மின்சார கட்டணத்தை ஆண்டுக்கு 6% உயர்த்துவது கண்டனத்துக்குரியது: ராமதாஸ் 

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழக மக்களின் வருமானம் ஆண்டுக்கு 6% உயராதபோது மின்கட்டணம் 6% உயர்த்துவது மக்களை கசக்கிப் பிழியும் செயலாகும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: ''தமிழ்நாடு மின்சார வாரியம் மக்களுக்கு அடுத்தடுத்து ஷாக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது. நடப்பாண்டில் 52% வரை மின்கட்டண உயர்வை அறிவித்துள்ள வாரியம், இனி மின்சாரக் கட்டணத்தை ஆண்டுக்கு 6% உயர்த்த தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி கோரியுள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியம் இப்போது அறிவித்துள்ள மின் கட்டண உயர்விலிருந்து மக்கள் மீண்டு வரவே பல ஆண்டுகள் ஆகும். அவர்கள் மீது ஆண்டுக்கு ஆண்டு மின்சார கட்டண சுமை சுமத்தப்பட்டால் ஏழை மற்றும் நடுத்தர மக்களால் வாழவே முடியாத நிலை உருவாகி விடும்.

தமிழ்நாட்டில் 90% மக்களின் வருமானம் ஆண்டுக்கு 6% உயர்வதில்லை; மின்சார உற்பத்திச் செலவும் ஆண்டுக்கு 6% உயர்வதில்லை. அவ்வாறு இருக்கும் போது நுகர்வோர் விலைக் குறியீட்டை காரணம் காட்டி மின்சார கட்டணத்தை ஆண்டுக்கு 6% உயர்த்துவது மக்களை கசக்கிப் பிழியும் செயலாகும்.

நுகர்வோர் விலைக்குறியீடு என்பது சந்தை நிலவரத்தை மதிப்பிடுவதற்கான குறியீடு ஆகும். அதை மின்சாரக் கட்டணத்திற்கும் பொருத்த மின்வாரியம் லாபநோக்கம் கொண்ட கார்ப்பரேட் நிறுவனம் அல்ல. எனவே, ஆண்டு தோறும் மின்சாரக் கட்டணத்தை உயர்த்தும் முடிவை கைவிட வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE