மழையை  சமாளிக்க முடியாமல் தடுமாறும் திமுக அரசு: இபிஎஸ் விமர்சனம்

By செய்திப்பிரிவு

சென்னை: திமுக அரசு தற்போது தமிழகத்தில் பெய்து வரும் மழை சமாளிக்க முடியாமல் தடுமாறுவதாக அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தின் பல மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று கடந்த வியாழன் (28.7.2022) அன்றே, சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்திருந்தது. அதே போல், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மாவட்டங்கள் மற்றும் தென்மாவட்டங்களில் மழை பெய்திருக்கிறது.

நான் பலமுறை சுட்டிக்காட்டிய பிறகும், இந்த விடியா அரசின் உணவுத் துறை, விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்த நெல்மூட்டைகளை சரியானபடி பாதுகாப்பாக குடோன்களில் வைக்காததாலும், தார்பாய்கள் கொண்டு மூடாததாலும், தற்போது பெய்த இரண்டு மூன்று நாட்கள் மழையிலேயே, சுமார் ஐந்தாயிரம் நெல் மூட்டைகளுக்கு மேல் பாதிக்கப்பட்டு, முளைவிட்டு இருந்தது பெரும்பாலான ஊடகங்களிலும், நாளிதழ்களிலும், சமூக வலைதளங்களிலும் செய்திகளாக வெளிவந்துள்ளன.

ஏற்கெனவே, இந்திய உணவுக் கழகம், தமிழ் நாடு சிவில் சப்ளைஸ் நிறுவனம் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட நெல்மூட்டைகள் மழையில் நனைந்து, அவை அரவை ஆலைகளில் அரிசிகளாக மாற்றப்படும்போது, கரும் பழுப்பு நிறமாக மிகவும் தரம் குறைந்து கால்நடைகள் கூட உண்ணுவதற்கு லாயக்கற்றதாக உள்ளது என்று சான்று அளித்துள்ளனர்.

நான், இந்த விடியா திமுக ஆட்சியில் நடைபெறும் தவறுகளை சுட்டிக்காட்டும் போதெல்லாம், இந்த விடியா அரசின் அமைச்சர்கள் எனது புகார்களுக்கு சப்பைக்கட்டு கட்டி பதில் கொடுக்கும் வேலையில் ஈடுபடுவதை விட்டுவிட்டு, பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் ஆய்வு செய்வது, தேவைப்படும் இடங்களில் நெல் மூட்டைகளை இருப்பு வைப்பதற்கு குடோன் வசதிகளை ஏற்படுத்துவது மற்றும் நெல் மூட்டைகளை மூடுவதற்குத் தேவையான தார்பாய்களை வாங்குவது போன்ற வேலைகளில் ஈடுபட்டிருந்தால், கடந்த சில நாட்களில் பெய்த மழையில் மீண்டும் கொள்முதல் செய்யப்பட்ட நெல்மூட்டைகள் முளைத்து சேதமடைந்திருக்காது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வைக்கப்பட்டிருந்த நெல்மூட்டைகள் தற்போதைய மழையால் சேதமடைந்துள்ளன. மேலும், இங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான நெல் மூட்டைகள் சேதமடைந்துள்ளன. தஞ்சாவூர் மாவட்டத்தில் பல பகுதிகளில் கடந்த வாரத்தில் இரவு நேரங்களில் 17 சென்டி மீட்டர் அளவிற்கு மழை பதிவாகியுள்ளது. முன்னைப்பட்டியில் அமைந்துள்ள திறந்த வெளி சேமிப்புக் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த பல்லாயிரக்கணக்கான நெல் மூட்டைகளில், ஆயிரக்கணக்கான மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளன.

இது தவிர, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, விருதுநகர் உள்ளிட்ட பல மாவட்டங்களில், கடந்த வாரத்தில் பெய்த மழையினால் விவசாய நிலங்களில் பயிர்கள் தண்ணீரால் சூழப்பட்டு பாதிப்படைந்துள்ளது. ஆனால், இதுவரை அமைச்சர் பெருமக்களோ, வேளாண் அதிகாரிகளோ, வருவாய்த் துறையினரோ பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் பார்வையிட்டு சேத மதிப்பைக் கணக்கெடுக்கவில்லை என்றும், பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் நிவாரணம் பெறவதற்கான எவ்வித முயற்சிகளிலும் விடியா திமுக அரசு ஈடுபடவில்லை என்றும், நெல் கொள்முதல் நிலையங்களைத் திறந்துவைக்கக் கோரியதையும் இந்த விடியா அரசு நிறைவேற்றவில்லை என்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மிகுந்த கவலையுடன் செய்தியாளர்களிடம் தங்கள் குறைகளைத் தெரிவித்து வருகின்றனர்.

மதுரை மாவட்டம் முழுவதிலும் 30.7.2022 அன்று, தொடர்ச்சியாக 3 மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. இதனால் ஆங்காங்கே மழை நீரானது வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக, உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. பார்வதி என்ற கோயில் யானையையும் மழை நீர் சூழ்ந்துள்ளது. நீரில் மூழ்கிய நிலையில் யானையை அழைத்துச்சென்ற காட்சிகளும் ஊடகங்களில் காட்டப்பட்டன.

மதுரையில் கனமழை காரணமாக, ஆண்டாள்புரம், ஜெய்ஹிந்புரம், மேலபெருமாள் மேஸ்திரி வீதி ஆகிய இடங்களில் 4 பேர் பலியாகி உள்ளனர். கனமழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி நிலையம் முன்கூட்டியே எச்சரித்திருந்தும், இந்த விடியா அரசும், வருவாய்த் துறையும், மாவட்ட நிர்வாகமும் எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் எடுக்காததால், இதுபோன்ற அவலங்கள் நிகழ்ந்துள்ளன.

மழைக் காலங்களில் அம்மாவின் ஆட்சியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதால் பெரும் பாதிப்புகள் அப்போது தவிர்க்கப்பட்டன. மேலும், உடனடியாக அமைச்சர்கள் களத்தில் இறங்கி பாதிப்புகளை சீர்செய்யும் பணியிலும் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, உடனடியாக நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

குறிப்பாக, உயிரிழந்தவர்களுக்கு பேரிடர் நிவாரண நிதியில் இருந்து 10 லட்சம் ரூபாய் வரை வழங்கப்பட்டுள்ளது. தவிக்கும் அப்பாவி மக்களை வௌளத்தில் மூழ்க விட்டுவிட்டு, தன்னிலை மறந்து விளம்பரங்களில் தங்களை மூழ்கடித்துக் கொண்டிருக்கும் இந்த விடியா ஆட்சியாளர்களை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆட்சியில் இருப்போர் மக்களின் துன்பத்தைப் போக்குவார்கள் என்ற நம்பிக்கை அற்றுப் போய்விட்டது. தொடர் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அடலேறுகள் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் உடனடியாக உதவ வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

விடியா திமுக அரசின் முதல்வர் மு.க.ஸ்டாலின் ``போட்டோ ஷூட்’’ நடத்தி, தன்னை முன்னிலைப்படுத்தி விளம்பரம் செய்வதில் காட்டும் அக்கறையை, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உடனடியாக அமைச்சர்களையும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும் அனுப்பி வைத்து, மக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதில் முனைப்பு காட்ட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்