காவிரி டெல்டாவில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை கைவிடுக: அன்புமணி ராமதாஸ்

By செய்திப்பிரிவு

சென்னை: காவிரி டெல்டாவில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை கைவிட செய்ய வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழகத்தில் காவிரி பாசன மாவட்டங்களில் அறிவிக்கப்பட்ட எந்த ஹைட்ரோகார்பன் திட்டமும், விவசாயிகளின் எதிர்ப்புக்கு பணிந்து கைவிடப்படவில்லை என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது.

காவிரி பாசன மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட பிறகும், அதில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்துவதில் மத்திய அரசு உறுதியாக இருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினர்களின் வினாக்களுக்கு எழுத்து மூலம் விடையளித்த மத்திய பெட்ரோலியத்துறை இணையமைச்சர் ராமேஸ்வர் தெலி, தமிழகத்தின் காவிரி டெல்டாவில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட எந்த திட்டமும் கைவிடப்படவில்லை என்று தெரிவித்தார்.

தமிழகத்திற்கு அறிவிக்கப்பட்ட ஹைட்ரோ கார்பன் திட்டங்களின் பட்டியலையும் பெட்ரோலிய அமைச்சர் வெளியிட்டார்.

மத்திய அமைச்சர் வெளியிட்டுள்ள விவரங்களின்படி தமிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், புதுக்கோட்டை, புதுச்சேரியின் காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் மட்டும் மொத்தம் 31 ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இந்தத் திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்தப்பட்டால் காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் பாலைவனமாக மாறிவிடும். இத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்ட பிறகு காவிரி பாசன மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக இருக்காது; மாறாக பாதுகாக்கப்பட்ட ஹைட்ரோ கார்பன் மண்டலமாகவே இருக்கும்.

காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முதன்முதலில் 2015-ஆம் ஆண்டிலேயே வலியுறுத்தியது பாட்டாளி மக்கள் கட்சி தான். 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணிக்கு வைக்கப்பட்ட 10 நிபந்தனைகளில் அதை முதன்மையானதாக முன்வைத்து, 2020-ஆம் ஆண்டில் காவிரி பாசன பகுதிகளை பாதுகாக்கப் பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கச் செய்ததும் பாட்டாளி மக்கள் கட்சி தான்.

காவிரி பாசனப் பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கச் செய்ததன் முதன்மை நோக்கமே, டெல்டாவை சீரழிக்கும் தொழில்திட்டங்களை, குறிப்பாக ஹைட்ரோகார்பன் திட்டங்களை தடுத்து நிறுத்தி, தமிழகத்தின் நெற்களஞ்சியத்தை பாதுகாக்க வேண்டும் என்பது தான்.

ஆனால், இந்த நோக்கத்திற்கு எதிராகத் தான் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. காவிரி பாதுகாக்கப் பட்ட வேளாண் மண்டல சட்டத்தின்படி, அந்த மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் புதிய ஹைட்ரோ கார்பன் திட்டங்களை அறிவிக்கக்கூடாது. ஆனால், 2020-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் காவிரி பாசன மாவட்டங்களையொட்டிய பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு ஒப்பந்தம் வழங்கியது.

அதுமட்டுமின்றி, 2015-ஆம் ஆண்டில் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த கர்நாடகத்தைச் சேர்ந்த ஜெம் லேபரட்டரீஸ் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. அதற்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்ததைத் தொடர்ந்து ஜெம் நிறுவனம் அத்திட்டத்திலிருந்து விலகுவதாக அறிவித்தது. ஆனாலும், இன்று வரை நெடுவாசல் திட்டத்தை கைவிட மத்திய அரசு மறுத்து வருகிறது; அத்திட்டமும் தொடர்வதாக அறிவித்திருக்கிறது.

புவி வெப்பமயமாதல் காரணமாக உலகமே பேரழிவை எதிர்கொள்ளும் ஆபத்து இருக்கிறது. அதைத் தவிர்க்க படிம எரிபொருட்களின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை உலகெங்கும் எழுந்துள்ளது. இத்தகைய தருணத்தில் காவிரி படுகையை அழித்து விட்டு, ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு துடிப்பது நியாயமல்ல. இது மோசமான விளைவுகளை ஏற்படுத்தி விடும்.

காவிரி பாசன மாவட்டங்களில் 31 திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தாலும் கூட, அவற்றில் ஒன்று கூட இன்று வரை தொடங்கப்படவில்லை. அதனால், அவை அனைத்தும் புதிய திட்டங்களாகவே கருதப்பட வேண்டும். காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் சட்டத்தின்படி புதிய ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்த முடியாது என்பதால் அவை அனைத்தையும் கைவிடும்படி மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.

தமிழகத்தின் அனுமதி இல்லாமல் அந்தத் திட்டங்களை செயல்படுத்த முடியாது என்பதால், அவற்றுக்கு தமிழக அரசு ஒருபோதும் அனுமதி அளிக்கக்கூடாது.'' இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

13 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்