கோவை மாவட்டத்தில் ஓடந்துறை ஒரு வித்தியாசமான கிராமம். அடிக்கடி அரசு அதிகாரிகளுடன் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் வண்டியைக் கட்டிக்கொண்டு வந்துவிடுகிறார்கள். உள்ளாட்சி நிர்வாகம் குறித்து பயிற்சிப் பட்டறைகள், கருத்தரங்குகள் களை கட்டுகின்றன. ஒரு கண்காட்சிபோல காட்சியளிக்கிறது ஓடந்துறை. ஆனால், இந்தக் கண்காட்சிக்கு பார்வையாளர் கட்டணம் உண்டு. உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பார்வையிட்டால் ரூ.1,000 கட்டணம் செலுத்த வேண்டும். வெளிநாட்டு ஆய்வாளர்களுக்கு கட்டணம் தனி. ஆய்வு மாணவர்களுக்கு இலவசம். கடந்த 10 ஆண்டுகளில் தனது கிராமத்துக்காக விதவிதமாக பணத்தை சேமித்து வருகிறார் பஞ்சாயத்துத் தலைவி லிங்கம்மாள். அத்தனையும் ஆச்சர்ய ரகங்கள்!
பார்வையாளர் கட்டணம் உண்டு
“அடிக்கடி யாராச்சும் வந்துப் போயிட்டே இருப்பாங்க. நாங்களும் அசராம சுத்திக்காட்டுவோமுங்க. ஒரு பக்கம் சந்தோஷமா இருந்தாலும் ஒவ்வொரு முறையும் வரவேற்பு, டீ, காபி, டிபன்னு செலவு கூடிக்கிட்டேப் போச்சுங்க. ஒருகட்டத்துல அது தப்புன்னு தோணுச்சு. ஏன்னா, அது மக்கள் பணம். கிராமத்து ஜனங்க கஷ்டப்பட்டு வியர்வை சிந்தி கட்டுற வரிப்பணம். அப்பதான், ஏன் வர்றவங்ககிட்டேயே பணம் வசூல் பண்ணக்கூடாதுன்னு தோணுச்சுங்க. நாம ஊட்டிக்குப் போனா கட்டணம் வசூலிக்கிறாங்க. கோயமுத்தூருல கண்காட்சிக்கு போனாக்கூட கட்ட ணம் வசூலிக்கிறாங்க. இங்கே நம்மளைத் தேடி வர்றாங்க. நாமளும் அவங்களுக்கு உபயோகமா நெறைய கத்துத் தர்றோம். நாம வசூலிச்சா என்னன்னு நெனைச்சேனுங்க. ஏனுங்க, நீங்களே சொல்லுங்க தப்பாங்க?’’ - வெள்ளந்தியாக தெரிந்தாலும் விபர மாகவே பேசுகிறார் லிங்கம்மாள். பலமாகவே தலையாட்டினோம்.
இப்படி வந்த கையிருப்பு உபரி நிதி மட்டும் பல லட்சங்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசு அனைத்து கிராமப் பஞ்சாயத்துத் தலைவர்களையும் திரட்டி இவர்கள் கிராமத்துக்கு அனுப்பியது. அனை வருக்கும் உள்ளாட்சி நிர்வாகம் குறித்து லிங்கம்மாளும் முன்னாள் பஞ்சாயத்துத் தலைவரும் அவரது கணவருமான சண்முகமும் பாடம் எடுத்திருக்கிறார்கள். அன்றைய தினம் மட்டும் வசூலான பார்வையாளர் கட்டணம் ரூ.1,65,000.
ஒரு கிராமப் பஞ்சாயத்து தனது வரிகளை 100 % வசூலித்தால் தமிழக அரசு அதற்கு இணையாக மூன்று மடங்கு ஊக்கத் தொகை வழங்குகிறது. ஊர் மக்களிடம் பேசினார் லிங்கம்மாள். அரசுக்கு முழுமையாக வரி செலுத்த வேண்டிய அவசியத்தை விளக்கினார். சிறப்பு முகாம்கள் நடத்தினார். வீட்டு வரி, கடை வரி, குடிநீர் வரி, தொழில் வரி, வரைபட அங்கீகாரக் கட்டணம் என்று 100 % வரியை வசூலித்தார். ரூ.20 ஆயிரமாக இருந்த வரி வருவாய் ரூ.1.75 லட்சமாக உயர்ந்தது. அதற்கு ஈடாக ரூ.5.25 லட்சம் ஊக்கத் தொகை பெற்றார்.
