பெருந்துறை பெருமாள் கோயிலில் மின்னல் தாக்கியதில் கோபுர சிலைகள் சேதம்

By செய்திப்பிரிவு

ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு விடிய விடிய இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. பெருந்துறையில் மின்னல் தாக்கியதில் பெருமாள் கோயில் கோபுர சிலைகள் சேதமடைந்தன.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் பகலில் வெயில் வாட்டிய நிலையில், இரவு 9 மணிக்கு மேல் விடிய விடிய கனமழை பெய்தது. இதனால், ஈரோடு மாநகராட்சி பாரதி நகரில் உள்ள வீடுகளில் நள்ளிரவில் மழைநீர் புகுந்தது.

தகவல் அறிந்து அங்கு சென்ற மாநகராட்சி அலுவலர்கள் அங்கிருந்தவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இயந்திரங்கள் மூலம் கால்வாய் அடைப்புகள் எடுக்கப்பட்டு, மோட்டார் மூலம் மழை நீர் வெளியேற்றப்பட்டது. மேலும், அப்பகுதியில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

கோபி, கொடிவேரி, பெருந்துறை, சென்னிமலை, குண்டேரிப்பள்ளம், தாளவாடி, பவானிசாகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழையால் பாதிப்பு ஏற்பட்டது. தாளவாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சேதமடைந்த கட்டிடத்தில் மழை நீர் புகுந்ததால், நேற்று வகுப்புகள் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. கொடிவேரியில் மழை காரணமாக நேற்று சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படவில்லை.

பெருந்துறை பகுதியில் நேற்று முன்தினம் இரவு 10 மணி முதல் அதிகாலை 3 மணி வரை மழை பெய்தது. மழையின்போது, பெருந்துறை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோயில் கோபுர கலசத்தில் மின்னல் தாக்கியது. இதில், கலசத்தின் மேல் பகுதி சேதம் அடைந்ததுடன், கோபுரத்தில் உள்ள சுவாமி சிலைகள் உடைந்து கீழே விழுந்தன.

நேற்று காலை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் கோபுரத்தை பார்வையிட்டனர். மின்னல் தாக்கியதால் கோயிலில் நேற்று பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

நேற்று முன்தினம் மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் பெய்த மழை அளவு (மில்லிமீட்டரில்) விவரம்: பெருந்துறை 70, குண்டேரிபள்ளம் 49, கவுந்தப்பாடி, கொடிவேரி 40, கோபி 36, சென்னிமலை 32, சத்தியமங்கலம் 30, மொடக்குறிச்சி 22,பவானிசாகர், நம்பியூர் 17, ஈரோடு 11, தாளவாடி 6 மிமீ மழை பதிவானது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE