பிரியாணித் திருவிழாக்களில் இனி மாட்டிறைச்சி தவிர்க்கப்படக் கூடாது: ஆதி திராவிடர் ஆணையம் உத்தரவு

By செய்திப்பிரிவு

சென்னை: ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் மாட்டிறைச்சி தடை செய்யப்பட்டது தொடர்பான விவகாரத்தில், பிரியாணித் திருவிழாக்களில் மாட்டிறைச்சி பிரியாணி தவிர்க்கப்படக் கூடாது என்று ஆதி திராவிடர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் புவிசார் குறியீடு பெறும் நோக்கில் மே 13,14,15 ஆகிய மூன்று நாட்களில், "ஆம்பூர் பிரியாணி திருவிழா 2022" நடைபெறும் என்று திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர், திட்ட இயக்குநர், துணை ஆட்சியர், வட்டாட்சியர், நகர மன்றத் தலைவர்கள், ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள், பேரூராட்சித் தலைவர்கள் உட்படப் பலர் பங்கேற்றனர்.

இதில் பேசிய மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா, "ஆம்பூரில் நடைபெறும் பிரியாணி திருவிழாவில் "பீஃப் பிரியாணி" தவிர அனைத்து வகையான பிரியாணி வகைகளும் கிடைக்கும் என்று தெரிவித்தார். இதற்கு பல அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும், மாவட்ட நிர்வாகம் நடத்தும் பிரியாணி திருவிழாவுக்கு எதிரிலேயே பீஃப் பிரியாணி கடைகளை நடத்துவோம் என்றும் அறிவித்தன.

இது தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொழிலாளர் விடுதலை முன்னணியின் மாநிலத் துணைச் செயலாளர் சி.ஓம்பிரகாசம், தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையத்திற்கு 12.5.2022 அன்று கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அதில் "ஆம்பூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் வசித்து வருகிறோம். எங்களின் முக்கிய உணவாகிய மாட்டிறைச்சியை அரசு நடத்தும் விழாவில் அனுமதிக்க மாட்டோம் என்று எங்கள் மீது உணவுத் தீண்டாமையை அதிகாரிகள் நிகழ்த்துகின்றனர்.

மட்டன் மற்றும் சிக்கன் சாப்பிடாத - பீஃப் மட்டுமே சாப்பிடக்கூடிய - எங்களைப் போன்றவர்கள் அவ்விழாவில் பங்கேற்க முடியாத சூழலை - தீண்டாமையை ஒழிக்க வேண்டிய - அரசு அதிகாரிகளே உருவாக்குகிறார்கள். இது எங்கள் மீது நிகழ்த்தப்பட்ட உளவியல் ரீதியான வன்முறையாகவே நாங்கள் உணர்கிறோம். மாண்புமிகு ஆணையம் என்னுடைய புகாரை ஏற்று மாட்டிறைச்சி பிரியாணியை விழாவில் அனுமதித்து நீதி வழங்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறியிருந்தார்.

இந்த பரிசீலித்த தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம், "அரசின் மாவட்ட நிர்வாகம் நடத்துகின்ற 20 வகையான பிரியாணி திருவிழாவில் மாட்டிறைச்சி பிரியாணியை மட்டும் புறக்கணித்து இருப்பது, அங்கு வசிக்கும் ஏறக்குறைய இரண்டு லட்சம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிரான அதிகாரபூர்வமான பாகுபாடாகும். இதற்கு ஏன் தங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது" என்று விளக்கம் கேட்டு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் அனுப்பியது.

இது மின்னஞ்சல் மூலம் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பப்பட்டவுடன் மழையைக் காரணம் காட்டி பிரியாணி திருவிழாவை ஒத்தி வைப்பதாக ஆட்சியர் அறிவித்தார். அதுமட்டுமல்ல, அடுத்த நாள் வெளிவந்த ஆங்கில "தி இந்து" (13.05.2022) நாளேடுக்கு அளித்த பேட்டியில், "பிரியாணி திருவிழாவை ஒத்திவைத்து விட்டதால் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையத்தின் உத்தரவு செல்லத்தக்கது அல்ல" என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்தப் புகாரை விசாரித்த ஆணையம் திருவிழாக்களில் பாகுபாடு கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. இது குறித்து ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்து நாளிதழில் மாவட்ட ஆட்சியரின் பேட்டி ஆணையத்தை அவமதிப்பதாக அமைந்துள்ளது. இதற்கென அவர் மீது தனி நடவடிக்கை மேற்கொள்ள முடியும் என்றாலும் ஒரு மாவட்டத்தின் தலைமை நிர்வாகப் பொறுப்பை அவர் வகிப்பதால் மக்கள் மத்தியில் அவருடைய மதிப்பு குறைந்து விடக்கூடாது என்ற அடிப்படையில் ஆணையம் அத்தகைய நடவடிக்கை எதையும் மேற்கொள்வதைத் தவிர்த்து விட்டது.

ஆணையத்தின் அறிவிக்கைக்கு 07.06.2022 அன்று பதில் அறிக்கை அனுப்பிய திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர், ஆணையம் தனது அறிவிக்கையில் குறிப்பிட்டிராத பன்றி இறைச்சியைப் பற்றி கருத்து தெரிவித்திருக்கிறார். பிரியாணி செய்வதற்காக பன்றி இறைச்சி எங்குமே பயன்படுத்தப்படுவதில்லை என்றாலும். ஆம்பூரில் உள்ள முஸ்லிம் மக்களின் ஆதரவைப் பெறுவதற்காக இத்தகையதொரு வாதத்தை ஆட்சியர் முன் வைத்திருந்தார். எனினும் அவர் எதிர்பார்த்த எந்த விளைவையும் அது ஏற்படுத்தவில்லை.

எது எப்படி இருப்பினும் சர்ச்சைக்குரிய பிரியாணி திருவிழாவில் மாவட்ட நிர்வாகம் சாதி ரீதியாக மக்களிடம் பாகுபாடு காட்டவில்லை என்ற ஆட்சியரின் பதிலை ஆணையம் ஏற்கிறது. திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரின் பதிலை ஆணையம் ஏற்றுக் கொண்டாலும், அரசு ஏற்பாடு செய்யக்கூடிய பிரியாணி திருவிழாவில் மாட்டிறைச்சி பிரியாணி தவிர்க்கப்படக் கூடாது என்பதையும், அப்படித் தவிர்த்தால் அது பாகுபாட்டுக்கு வழி வகுக்கும் என்பதையும் சுட்டிக்காட்டி, இனிவரும் காலங்களில் நடைபெறும் திருவிழாக்களில் மாவட்ட நிர்வாகம் பாகுபாட்டுக்கு வழிவகுக்கக் கூடாது என்ற உத்தரவை தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் பிறப்பிக்கிறது.

ஆணையத்தின் இவ்வுத்தரவு, தலைமைச் செயலர், உள்துறைச் செயலர் மற்றும் அனைத்து மாவட்டங்களில் உள்ள உயர் அதிகாரிகளுக்கும் அனுப்பப்படுகிறது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்