மறுஆண்டு 3.5 லட்சம் வரி வசூலித்தார். ஈடாக 10.5 லட்சம் ஊக்கத் தொகை பெற்றார். சரி, இந்தத் தொகையை எல்லாம் என்ன செய்கிறார்கள்?
“எங்க கிராமத்துல யாரும் வெளியே வட்டிக்கு கடன் வாங்குறதில்லைங்க. கிராமத்துல இருக்குற ஒவ்வொரு வாக்காளருக்கும் கிராமப் பஞ் சாயத்தே கடன் வழங்குது. ஒரு ரூபா வட்டிங்க. கடன் பெறுவதற்கு ரெண்டு தகுதி வேணுமுங்க. தகுந்த காரணம் இருக்கோணும். பழைய பாக்கி இருக்கக் கூடாது.
மருத்துவச் செலவு, பிரசவ செலவு, கல்விக் கட்டணம், சிறு கடை வைக்க கடன் தர்றோமுங்க. கல்யாணம், காது குத்து, நல்லது, கெட்டதுகளுக்கும் கடன் உண்டுங்க. ஆயிரம் ரூபாய் தொடங்கி 50 ஆயிரம் ரூபாய் வரைக்கும் கொடுத்திருக்கோம்” என்கிறார். கொடுக்கும் தொகைக்கு எழுதி வாங்குவது கிடையாது. சரியான காரணமாக இருந்தால் உடனே பணம் தருகிறார்கள். பதிவேட்டில் தவணைத் தொகை வரவு வைக்கப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளாக நடந்துவரும் இந்தத் திட்டத்தில் வராக்கடன் என்கிற பேச்சுக்கே இடம் இல்லை.
அனைவருக்கும் சொந்த வீடு!
இங்கிருக்கும் பழங்குடியினர் காலம் காலமாக தனியார் தோட் டங்களில் கொத்தடிமைகள் போல இருந்திருக்கிறார்கள். அவர்களுக் கென நிரந்தர வசிப்பிடம் கிடை யாது. அவர்களுக்கு தனியார் தோட்ட முதலாளிகளிடம் போராடி நிலத்தைப் பெற்று வீடுகள் கட்டிக்கொடுத் திருக்கிறார் லிங்கம்மாள். தனியார் தோட்ட நிறுவனங்களிடம் குறிப்பிட்ட அளவுக்கு அதிகமாக தரிசு நிலம் இருந்தால் அதனை அந்த கிராமப் பஞ்சாயத்து கையகப்படுத்திக்கொள் ளலாம். இதனை அறிந்த லிங்கம் மாள் ஆறு ஏக்கர் நிலத்தை கையகப் படுத்தினார். முதலாளிகள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அவற்றையும் எதிர்கொண்டு வெற்றிப் பெற்றார் லிங்கம்மாள். அங்கு பழங்குடி யினருக்கு 250 வீடுகள் கட்டிக்கொடுக் கப்பட்டன.
இவை தவிர வினோபாஜி நகரில் 101 பசுமை வீடுகள் சோலார் மின் தொழில்நுட்பத்துடன் கட்டிக்கொடுக் கப்பட்டுள்ளன. ஒரே இடத்தில் 101 பசுமை வீடுகள் கட்டிக்கொடுக்கப் பட்டிருக்கும் தமிழகத்தின் ஒரே பஞ்சாயத்து ஓடந்துறை மட்டுமே. இதிலும் ஒரு சிறப்பு உண்டு. தமிழகம் முழுவதுமே பசுமை வீடு கள் கட்டிக்கொடுக்கப்பட்டு வரு கின்றன. ஆனால், அதில் பயன்பெற அடிப்படை தகுதியாக சொந்த நிலம் வைத்திருக்க வேண்டும். இங்கு நிலம் இல்லாதவர்களுக்கு நிலத் துடன் வீட்டை சொந்தமாக்கிக் கொடுத் திருக்கிறார் லிங்கம்மாள்.
இங்கே அரசுக்கு சொந்தமான பூமிதான நிலம் 3.22 ஏக்கர் இருந்தி ருக்கிறது. வருவாய் துறையிடம் பேசிய வர், கிராம சபை தீர்மானம் மூலம் கிராமப் பஞ்சாயத்துக்கு அந்த நிலத்தை மாற்றியவர், அங்கு வீடுகளை கட்டியிருக்கிறார். “கிராமத்துல இருக் குற மொத்தப் பேருக்குமே சொந்த வீடு இருக்கு. அதுல பாதி வீடுகள் சர்க்கார் வீடுங்க. வாடகை வீடுங்கிற கலாச்சாரமே இங்கே கெடையாதுங்க” என்கிறார் லிங்கம்மாள்.
பாடம் கற்கும் உலக நாடுகள்!
இவை மட்டுமல்ல... 100% மாண வர்கள் கல்வி பெறுகிறார்கள். இடை நின்ற மாணவர் ஒருவர்கூட கிடையாது. மின்சாரத்தை மிச்சப்படுத்தும் சோலார் தெருவிளக்குகள், எல்.இ.டி. விளக்குகள் ஜொலிக்கின்றன. ஒவ்வொரு வீட்டுக்கும் சுத்திகரிக்கப் பட்ட குடிநீர் கிடைக்கிறது. தூய்மை யாக பளிச்சிடுகின்றன தெருக்கள். இதற்காக மத்திய, மாநில மற்றும் உலக நாடுகள் அளித்திருக்கும் விருதுகள் கிராமப் பஞ்சாயத்து அலு வலகத்தை அலங்கரிக்கின்றன.
ஒடந்துறையை ஆய்வு செய்யும் உலக வங்கி இயக்குநர்.
வாஷிங்டனிலிருந்து உலக வங்கி இயக்குநர் தலைமையிலான குழு ஓடந்துறையை ஆய்வு செய் திருக்கிறது. ஜெர்மனி, ஜப்பான், பிரான்ஸ் ஆகிய வளர்ந்த நாடுகளின் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இங்கே வந்து பாடம் கற்றுக்கொண்டிருக்கிறார்கள். மின்சார உற்பத்தி மற்றும் தொகுப்பு வீடுகளை பார்வையிட்ட ஆப்பிரிக்க நாடுகளின் அமைச்சர்கள் தங்கள் நாட்டில் இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்தியிருக்கிறார்கள்.
ராஜிவ்காந்தி தேசிய மக்கள் பங்க ளிப்பு குடிநீர் திட்டம் அறிமுகமான போது முதன்முதலில் மக்கள் பங்க ளிப்பு நிதியைக் கொடுத்தது ஓடந் துறை பஞ்சாயத்து. அதனை கவுர விக்கும் வகையில் மத்திய அரசு ஓடந் துறையில் வைத்தே தேசிய அளவி லான அந்தத் திட்டத்தின் தொடக்க விழாவை நடத்தியது. தொடர்ந்து டெல்லியில் நடந்த அந்த குடிநீர் திட்ட தேசிய மாநாட்டில் உரையாற்றி னார் லிங்கம்மாள். சிக்கிம், கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களின் அரசு செயலர்கள் ஓடந்துறையை வந்து பார்வையிட்டுச் சென்றிருக்கிறார்கள். சென்னை அண்ணா மேலாண்மை யகத்தில் பேரூராட்சி தலைவர்கள் மாநாட்டில் உரையாற்றியிருக்கிறார் கிராமப் பஞ்சாயத்து தலைவர் லிங்கம்மாள்.
இன்னும் நிறைய இருக்கிறது. ஒருமுறை நேரில் சென்று பாருங்கள். உள்ளாட்சி என்னும் மக்கள் அதிகாரத்தின் மகிமை புரியும்!
லிங்கம்மாள்
படங்கள்: ஜெ.மனோகரன்
(பயணம் தொடரும்...)
முக்கிய செய்திகள்
தமிழகம்
15 mins ago
தமிழகம்
39 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago