மிகப்பெரிய பின்னடைவை சந்திக்கும் நிலை ஏற்படும் என்பதால் மின்கட்டண உயர்வை அரசு திரும்பப் பெற வேண்டும்: தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கம் வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

சென்னை: தற்போது அறிவிக்கப்பட்டுள்ள மின் கட்டணத் திருத்தங்களை ரத்து செய்ய வேண்டும் என்றுதமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கம் (டான்ஸ்டியா) வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து டான்ஸ்டியா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு கடந்த 14 மாதங்களில் குறு மற்றும் சிறு தொழிற்சாலைகளின் மறுவாழ்வுக்காகவும், பொருளாதார முன்னேற்றத்துக்காகவும் பல்வேறு சலுகைத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதற்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

தற்போது தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மானக் கழகம் மற்றும் தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் ஆகியவை அறிவித்துள்ள மின் கட்டணத் திருத்தங்கள் அனைத்து தொழில்முனைவோர், மின் நுகர்வோர்களை மிகப்பெரிய அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உச்ச மின் நுகர்வு நேரங்களுக்காக கூடுதலாக 20 சதவீத மின் கட்டணம் என்பது 25 சதவீதமாக உயர்த்த அறிவிப்பு வந்துள்ளது.

சிறு மற்றும் குறுந்தொழில்களுக்கு யூனிட்டுக்கு 50 காசுகளும், தாழ்வழுத்த தொழிற்சாலைகளுக்கு யூனிட் ஒன்றுக்கு ரூ.1.15-ம்,உயர் மின்னழுத்த தொழிற்சாலைகளுக்கு ஒரு யூனிட்டுக்கு 40 காசுகளும் உயர்வதால் உற்பத்தி செலவு அதிகரித்து தொழில் நிறுவனங்களில் உற்பத்தியாகும் அனைத்து பொருட்களும் பல மடங்கு விலை அதிகரிக்கும். இதனால் மற்ற மாநில உற்பத்திப் பொருட்களுடன் போட்டியிட முடியாமல் தமிழக நிறுவனங்கள் மிகப் பெரிய பின்னடைவை சந்திக்கும் நிலை உருவாகிவிடும்.

தற்போது ஒரு கிலோவாட் மின்சார இணைப்புக்கு நிரந்தரகட்டணமாக ரூ.350 வசூலிக்கப்பட்டு வருவதை ரூ.600 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளதால் தொழில் நிறுவனங்கள் செயல்பட்டாலும், செயல்படாவிட்டாலும் 71 சதவீத கூடுதல் கட்டணத்தை செலுத்தியே ஆக வேண்டும்.

மேலும், அடுத்த 4 ஆண்டுகளுக்கு ஒவ்வோர் ஆண்டும் 6 சதவீத அடிப்படை மின்கட்டணம் தொடர்ந்து உயர்த்தப்படும் என்றஅறிவிப்பு சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு பெருத்த அதிர்ச்சியைத் தருகிறது.

எனவே தமிழக முதல்வர் கருணை உள்ளத்துடன் இந்த மின் கட்டண உயர்வு அறிவிப்புகளை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE