி என்றழைக்கப்படுகிறது. இந்த நீர் வீழ்ச்சிக்கு 1,050 படிக்கட்டுகள் இறங்கிச் செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு பலவிதமான மகிழ்வூட்டும் 'திகில்’ அனுபவங்கள் ஏற்படும் என்றால், அது மிகையில்லை.
அருவிக்கு செல்லும் படிக்கட்டுகள் சில இடங்களில் பெரிய பாறையின் அடியில் செல்வதே திகில் அனுபவத்துக்கான காரணமாகும். இந்த அருவிக்கு செல்ல முடியாத சுற்றுலாப் பயணிகள் அறப்பளீஸ்வரர் கோயில் அருகே உள்ள சிறிய அருவி மற்றும் மலையின் வெவ்வேறு இடங்களில் உள்ள நம் அருவி, மாசிலா அருவி ஆகியவற்றுக்கு வந்து செல்கின்றனர்.
இதுபோல் மலையில் பல நுாறு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள தாவரவியல் பூங்கா, வாசலுார்பட்டி படகு இல்லம், சீக்குப்பாறை என, மலையில் பல இடங்கள் சுற்றுலாப் பயணிகள் ரசிக்கும் வகையில் அமைந்துள்ளன. மலையின் மறுபுறம் திருச்சி மாவட்டத்துக்கு உட்பட்ட புளியஞ்சோலை மற்றொரு புகழ் வாய்ந்த சுற்றுலாத் தலமாகும். அங்கு அருவி, ஆறு மற்றும் சிறுவர் பூங்கா உள்ளிட்டவை அமைந்துள்ளது.
தவிர, கொல்லிமலைச் சாலையில் வாகனத்தில் பயணிப்பதும் சுற்றுலாப் பயணிகளுக்கு அலாதியான அனுபவத்தை ஏற்படுத்தும். மற்ற கோடை வாசஸ்தலங்களை ஒப்பிடுகையில் உயரம் குறைவான மலை என்றபோதிலும், மலையின் அடிவாரம் தொடங்கி உச்சி வரை 70 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன.
இதுபோன்ற பல்வேறு சிறப்புகள் மட்டுமின்றி தமிழகத்தின் கடையேழு வள்ளல்களில் ஒருவராக வரலாற்று ஆசிரியர்களால் குறிப்பிடப்படும் ஓரி மன்னன் கொல்லிமலையை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்து வந்தார். வில்வித்தையில் அவர் சிறந்து விளங்கியதால் வல்வில் ஓரி என அழைக்கப்பட்டார். தவிர, ஈகை (தானம்) செய்வதிலும் தன்னிகரற்று விளங்கி வந்தார். அவரது சிறப்பு குறித்து சங்ககால இலக்கியங்களான அகநானூறு, நற்றிணை உள்ளிட்டவற்றில் பாடல்கள் இடம் பெற்றுள்ளன.
இவரது சிறப்பை போற்றும் வகையில் ஆண்டுதோறும் ஆடி மாதமான ஆடி 17, 18 தேதிகளில் வல்வில் ஓரிக்கு கொல்லிமலையில் அரசு சார்பில் விழா நடத்தப்பட்டு வருகிறது. விழாவை முன்னிட்டு கொல்லிமலைக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்க ஆடி 18 அன்று ஒரு நாள் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. எனவே ஆடி 18 தினத்தன்று மாவட்டத்துக்கு உட்பட்ட மக்கள் ஏராளமானோர் கொல்லிமலைக்கு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
இந்தாண்டுக்கான விழா நேற்று தொடங்கியது. கரோனா தொற்று காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக விழா நடத்தப்படாமல் இருந்தது. இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தாண்டு விழா நடத்தப்படுவதால் ஆடி 18 அன்று கொல்லிமலைக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக மாவட்ட நிர்வாகம், காவல் துறையும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
சுவை மிகுந்த ‘நமரன்’ ரக வாழை
கிழக்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான கொல்லிமலை கடல் மட்டத்திலிருந்து 3,500 உயரம் கொண்டது. இங்கு காப்பி, மிளகு, பலா மற்றும் மரவள்ளி, வாழை, அண்ணாசி, நெல் போன்றவை பிரதான பயிரிடப்படுகின்றன. இங்கு விளையும் வாழை ‘நமரன்’ ரகம் என அழைக்கப்படுகிறது. இந்த ரக வாழை கொல்லிமலையில் மட்டுமே விளைவிக்கப்படுகிறது. சுவை மிகுந்த இந்தப் பழத்தை மலைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் வாங்கிச் செல்ல தவறுவதில்லை.
முக்கிய செய்திகள்
தமிழகம்
27 mins ago
தமிழகம்
39 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago