குமரியில் திருவள்ளுவர் சிலை பராமரிப்பு பணியில் தொய்வு: நவம்பருக்குள் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்களா?

By செய்திப்பிரிவு

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலைக்கு ரசாயன கலவை பூசும் பணி மழையாலும், சூறைக் காற்றாலும் தடைபடுகிறது. இதனால் திட்டமிட்டபடி இன்னும் 3 மாத காலத்துக்குள் இப்பணியை முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியின் அடையாள சின்னமாக கடல் நடுவே அமைந்துள்ள பாறையில் அமைக்கப்பட்டுள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறை ஆகியவை விளங்குகின்றன. உப்புக் காற்றால் திருவள்ளுவர் சிலை சேதமடையாமல் இருக்க 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை சுத்தப் படுத்தி, ரசாயன கலவை பூசுவது வழக்கம். கடைசியாக கடந்த 2017-ம் ஆண்டு ரசாயன கலவை பூசப் பட்டது. அதன் பிறகு கரோனா ஊரடங்கால் கடந்த ஆண்டு இப் பணியை மேற்கொள்ள முடியாமல் போனது.

ரூ.1 கோடி ஒதுக்கீடு

இந்நிலையில் திருவள்ளுவர் சிலைக்கு ரசாயன கலவை பூசுவ தற்கு தமிழக அரசு ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்தது. இப்பணி கடந்த ஜூன் மாதம் 5-ம் தேதி தொடங்கியது. நவம்பர் 1-ம் தேதிக்குள் இப்பணியை முடித்து 2-ம் தேதி முதல் திருவள்ளுவர் சிலையை சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதிக்கலாம் என திட்டமிடப்பட்டிருந்தது.

திருவள்ளுவர் சிலையில் படிந்துள்ள உப்பை அகற்றி சுத்தப்படுத்தி, ரசாயன கலவை பூசுவதற்கு ஏதுவாக முதலில் 145 அடி உயரத்தில் சாரம் அமைக்கும் பணி தொடங்கியது. உறுதி தன்மையுடன் சாரம் அமைப்பதற்கு இரும்பு கம்பிகள் பயன்படுத்தப்பட்டன. ஒரு மாத காலத்தில் இப்பணியை முடிக்க திட்டமிடப்பட்டது.

ஆனால் ஆரம்பித்த நாள் முதலே கடல் சீற்றம், மழை மற்றும் சூறைக்காற்று அதிகம் இருந்ததால் சாரம் அமைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது. ரசாயன கலவை பூசும் பணியை ஜூன் மாதம் முதல் அக்டோபர் மாதம் இறுதி வரை 5 மாத காலம் மேற்கொள்ள முடிவு செய்திருந்த நிலையில், சாரம் அமைக்கும் பணியே தற்போது தான் நிறைவடைந்துள்ளது.

நவம்பர் மாதத்தில் சபரிமலை பக்தர்கள் வருகை மற்றும் பண்டிகை காலம் என்பதால் அதற்குள் திருவள்ளுவர் சிலை பணியை முடிக்க திட்டமிட்டனர்.

இன்னும் 3 மாதமே உள்ள நிலையில், திருவள்ளுவர் சிலையில் உப்பு படிவத்தை அகற்றி சுத்தப்படுத்தி, பின்னர் சிலிக்கான் ரசாயன கலவை பூசும் பணியை மேற்கொள்வதில் சிக்கல் எழுந்துள்ளது.

பணிகளை விரைவுபடுத்து வதற்கான ஏற்பாடுகளை சுற்றுலா வளர்ச்சி கழகத்தினர் மேற்கொள்ள வேண்டும் என சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக அதிகாரிகள் கூறும்போது, ‘‘திருவள்ளுவர் சிலைக்கு ரசாயன கலவை பூச சாரம் அமைப்பது தான் மிகவும் கடினமான பணி. இப்பணி நிறைவடையும் நிலையை எட்டியுள்ளது. மழை உள்ளிட்ட இயற்கை சீற்றங்களால் இடையூறு ஏற்பட்டாலும் திட்டமிட்ட காலத்துக்குள் ரசாயன கலவை பூசும் பணி முடிக்கப்படும்’’ என்றனர்.

ஏற்கெனவே கடந்த 2017-ம் ஆண்டு திருவள்ளுவர் சிலைக்கு ரசாயன கலவை பூசும் பணி திட்டமிட்டதை விட 4 மாதம் தாமதமாகவே நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE